Skip to content

சொல் பொருள்

(வி) 1. பற்று, 2. வளை, 3. இழு 4. நெகிழ், நீக்கு,  5. அடித்துச்செல், 6. செய்வி,  7. மாட்டிக்கொள், சிக்கிக்கொள், 8. நாணேற்று, 9. முக, 10. கேள், 11. தணி, குறை,  12. அணை, 13. கலை, சிதறச்செய்,  14. செலுத்து, 15. பிரித்தெடு, கொய், பறி,  16. பெற்றுக்கொள்,  17. செறி, இணை, சேர், 18. அழி,  19. கவர், அகப்படுத்து, 20. அப்புறப்படுத்து, நீக்கு, அகற்று,

வாங்கு – தொரட்டி, தோட்டி

வாங்கு என்பது வளைந்த கத்தி கட்டப்பட்ட தொரட்டி (தோட்டி)

சொல் பொருள் விளக்கம்

வாங்கு என்பது வளைவுப் பொருளது. வாங்கு பிடித்தல் என்பது கணைகளுக்கு வளையம் போடுதலாகும். வாங்கு என்பது வளைந்த கத்தி கட்டப்பட்ட தொரட்டி (தோட்டி)க் கம்பைக் குறிப்பதாக மதுக்கூர் வட்டார வழக்கில் உள்ளது.

வாங்கு என்பது வளைவுப் பொருளது. வாங்கு பிடித்தல் என்பது கணைகளுக்கு வளையம் போடுதலாகும். வாங்கு என்பது வளைந்த கத்தி கட்டப்பட்ட தொரட்டி (தோட்டி)க் கம்பைக் குறிப்பதாக மதுக்கூர் வட்டார வழக்கில் உள்ளது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

grab, bend, draw, pull, make loose, remove, take away, drag, carry away, make others do, get entangled, string bow, draw, bail, hear, reduce, subside, embrace, disperse, scatter, send forth, shoot, separate, pluck, receive, be joined, destroy, seize, capture, remove, take away

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு – நற் 15/7,8

குற்றமற்ற கற்பினையுடைய இளையவள் ஒருத்தி தன் குழந்தையைப்
பேய் கைப்பற்றப் பறிகொடுத்ததைப் போல

கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/8-10

கடலில் மரக்கலம் கவிழ்ந்துவிட, கலங்கி எல்லாரும் கடலுக்குள் வீழ்ந்து
பலரும் பிடித்துக்கொள்ளும் ஒரு பலகை போல,
அவரவரும் பற்றி இழுக்க, நீ நின்றுகொண்டு முன்னும் பின்னும் அசையும் துன்பமான நிலையை

பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நார் உடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே – குறு 112/3-5

பெரிய களிறு வளைக்க வளைந்து நிலத்தில் படாத
பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது
காண்பாயாக! தோழி! அவர் நுகர்ந்த என் பெண்மை நலன்.

இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் – கலி 38/1

இமையமலையாகிய வில்லை வளைத்த, கங்கை தங்கும் சடைமுடியோனாகிய சிவன்

வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/1,2

மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,
அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை

தண்டு தழுவா தாவு நீர் வையையுள்
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க – பரி 11/106-108

ஓர் இளைஞன் வாழைத்தண்டைத் தழுவிக்கொண்டு பாய்ந்து வரும் நீரைக் கொண்ட வையை ஆற்றில்,
கரையினில் இருந்த கன்னி ஒருத்தியைக் கண்ட மாத்திரத்தில், விரையும் நீர் அவன் கைகளை நெகிழ்க்க,
அவன் நெஞ்சத்தை அவள் இழுக்க, நீண்ட வாழைமரத்தை வெள்ளம் அடித்துச் செல்ல,

நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல – கலி 8/1,2

நடுவுநிலைமையைத் துறந்து, அதனை அகற்றிப்போட்ட அருளற்ற அமைச்சன் வினை செய்வித்துக்கொள்ள
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல
– வினை வாங்குதல் – வினை செய்வித்துக்கோடல்; வேலை வாங்குதல் என வரும் உலக வழக்கும் நோக்குக
– நச்.உரை- பெ.விளக்கம்

ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம்
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/35,36

ஒருத்தியின் நெற்றியில் திலகமாய் சூடிக்கொண்டிருந்த தெரிந்தெடுத்த முத்துக்களைச் சேர்த்த முத்துவடம்
இன்னொருத்தியின் அழகு சிறந்த ஒளிரும் மகரக்குழையணிந்த காதினில் மாட்டிக்கொள்ள
– மா.இரா.உரை
– துடக்கிக்கொள்ளா நிற்க – நச்.உரை- துடக்கு – சிக்கவை

உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 170,171

இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்

கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/1-3

கல்லில் ஊறும் ஊற்றில் சேர்ந்துள்ள நீரைக் குழியிலிருந்து முற்றிலும் அற்றுப்போகுமாறு முகந்து,
கரிய சொரசொரப்பான நீண்ட கையை நீட்டி நீரைத் தாங்கிக்கொண்டு
பெரிய கையையுடைய யானை தன் பிடியை எதிர்கொண்டு ஓடும்

கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/4-7

காடு முற்றிலும் வெம்பிப்போன வறட்சி மிகுந்த பாலை நிலத்தில்,
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது –
– வாங்கு – காதில் வாங்கு – கேள், hear

கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் – கலி 134/4

மலையினை அடைந்த ஞாயிறு தன் கதிர்களை ஒடுக்கிக்கொண்டு மறைவதால்

பகல் செல
பல் கதிர் வாங்கிய படு_சுடர் அமையத்து – அகம் 213/11,12

பகற்பொழுது நீங்க
ஞாயிறு தனது பல கதிர்களையும் சுருக்கிய ஒளி மங்கும் நேரத்தே

பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை
முலை இடை வாங்கி முயங்கினன் – கலி 147/23,24

பலவான பொய்வாக்குறுதிகளைக் கொடுத்து, என்னைத் தேற்றித் தெளிவித்தவன், என்னை
முலை நடுவே அணைத்துத் தழுவினான்,

மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/3-5

மின்மினிகள் மொய்த்திருக்கும் முரிந்த இடத்தினையுடைய புற்றினை
இரும்பினைக் காய்ச்சி அடிக்குங்கால் சிதறும் பிதிர்போல அம் மின்மினிகள் ஒளிவிடக் கலைத்து
புற்றாஞ்சோற்றினைத் தோண்டியெடுக்கும் பெரிய கையினையுடைய கரடியேறு

வடியா பித்தை வன்கண் ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி
வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை – அகம் 161/2-4

கோதப்பெறாத மயிரினையுடைய கொடிய மறவர்
குதை அமைந்த அம்பினை முழுதும் இழுத்து விடுத்து
வழிச்செல்லும் புதியரைக் கொன்ற அச்சம் தோன்றும் கவர்ந்த நெறியில்

செம் வாய் சிறு கிளி சிதைய வாங்கி
பொறை மெலிந்திட்ட புன் புற பெரும் குரல் – அகம் 192/5,6

சிவந்த வாயினையுடைய சிறிய கிளி, தினை சிதையும்படி கொய்து
சுமக்கலாற்றாது போகட்ட புல்லிய புறத்தினையுடைய பெரிய கதிரினை

ஆளி நன்மான் அணங்கு உடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடும் தகை புலம்ப
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும் – அகம் 381/1-3

ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு
வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த
அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் பறித்து, குருந்தினை அருந்தும்

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 104-106

ஆரத்தைத் தாங்கிய அழகுடைய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற
சிவந்த வரிகளை வாங்கிக்கொண்ட, வலிமை மிக்க, வேலை எறிந்து,
வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில்
– வாங்கிய என்றார், அவ்வரி தோளளவும் வந்துகிடந்தமை தோன்ற – நச். உரை, விளக்கம்

ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/5,6

ஏழு ஊர்களிலுள்ள பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
உலையில் செறித்த துருத்தியைப் போல

கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும்
வெள்ளம் தரும் இ புனல் – பரி 10/69,70

இவ்வாறாகக் கள்வெறியுடன் காமவெறியையும் கலந்து கரைகளை உடைத்துச் செல்லும்
வெள்ளத்தைத் தருகின்றது வையையின் புதுப்புனல்;

பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ – கலி 56/24-26

மழைநீரின் எழும் மொக்குகள் என்று கூறும்படியாக, பெரியதாய் நிற்கும் உன் இளமையான முலைகள்,
மயிர் ஒழுகிய வரிகளையுடைய முன்கையையுடைய இளம்பெண்ணே! உன்னைக் கண்டவரின்
உயிரை வாங்கக் கூடியன என்பதனை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?

தும்பி தொடர் கவுள தும்பி தொடர் ஆட்டி
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார்
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் – பரி 19/30-32

மதம் உண்பதற்காக வண்டுகள் தொடர்ந்து வரும் கவுளையுடைய யானைகளை, காலில் சங்கிலியை ஆட்டி
கச்சை அணிந்த புரோசக்கயிற்றினால், அந்த யானைகளை வழியினின்றும் அகற்றி, மரத்தில் கட்டுவர்;
பெரிய மாலையை அணிந்த குதிரைகளை வழியைவிட்டு அகலும்படி அகற்றுவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *