சொல் பொருள்
(பெ) 1. இந்திரன், 2. சேர அரசன்,
சொல் பொருள் விளக்கம்
1. இந்திரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Indra, chera king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரை அகலத்தவனை வானவன் மகள் மாண் எழில் மலர் உண்கண் மட மொழியவர் உடன் சுற்றி கடி சுனையுள் குளித்து ஆடுநரும் – பரி 9/58-61 மலை போன்ற மார்பினையுடைய முருகப்பெருமானை, இந்திரன் மகளான தேவசேனையின் மாட்சிமை கொண்ட அழகால் மலர் போன்ற மையுண்ட கண்களையும் மடப்பமுடைய மொழியினையும் உடைய தோழியர் ஒன்றுசேர்ந்து சூழ்ந்துகொண்டு வள்ளியின் தோழியருக்கு அஞ்சி, மணங்கமழும் சுனையில் குளித்து ஆடுவோரும், வெல் போர் வானவன் கொல்லி மீமிசை – அகம் 33/14 போர் வெல்லும் சேரனது கொல்லிமலையினுச்சியில் வானவன் மறவன் வணங்கு வில் தட கை ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – அகம் 77/15,16 சேரன் படைத்தலைவனாகிய வளைந்த வில்லைப் பெரிய கையில் கொண்ட அமையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பான் இந்த வானவன் என்ற பெயர் அகம் 143, 159, 213, 309, 381, புறம் 39, 126 ஆகிய பாடல்களில் காணக்கிடக்கின்றது. ஏனைச் சங்க இலக்கியங்களில் இச் சொல் காணப்படவில்லை என்பது ஆய்வுக்குரியது. வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10 வில் கெழு தட கை வெல் போர் வானவன் அகம் 159/15 வெல் போர் வானவன் கொல்லி குட வரை – அகம் 213/15 பெரும் படை குதிரை நல் போர் வானவன் – அகம் 309/10 தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய – அகம் 381/15 இமயம் சூட்டிய ஏம விற்பொறி மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய – புறம் 39/16 – இந்த வானவரம்பன் ’ இமயம் சூட்டிய ஏம விற்பொறி ’என்னப்படுதலால், இந்தச் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆக இருக்கக்கூடும். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் தோற்றான் என இப்பாடல் குறிக்கிறது. சினம் மிகு தானை வானவன் குட கடல் பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி பிறர் கலம் செல்கலதனையேம் – புறம் 126/14-16 – இந்த வானவரம்பன் மேலைக்கடலில் பிற கப்பல்கள் செல்லாவண்ணம் தன் மரக்கலங்களை ஓட்டி வாணிகம் செய்த கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனாக இருக்கலாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்