சொல் பொருள்
1. (வி) 1. விவரி, விரிவாக எடுத்துரை, 2. தெளிவாகக் காட்டு, 3. பலர் அறியச்செய், 4. தெளிவாக்கு, 5. விளங்கச்செய்
2. (பெ) 1. ஒளிகொடுக்கும் சாதனம், 2. வெளிச்சம்
சொல் பொருள் விளக்கம்
விவரி, விரிவாக எடுத்துரை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
explain, explicate, show clearly, make something well known, illustrate, elucidate, make shine, lamp, light
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் – மலை 77-80 நல்லோர் கூடியிருக்கும் நாவால் (சிறந்தவற்றை)உரைக்கும் அவையில், (சொல்)வன்மையில்லாதவர் எனினும் (அவர்)தரப்பை மறைத்து, தம்மிடம் சென்றோரை, (தம் பொருளைச்)சொல்லிக் காட்டி, (திரும்பத் திரும்ப)சோர்வடையாமல் விவரித்து, நன்றாக நடத்தும் அவனுடைய அவைமக்களின் சீலத்தையும் அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றிய மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க தனியன் வந்து பனி அலை முனியான் – அகம் 272/4-6 அச்சம்தரும் பிளப்பாகிய குகைகளிலுள்ள அரிய இருளைப் போக்கிய மின் போல் விளங்கும் வேல், தான் செல்லும் நெறியினைக் காட்ட நம் தலைவன் தமியனாய் வந்து பனி அலைத்தலை வெறானாகி வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் பலர்வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி அரிய தந்து குடி அகற்றி பெரிய கற்று இசை விளக்கி முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பன் மீன் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி – மது 764-770 இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர் பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு, அரியவான பொருள்களைக் கொணர்ந்து (எல்லார்க்கும் கொடுத்து), குடிமக்களைப் பெருக்கி, பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து, கடல் நடுவே ஞாயிறு போன்றும், பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும், பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாக விளங்கி, ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி திங்கள் போல திசை விளக்கும்மே – திரு 96-98 ஒரு முகம். எஞ்சிய பொருள்களைச் (சான்றோர்)காவலுறும்படி ஆராய்ந்துணர்ந்து, திங்கள் போலத் திசைகளெல்லாவற்றையும் தெளிவாக்கி நிற்கும்; – திசைவிளக்குதலாவது, இறைப்பொருள் தனது வியாபகமெல்லாம் உயிர்கள் உணர்ந்து இன்புறுமாறு உணர்த்துதல் என்க – பொ.வே.சோ.உரை விளக்கம். மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும் – பதி 32/2 நாற்புறத்தையும் விளங்கச் செய்யும் நற்குணங்களும், நடுவுநிலைமையும் அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக – கலி 119/1 அகன்ற உலகத்தை வெளிச்சமாக்கும் தன் பல கதிர்களையே வாயாகக்கொண்டு அந்தி மாட்டிய நந்தா விளக்கின் - பட் 247 அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85 பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175 ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 317 இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42 பார்க்க : ஓதிமவிளக்கு பார்க்க : பாண்டில் பார்க்க : பாவைவிளக்கு காய் சின முன்பின் கடுங்கண் கூளியர் ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – மது 691,692 எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவர் (பகைவரின்)ஊரைச் சுடுகின்ற வெளிச்சத்தில் கொண்டுவந்த பசுத்திரளும் – ச.வே.சு.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்