Skip to content
வெருகு

வெருகு என்பது காட்டுப்பூனை

1. சொல் பொருள்

(பெ)காட்டுப்பூனை

2. சொல் பொருள் விளக்கம்

சங்க நூல்களில் வெருகைப் பற்றி வரும் முக்கியச் செய்தி அது மாலைக் காலத்தில் மங்கிய ஒளியில் காட்டருகே உள்ள ஊர்களில் வேலியோரத்திலும் மனையோரத்திலும் வீட்டுக் கோழிகளை வேட்டையாடுவதேயாகும் . தொல்காப்பிய மரபியலுரையில் பேராசிரியர் ‘ வெவ்வாய் வெருகு என்றதற்குக் கூறிய விளக்கம் வெருகு எவ்விலங்கு என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது .

“ வெவ்வாய் வெரு கென்றதனாற் படப்பை வேலியும் புதலும் பற்றி விடக்கிற்கு வேற்றுயிர் கொள்ளும் வெருகினை ” என்று பேராசிரியர் கூறிய விளக்கப்படி காணப்படும் விலங்கு காட்டுப் பூனையேயாகும் .-அகம் . 367 காட்டரண்களுக்கு அருகாமையில் இருந்த சிறிய ஊரில் மனையில் கதிரவன் மறையும் காலத்தில் வரகைக் கொட்டி வைத்திருந்த களஞ்சியக் கூட்டின் ஓரமாகக் காட்டுப் பூனை சேவற் கோழி அடையும் சமயத்தைப் பார்த்துக்கொண்டு காத்திருந்ததாக அகநானூறு ( 367 ) கூறுவது சங்கப் புலவர் கண்டே கூறிய செய்தி யாகும் என்பதில் ஐயமில்லை.

காட்டுப் பூனை வேலியில் வேட்டையாடும் செய்தி வருகின்றது . ஊரிலே இருந்த முதிய வேலியில் வேட்டையைத் தேடிக் கொண்டிருந்த காட்டுப் பூனையைக் கண்ட பெட்டைக் கோழி உயிர் நடுங்கி நாக்கு அடித்துக் கொண்டு அலற அச் சமயம் செத்தையைப் புடைத்துக் கொண்டிருந்த கைம்பெண் கைவிளக்கோடு வர அவ்விளக்கொளியில் சேவலைக் கண்டு அடங்கியது என்று கூறிய செய்தி உண்மையான செய்தியாகும்.

காட்டுப் பூனை வீட்டில் உள்ளோர் கண்களுக்கு எதிரேகூடச் சில சமயங்களில் கோழிகளைக் கவர்ந்து ஓடிவிடுமென்று விலங்கு நூலார் கூறுவர். வீட்டு வேலியில் மாலைக் காலத்தில் வெருகைக் கண்ட பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அழைத்துச் சேர்த்துக் கூட்டி வைத்துக் கொள்வதைக் குறுந்தொகை 139 ஆம் பாடல் கூறுகின்றது .

வெருகு
வெருகு

காட்டுப் பூனையின் உணவு எலி முதலிய சிறு விலங்குகளும் பறவைகளும் வீட்டுக் கோழிகளும் என்று விலங்கு நூலார் கூறுவர் . நடு இரவில் வீட்டு எலியைத் தேடி வந்த காட்டுப் பூனைக்கு சேவல் இரையாக அகப்பட்டதாக குறுந்தொகை ( 107 ) கூறுகின்றது . இச்செய்திகள் இயற்கையில் அன்றாடம் , கண்டதைச் சங்கப் புலவர்கள் பாடியதையே காட்டுகின்றது .காட்டுப் பூனைக்குக் கூர்த்த பார்வை உண்டு எனக் கூறுவர் . பார்வையாலேயே வேட்டையாடும் விலங்குகளில் காட்டுப் பூனை முக்கியமானது .

இரவிலும் கண்கள் நன்கு தெரியும் . காட்டுப் பூனை ஓசையின்றி வேலியில் மறைந்து பார்த்துக் கொண்டிருந்து திடுமெனப் பாய்ந்து தனது இரையைப் பிடித்துக் கொள்ளுமென்பர் . கோழி ஏமாறும் சமயத்தைப் பார்க்குமாதலால் அற்றம் பார்க்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது . மிகக் கூர்மையான பார்வையுடையதாலும், பார்த்துப் பதுங்கிப் பாய்வதாலும் பார்வல் வெருகு ” ( அகம் . 391 ) , பார்நடை வெருகு ( புறம் . 326 ) என்று கூறினர் . இதன் நடை சிறுத்தைப் புலியின் நடையைப் போன்று பதுங்கிய நடையாகும்.வெகு விரைவும் மிக்க வலிமையு முடையது என்பர் .

அதனால் தன்னைவிடப் பெரிய விலங்குகளைக்கூடத் திடுமெனத் தாக்கிக் கொன்று விடும் என்பர் . வெருகின் கூரிய பற்களைப் பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன. காட்டுப் பூனையின் முன்பற்கள் ( Canines ) குவிந்து கூர்மையாக இருக்கும் . இதையே முல்லை முகை போன்று இருப்பதாகக் கூறினர் . காட்டுப் பூனையின் காலின் அடிப் பாகத்தைக் குவியடி ( அகம் , 347 ) என்று கூறினர் . “ வெருக்கடி யன்ன குவிமுகி ழிருப்பை ” –அகம் , 267.

இலுப்பைப் பூவின் குவிந்த பூ வெருகின் குவிந்த அடி போலிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குவியடி என்று கூறியதற்குக் காரணம் உண்டு . காட்டுப் பூனையின் கால்களில் அதன் விரல்கள் மெதுவான , பஞ்சு போன்ற சிறிய திண்டுகளுக்குள் இருக்கின்றன . இந்தப் பஞ்சுபோன்ற திண்டையுடைய அடியையே குவியடி என்றனர் . இந்தக் குவியடியால் நகங்கள் தரையில் படிவதில்லை . காலடியும் அகலமாக விரிந்து விழுவதில்லை .

இதனால் ஓசை செய்யாமல் தனது இரையை அணுக முடிகின்றது. காட்டுப் பூனையின் நிறம் பொதுவாகச் சாம்பல் கலந்த மணலின் நிறமாக இருக்குமென்பர் .– ஐந்திணையெழுபது . 34 படப்பையில் காணப்பட்ட வெருகு புள்ளியுடையதாகக் காணப்பட்டதைச் சங்க நூல் கூறுவதைக் காணலாம் . சங்க நூல்களில் மிக அரிதாக வெருகு குட்டி போட்டி ருப்பதைப் பாடியிருப்பது வியப்பைத் தருகின்றது . -அகம் , 287 மதியைச் சுற்றி மீன்கள் வானத்தில் சூழ்ந்திருப்பதைப் போல வெருகைச் சுற்றி அதன் குட்டிகள் சூழ்ந்திருந்த கூறப்பட்டுள்ளது . வெருகின் குட்டிகள் பொங்கிய மயிருடன் பூளை போல அஃதாவது இலவம் பஞ்சுபோல இருந்தது. இந்தக் காட்சி ஓவியம் வரைந்தாற் போலக் காணப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தில் வெருகின் கண்ணைப் பற்றியும் அதன் பார்வையைப் பற்றியும் குறிப்பாகப் பாடியுள்ளனர் .” குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை ” என்று அகநானூறு ஆண் பூனையின் பசிய கண்ணைப் பற்றிக் கூறியுள்ளது. வெருகு பார்க்கும் பார்வையைப் பற்றியும் சங்க நூல் குறிப்பாகச் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும் . -புறம் . 324 வேட்டுவரின் சிறுவர்கள் பறவையின் ஊனைத் தின்று புலால் நாற்றம் அடிக்கும் வாயுடன் பிறரை வெருளச் செய்யும் நோக்குடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளதை நோக்குக. அவர்களுடைய நோக்கு வெருகின் நோக்குப் போல வெருளச் செய்ததாகக் கூறியது முக்கியமான தாகும் .

வெருகு

வெருட்டும் இப் பார்வையை வெருள் நோக்கு என்று புறநானூறு கூறியதில் வியப்பில்லை . இன்னும் நுண்ணிதாக ஆராய்ந்தால் வெருகு என்ற பெயரே காட்டுப் பூனையின் வெருள் நோக்கினால் தோன்றிற்று என்பது தெளிவாகின்றது . இஃது இளம்பூரணரின் தொல்காப்பிய உரையிலிருந்து விளங்குகின்றது .வெரூஉதல் என்ற மெய்ப்பாட்டை விளக்க வந்த இளம்பூரணர் அஃது அச்சம்போல நீடு நில்லாது கதுமெனத் தோன்றி மாய்வதொரு குறிப்பு .அதனைத் துணுக்கு என்றானென்பது என்று கூறினார். வெரூஉதலைத் தரும் விலங்கை வெருகு என்று இயற்கையறிவோடு வழங்கினர்.ஆதலின் மாலை நரத்தில் வேலியோரத்தில் மங்கிய ஒளியில் திடுமெமனத் தோன்றும்.

காட்டுப் பூனையின் கடும்பார்வையையும் கொடுந் தோற்றத்தையும் பார்த்தே துணுக்குற்று வெருகு என்று பெயரிட்டனர் . பேராசிரியரும் மரபியலுரையில் வெரூஉத லென்பது விலங்கும் புள்ளும் போல வெருவி நிகழும் உள்ள நிகழ்ச்சி , அஃது அஞ்ச வேண்டாதன கண்ட வழிக் கடிதிற் பிறந்து மாறுவதொரு நெறி , என்றார் .விலங்குகளிலும் புள்ளினும் வெருவும் உள்ள நிகழ்ச்சி என்று கூறி அஞ்ச வேண்டாதன கண்டவழிக் கடிதிற் பிறந்து மாறுவது என்று கூறியது காட்டுப் பூனையைக் கண்டக்கால் ஏற்படும் அச்சத்தையே குறித்து எழுதப்பட்டதோ எனக் கருதலாம் . காட்டுப் பூனையை மனிதர் கண்டால் அஞ்ச வேண்டுவதில்லை . ஆனால் கண்டவழி அதன் கடுமையான தோற்றம் கடிதில் அச்சத்தைத் தோற்றுவிக்கிறது. ஆனால் அஃது ஒரு பூனை உணருங்கால் அவ்வச்சம் உடனே மாறிவிடுகின்றது . ஆதலின் வெரூஉதலைத் தருவது வெருகு எனப் பெயர் பெற்றது .

காட்டுப் பூனையின் கடுமையான பார்வை கொடுமையான தோற்றம் கோழியை வெருளச் செய்து உயிர் நடுங்கி நாக்கு அடித்துக் கொண்டு அலறச் செய்த காட்சியைப் புறநானூறு கூறுவது இது சார்பாகச் சிந்திக்கத் தக்கது . காட்டுப் பூனையின் குணம் பதுங்கி வருவது . ஓசையின்றி வருவது. மங்கிய ஒளியில் வருவது . மறைந்து வருவது .இவ்விதம் வந்து திடுமெனக் கடுந் தோற்றத்துடன் தாக்குவது . இதனால் பயத்திலேயே பாதி உயிர் போய்விடுகிறது . வெருகின் கண்களை நாலடியார் கருனைக் கிழங்குக்கு ஒப்பிட்டுக் கூறியதைக் காண்கிறோம். நாலடியார் . 210 கருனைக் கிழங்கின் பசுமையும் செம்மையும் கலந்த முளைக் கண்ணையே வெருகின் கண்ணுக்கு ஒப்பிட்டதாகத் தெரிகின்றது. வெருகின் கண்ணை வைடூரியத்திற்கு ஒப்பிட்டுத் திருவிளையாடல் புராணம் கூறுகின்றது .

” கழையிலை கார்மயி லெருத்தம் வெருகின்கண் நிறத்த தாய் ” என்று கூறுகின்றது . வெருகின் கண்ணின் நடுவில் ஒரு கோடுபோலக் கண் திரை மூடித்திறப்பது போல் வைடூரியத்தின் நடுவிலும் ஒரு கோடுபோல் ஒளி தோன்றும் . வைடூரியம் பழுப்பு நிறமாக ஒளியுடன் காண்பது வெருகின் கண்போல ( Cat s eye , Chrysoberyl ) இருப்பதாக நவமணிகளைப் பற்றிய நூலிலும் கூறப்பட்டுள்ளது. இருளில் வெருகின் கண் திரை விலகி வட்டமாக அதன்கண் காணப்படும் . இந்த வட்டத்தையே முத்துப்போல இருப்பதாக அகநானூறு கூறுவதைக் காணலாம் .

“வெருகிருள் நோக்கி அன்ன கதிர் விடு பொருகாழ் முத்தம் இடைமுலை விளங்க – அகம் , 73 வெருகு இருட்டில் ஒளிவிடும் வட்டக் கண்ணுடன் காணப் பட்டதையே பசுமையும் வெண்மையுங் கலந்த ஒளிவிடும் முத்திற்கு ஒப்பிட்டது மிகவும் பொருத்தம். தொல்காப்பிய மரபியலில் வெருகு கூறப்பட்டுள்ளது. “மூங்கா வெருகெலி மூவரி யணிலோ டாங்கவை நான்கும் குட்டிக் குரிய ” –தொல் . மரபு . 561 வெருகின் பிள்ளையைக் குட்டியென்று கூற வேண்டுமெனக் கூறுகின்றது . சங்க நூல்கள் பிள்ளை யென்றும் குட்டியைக் கூறுகின்றன. வெருகைப் பூசையென்றும் வழங்கலாம் என்று மரபியல் கூறுகின்றது .

” குரங்கின் ஏற்றினைக் கடுவ னென்றலும்
வெவ்வாய் வெருகினைப் பூசை யென் றலும் ” – தொல்.மரபு. 823

வெருகு
வெருகு

பூசையென்ற சொல் சில விடங்களில் காட்டுப் பூனைக்கு வழங்கியதாகத் தெரிகின்றது . வெவ்வாய் வெருகென்றதனாற் படப்பை வேலியும் புதலும் பற்றி , விடக்கிற்கு வேற்றுயிர் கொள்ளும் வெருகினை , இல்லுறை பூசையின் பெயர் கொடுத்துச் சொல்லலும் (புறம் . 117 , 326 ) அமையுமென்றவாறு. வெருகினை விடையென்றலும் போல்வன பலவுங் கொள்க என்று பேராசிரியர் எழுதிய உரை ஆராயத்தக்கது . வீட்டில் வாழும் பூனையின் பெயரைக் காட்டுப் பூனைக்கு இட்டு வழங்கினர் என்று கூறுகிறார் . சங்க நூல்களில் இல்லுறைப் பூசையைப் பற்றி ஒரு செய்தியையும் காணோம் . ஆதலின் இஃது ஐயத்திற்கிடமானது. காட்டுப் பூனைக்கு வழங்கிய பூசையென்ற பெயர் பிற்காலத்தில் வீட்டில் வாழும் பூனைக்குப் பெரும்பாலும் வழங்கியதாகவே தெரிகின்றது.

ஏனெனில் சங்க இலக்கியத்தில் வீட்டில் வாழும் விலங்காக நாய் கூறப்பட்டுள்ளது . ஆனால் பூனை கூறப்படவில்லை . சங்ககாலத்தில் பூனையை வீட் டில் வளர்க்கும் பழக்கம் இல்லையென நினைக்க வேண்டியிருக்கின்றது. இல்லுறைப் பூசையே சங்க காலத்தில் இல்லா திருக்கலாம். பரிபாடலில் பூசையென்ற சொல் பயில்கின்றது . இதிலும் வீட்டுப் பூனையென்று கூற முடியாது .

பழமொழியிலும் , சிறுபஞ்சமூலத்திலும் வரும் பூசையென்ற சொல் சங்க காலத்திற்குப் பிற்பட்டது . குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்ற மரபியல் வரிக்கு உரை கூறுங்கால் பேராசிரியர் , கடுவன் ஆண் குரங்கென்றும் , இதனைக் கடியலாகா தெனப்பட்ட இழுக்கென்னையெனின் மக்கட்கும் வெருகிற்கும் அக்காலத்துப் பயின்றன போலுமாதலின் என்று எழுதினார்.

கடுவன் என்ற பெயர் சங்க காலத்தில் புலவர்களுக்குக் கூட வழங்கியது. இக்காலத்தில் ஆண் பூனைக்கு வழங்குகின்றது . கடுவன் பூனையென்று பெரிய, வளர்ந்த அச்சம் தரும் பூனைக்குத் தான் பெரும்பாலும் இக்காலத்தில் வழங்குவர் . கண்டாம் புலியென்றும் கண்டாம் பூனையென்றும் அழைப்பர். சங்க காலத்தில் மனிதருக்கு அவர்களின் கடுமையான பார் வையாலும் தோற்றத்தாலும் வழங்கியிருக்கலாமெனத் தெரிகின்றது .

கடுவன் பூனைபோல இருக்கிறான் என்று இன்றும் வழங்குவர் . காட்டுப் பூனையென்று பட்டப் பெயரிட்டுக் கூப்பிடுவதுண்டு. கடுமையான தோற்றமுடையவருக்கும் திருடருக்கும் காட்டுப் பூனை என்ற பெயர்கள் வழங்கக் காண்கிறோம் .ஆதலின் கடுவன் என்ற சங்க நூல் வழக்கும் வெருவரு தோற்றத்தினால் காட்டுப் பூனையை ஒப்பிட்டுக் கூறி வழங்கினதாக இருக்கலாம் . குரங்கில் ஆணைக் கடுவன் எனலாம் என்று மரபியல் கூறுவது பொருத்தமே . குரங்கின் முகம் , முக்கியமாக – பெருத்த ஆண் குரங்கின் முகம் கடுமையானது தான் . அதனால் தான் குரங்கை வலிமுகம் என்று இலக்கண உரையாசிரியர்கள் கூறியுள்ளனர்.மென்மையான முகமற்றதை வலிமுகம் என்றும் கடுவன் என்றும் வழங்கினர் .

காட்டுப் பூனைக்கு வெருகு என்ற பெயரும் கடுவன் என்ற பெயரும் அதன் வெருவச் செய்யும் கடுமையான பார்வையாலும் கொடுமையான தோற்றத்தாலும் ஏற்பட்டதே என்பது தெளிவு பெறும் . காட்டுப் பூனையைப் பிற மொழிகளிலும் அதே பொருளில் பெயரிட்டு வழங்கு கின்றனர். மலையாளத்தில் காட்டுப் பூச்சா என்றும் , கன்னடத்தில் காட பெக்கு என்றும் , இந்தியில் ஜங்லி பில்லி யென்றும் வழங்கும் . இதை ஆங்கிலத்தில் Jungle cat என்றும் , விலங்கு நூலில் Felis chaus என் றும் அழைப்பர். தமிழ் நிகண்டுகளில் காட்டுப் பூனையின் பெயரையும் நாட்டுப் பூனையின் பெயரையும் சேர்த்து வேற்றுமையின்றி மயங்கி வழங்கியுள்ளனர் .படப்பை என்பது வேலி . படப்பையில் காணப்பட்டது போல , படப்பை சூழ்ந்த பாகத்தில் காணப்பட்டதால் ‘பாக்கன் என்றும், கற்பிளப்பிலும் மரப் பொந்திலும் வாழ்வதால் விடருகம் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது . குறவர்கள் இன்றும் காட்டுப்பூனையைப் ‘பாக்கன் என்றும் போக்கன் என்றும் கூப்பிடுகின்றனர் . குழந்தைகளைப் பயமுறுத்த பாக்கன் வருவதாகக் கூறுவர் . இப் பெயர்கள் சேந்தன் திவாகரத்தில் வடமொழிப் பெயர்களுடன் தமிழ்ப் பெயர்களாகக் காணப்படுகின்றன .

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

wild cat, Jungle cat, Felis chaus

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை – அகம் 297/13,14

ஓவியத்து எழுதினாற் போன்று மெலிந்து நீண்ட பூனையின்
பூளைப் பூவினை யொத்த விளங்குகின்ற மயிரினையுடைய குட்டிகள்

பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி – குறு 107/4

குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை – அகம் 367/8

பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன – அகம் 391/1

பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய – புறம் 117/8

ஊர் முது வேலி பார்நடை வெருகின்/இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை – புறம் 326/1,2

வேலி வெருகு இனம் மாலை உற்று என – குறு 139/2

வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி – குறு 220/4

வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு – அகம் 73/3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *