Skip to content

ஆய் அண்டிரன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன்

சொல் பொருள்

(பெ) கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

சொல் பொருள் விளக்கம்

கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

ஆய் அண்டிரன் எனப்படும் இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர் குல மன்னன் ஆவான்.இவனை ஆய் வேள் என்றும் வேள் ஆய் என்றும் அழைப்பர். வீரமன்னர்களான சேர சோழ பாண்டியர்கட்கு முறையே பனை, ஆத்தி, வேம்பு மாலைகள் அடையாளமாக அமைந்திருப்பனபோல, இவனுக்குச் சுரபுன்னை மாலை அடையாளப் பூவாகும். யானையை அரசச் சின்னமாகக் கொண்டவன் இவன்.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், “இவன் கொடுக்கும் யானையின் தொகைக்கு அளவே இல்லை. அவை வானத்தின் கண் காணப்படும் விண்மீன்களினும், கொங்க நாட்டவர்மீது போரினைத் தொடுத்த காலத்தில் விடப்பட்ட வேலினும் பலவாகும்,” என உயர்த்திக் கூறியுள்ளார். 

ஈகையில் முனைபவருள் பெரும்பாலோர் ஒரு பயன் கருதிச் செய்தல் உண்டு. இம்மையில் ஈகையினை மேற்கொள்ளின், அம்மையில் அதன் பயன் பெரிது என்று கருதி இருந்தனர் பலர். இப்படிப் பயன் கருதுதல் வாணிப முறையாகும். அந்த வாணிப முறை பற்றியும், பயன்கருதியும் ஆய் ஈகை புரியும் இயல்பினன் அல்லன். இவன் மேற்கொண்ட ஈகை, “நல்லாறெனினும் கொளல் தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று” என்னும் கொள்கையும், சான்றோர் சென்ற நெறி வழியே தானும் சென்று நடத்தல் வேண்டும் என்னும் குறிக்கோளுமுடையதாகும். இதனைப் புலவர் எத்துணை அழகுறப் பாராட்டியுள்ளார் பாருங்கள்.

“இம்மைச் செய்தது மறுமைக் காம்எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன் 

இவன் காலத்தில், மேற்குக் கடற்கரைப் பட்டினமாயிருந்த நெற்குன்றம் என்ற பட்டினத்தை ஆய் என்ற மன்னன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத் தாலமி (Ptolemy) என்ற யவன ஆசிரியர் தன் Geographia என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது காலம் கி.பி.90 முதல் கி.பி.168 வரை. எனவே இந்த அண்டிரனும் அந்தக் காலத்தைச் சேர்ந்தவனாதல் வேண்டும். இவன் வீரன் என்பதையும், வள்ளல் என்பதையும் இந்தப் பாடல்கள் மூலம் அறியலாம்.

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன. இவனைப் பற்றிய குறிப்புகள் புறநானூறு 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375 ஆகிய பாடல்களில் கிடைக்கின்றன.

புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர்.இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரை பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

one of the seven philanthropists during the last sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்/புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – நற் 237/7,8

ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் – புறம் 129/5

வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன்/குன்றம் பாடின-கொல்லோ – புறம் 131/2,3

பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்/கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு – புறம் 240/3,4

அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி – புறம் 241/2

கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல – புறம் 374/16

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கைவண் மையே. புறநானூறு : 134

இப்பிறப்பில் செய்யும் அறச்செயல்கள் மறுபிறப்பில் பயனளிக்கும் என்று கருதி, அறம் செய்வதை ஆய் ஒரு விலைபொருளாகக் கருதுபவன் அல்லன். அறம் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த வழி என்று உலகத்தவர் கருதுகிறார்கள். ஆய் அண்டிரனின் கொடைச் செயல்களும் அவ்வழிப் பட்டவையே.

ஈகை என்ற அதிகாரத்தில்,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள் - 221)

என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, “வறுமையில் உள்ளவர்களுக்குக் கொடுத்து உதவுவதுதான் ஈகை. மற்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையதாகும்” என்று வள்ளுவர் கூறுகிறார். சான்றோர் கடைப்பிடிக்கும் நெறி என்ற கொள்கையோடு, ஆய் அண்டிரன் எதையும் எதிர்பார்க்காமல் ஈகை செய்வது வள்ளுவரின் குறளோடு ஒப்பு நோக்கத் தக்கது.

அடுத்து வரும் குறளில் (குறள் - 222),

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

என்று வள்ளுவர் கூறுகிறார். ஈகையினால் மேலுலகத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும் ஈகை நல்ல செயல்தான் என்று வள்ளுவர் கூறியிருப்பதும் ஆய் அண்டிரனின் செயலோடு ஒப்பிடத் தக்கதாகும்.

நன்றி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *