சொல் பொருள்
(பெ) ஒரு பறவை,
சொல் பொருள் விளக்கம்
ஒரு பறவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swan
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்னத்தைப் பற்றிச் சங்க இலக்கியத்தில் பல குறிப்புகள் உள்ளன. இந்த அன்னத்தின் கால்கள் சிவப்பாய் இருக்கும். செம் கால் அன்னத்து சேவல் அன்ன – மது 386 இந்த அன்னங்கள் வானத்தில் கூட்டமாகப் பறந்து செல்லும் அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும் செம் கால் அன்னத்து சேவல் அன்ன குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 384-388 அழகிய இடத்தையுடைய பெரிய வானம் மறையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு ஒள்ளிய கதிரையுடைய பகலவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும் சிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த, நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு, காற்றுப்போல் விரையும் அழகிய தேரும், வானத்தில் கூட்டமாகச் சென்றாலும் ஓர் ஒழுங்கு வரிசையில் செல்லும் நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி புல் உளை கலிமா – அகம் 234/3,4 வரிசையாகப் பறத்தலையுடைய அன்னப்பறவையை ஒத்த, விரைந்த செலவினையுடைய புல்லிய பிடரி மயிரினையுடைய செருக்குவாய்ந்த குதிரைகளை வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவி கொடிஞ்சி நெடும் தேர் – அகம் 334/9-12 வானத்தின்கண் விளங்கும் சிறகினையுடைய அன்னத்தின் கூட்டம் பறந்து செல்லலை ஒப்ப வேகத்தால் காற்று என்று கூறப்பெறும் குதிரைகள் நான்கு ஒருசேரப் பூட்டப்பெற்ற கொடிஞ்சியினையுடைய நீண்ட தேரின் அன்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதன் கால்கள் குட்டையாக இருக்கும். அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் – சிறு 146 அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும் நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து வெண் தோடு இரியும் வீ ததை கானல் – குறு 304/5,6 நீண்ட கடற்கரையில் இருந்த குறிய கால்களையுடைய அன்னத்தின் வெளுத்த தொகுதி வெருண்டு பறக்கின்ற பூக்கள் செறிந்த கடற்கரைச்சோலையினை துணையைப் புணர்ந்த அன்னச்சேவலின் சூட்டு மயிர் மிக மென்மையாக இருப்பதால் அதனை மெத்தைக்கும், தலையணைக்கும் வைப்பர். துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ – கலி 72/2 துணையோடு சேர்ந்த அன்னத்தின் தூவியால் செய்த மென்மையான தலையணையில் சாய்ந்துகொண்டு துணை புணர் அன்ன தூ நிற தூவி இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 132,133 தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால் இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு அன்னம் ஒலி எழுப்புதல் கரைதல் எனப்படுகிறது. அன்னம் கரைய அணி மயில் அகவ – மது 675 அன்னம் என்பன வலசைப் பறவைகள். தக்க பருவத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து, பின்னர் மீண்டும் பறந்து சென்றுவிடும். அவை, வடக்கிலிருந்து வருவதால், இமயமலையில் உறைவதாக சங்க மக்கள் எண்ணினர். விலங்கு மென் தூவி செம் கால் அன்னம் பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும் வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் அசைவு இல் நோன் பறை போல – நற் 356/2-6 ஒன்றற்கொன்று விலகிய மென்மையான இறகினையும், சிவந்த கால்களையுமுடைய அன்னங்கள், பொன்னாய் மின்னும் நெடிய சிகரங்களைக் கொண்ட இமயத்து உச்சியில் தேவருலகத்துத் தெய்வ மகளிர்க்கு மிகவும் விருப்பமாக இருக்கும் வளராத இளம் குஞ்சுகளுக்கு வைத்துண்ணும் உணவைக் கொடுப்பதற்குத் தளர்ச்சியற்ற வலிய பறத்தலை மேற்கொள்வதைப் போல அன்னத்தின் கால்கள் தோலுறை பூண்டிருக்கும். துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் – ஐங் 106/2 அன்னத்தின் கால் மயிரடர்ந்து நுனி குவிந்து தோலுறை போறலின் துதிக்கால் அன்னம் என்றார். துதி – தோற்பை – ஔவை.சு.து.உரை, விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்