Skip to content

அன்னி என்பவன் சங்ககாலக் குறுநில மன்னன்.

1. சொல் பொருள்

(பெ) சங்ககாலக் குறுநில மன்னன். 

2. சொல் பொருள் விளக்கம்

அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலை என்ற இடத்தில் திதியனொடு போரிட்டுத் திதியனின் காவல் மரமான புன்னையை வெட்டிச் சாய்த்தான்.(அகம் 45)

அரசன் அன்னி மிகவும் பெரியவன். அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் இருபெரு வேந்தர்கள். போரில் அன்னியின் காவல்மரம் புன்னை சாய்ந்தது.(நற்றிணை 180)

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain of sangam period

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இந்த அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலை என்ற இடத்தில் திதியனொடு போரிட்டுத் திதியனின் காவல் மரமான புன்னையை வெட்டிச் சாய்த்தான்.

அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப்பண்ணி
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே – அகம் 45/9-12

அன்னி என்பவன், குறுக்கை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பானின்,
நெடுங்காலம் நின்றிருக்கும் அடிமரத்தை வெட்டச் செய்து,
அந்தப் புன்னை மரத்தை மொட்டையாக்கிய போது, கூத்தர்கள்
(எழுப்பிய) இன்னிசையின் ஆரவாரத்தினும் பெரிதே

இதே கருத்தை இன்னொரு அகப்பாடலும் கூறுகிறது.

பெரும் சீர்
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப்பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல – அகம் 145/10-13

பெரிய புகழையுடைய
அன்னியானவன் குறுக்கைப்பறந்தலை என்னும் போர்க்களத்திலே திதியன் என்பானது
பழைமை பொருந்திய பரிய அடியுடன் துணித்திட்ட
நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை மரம் போல

ஆனால் இப்போரில் அன்னி மாண்டான்.

பயங்கெழு வைப்பின் பல்வேல் எவ்வி
நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே – அகம் 126/13-17

வளம் மிக்க ஊர்களையுடைய பல வேற்படைகளையுடைய எவ்வி என்பான்
நீதியை உட்கொண்ட சிறந்த மொழிகளைக் கூறித் தணிக்கவும் தணியானாகி
பொன் போலும் கொத்துக்களாகிய நறிய மலர்களையுடைய காவல் மரமான புன்னையைக் குறைக்க விரும்பி
திதியன் என்பானொடு போரிட்டு இறந்த அன்னி என்பானைப் போல
நீ இறந்துபடுவை போலும்

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனே
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர் பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும் இவ் இருவரது இகலே – நற்றிணை 180

வயலில் படர்ந்திருந்த பாகல் கொடியில் முயிறு கூடு கட்டி முட்டையிட்டு வைத்திருக்கும். வயலில் மேயும்போது நாரையின் உடல் அதன் மேல் உரசினால் என்ன ஆகும். முயிற்றுக் கூட்டிலிருக்கும் முட்டைகள் கொட்டும். நெல்லரிசி கொட்டுவது போல முட்டைகள் கொட்டும். அப்படிக் கொட்டும் வயல்நிலத்தின் தலைவன் ஊரன்.

பல பெண்களைப் பெறலாம் என்னும் நப்பாசையோடு ஊரன் வீட்டுக்குத் திரும்பவில்லை. மனைவி மாயோளோ அழகு நலம் மிக்கவள். அவனை விருப்பம் போல் விட்டுவிட விரும்பவில்லை. வீட்டுக்கு இழுத்துவர நினைக்கிறாள்.

அரசன் அன்னி மிகவும் பெரியவன். அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் இருபெரு வேந்தர்கள். போரில் அன்னியின் காவல்மரம் புன்னை சாய்ந்தது.

அதுபோல நான், பரத்தையும் அவனும் என்று இரு திறத்தாருக்கு இடையே நடக்கும் போர் (இகல்) என்னோடு ஒழியட்டும். மற்றவர் யாரும் தலையிட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *