Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நெளிவு நெளிவான கருமணல், 2. அரித்தோடும் நீர், 3. கூந்தலின் நெறிப்பு,

சொல் பொருள் விளக்கம்

(1) அறல் – அற்று விழுகின்ற நீர். (அகம். 19. வேங்கடவிளக்கு.)

(2) நீர் வற்றிய காலத்து மணல் அற்று அற்று இருப்பது. (அகம். 25. வேங்கடவிளக்கு)

(3) ஆற்றில் நீர் அற்றற்றுச் செல்லும் இடத்துள்ள கரு மணல். (புறம். 25. குறிப்புரை.)

(4) அறு + அல் = அறல் = கருமணல், சிறுதூறு, நீர், விழவு முதலிய பலபொருளுந் தருவதும், ஒருங்கு சேர்ந்து கருங்கட்டியாயிருந்தது, அற்று வேறுபட்டுத் தனித்தனியாகிப் பிரிந்து நின்று கருமணலாயிற்று; தரையினுள்ளிட்ட விரையானது தன்மீதுள மண்ணையறுத்துக்கொண்டு வெளிக்கிளம்புதலிற் சிறு தூறாயிற்று. கிணறு முதலியன வெட்டிய வழிப் பக்கங்களினின்றும் அடியினின்றும் மண்ணையும் பாறையையும் அறுத்துக் கரைத்துக்கொண்டு வெளிப்படுதலின் நீராயிற்று; கடவுட்பூசை முதலிய காலங்களில் மக்களாவார் செயலற்று ஒரு மனத்தின ராகியிருத்தலின் விழவாயிற்று. (தமிழ் வியாசங்கள். 52)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

black sand with curls

flowing water

curl in hair

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25

(ஆற்றின்)அறல் போலும் கூந்தலினையும், பிறை போல் அழகிய நுதலினையும்
– அறல் – யாற்றின்கண் நீரோட்டத்தால் வரிவரியாக அமைந்த நுண்ணிய கருமணல்
– பொ.வே.சோ உரை விளக்கம்

கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் – சிறு 6

மயிர் விரித்ததை ஒத்த கருநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்

ஆற்றில் அரித்தோடும் நீர்.

கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18

கெண்டை மீன்கள் சிறிதாய் ஓடும் நீரில் எதிர்த்து ஏறி வர, பெரும் நீர்ப்பெருக்கு குறைய

கன்னங்களில் அரித்தோடும் கண்ணீர்

நறவின்
சே இதழ் அனைய ஆகி குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல்
வெய்ய உகுதர வெரீஇ – அகம் 19/9-14

நறவம் பூவின்
சிவந்த இதழ் போன்றவை ஆகி – (முன்பு)குவளையின்
கரிய இதழைப் போன்ற மிகுந்த நீரைக்கொண்ட, ஈரமான இமைகள் –
உள்ளம் கொதிப்பதால் நினைக்கும்போதெல்லாம் காய்ந்துபோக –
துன்பம் கொண்டு விரைந்து விழுகின்ற பளபளக்கும் நீர்த்துளிகள்
வெம்மையுடன் கீழே விழ, (அதனால்) அஞ்சி,

அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 304

(ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான)நெறிப்பு உள்ள மயிரினையுடைய (மலை)இடைச்சியர்
பாடலோசையும்
– அறல் – கூந்தலின்கண் வரிவரியாய் அமைந்த வடு – பொ.வே.சோ உரை விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *