1. சொல் பொருள்
(பெ) 1. ஆர்க்காடு நாட்டை ஆண்ட அரசன் அழிசி, 2. அழிசி நச்சாத்தனார்.
2. சொல் பொருள் விளக்கம்
காவிரிக்கரையில் உள்ள ஆர்க்காடு(ஆற்காடு என்று கற்றோரும் எழுதுவது, தெளிவு இல்லாமையால் அன்று. தெளிவாகக் கூடாது என்னும் தெளிவான முடிவில் எழுதுவதாம்.) நாட்டை ஆண்ட அரசன் அழிசி. ஆர் என்பதன் பொருள் ஆத்திமரம். அவன் மகன் சேந்தன்
அழிசி நச்சாத்தனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 271 பாடல் இவரது பெயரில் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a minor king in the chozha country
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு – நற் 87/3
வெற்றியுள்ள போரையுடைய சோழர் குடியினனான அழிசி என்பானின் அழகிய பெரிய காட்டின்
திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி – நற் 190/3,4
புள்ளிகள் படர்ந்த வேலையுமுடைய சேந்தன் என்பானின் தந்தையாகிய,
தேன் கமழ்கின்ற விரிந்த மலராலான மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையும் உடைய அழிசி என்பானின்
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே – குறு 258/4-8
ஏந்திய கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட சேந்தனின் தந்தை
கள்ளாகிய உணவையும், அழகிய விலங்குக் கூட்டங்களை வேட்டையாடுதலையும்,
வரிசைப் பட்ட ஒளிவிடும் வாளைக் கொண்ட இளைஞர்களையும் கொண்ட பெருமகனான
அழிசி என்பானின் ஆர்க்காடு போன்ற இவளின் குற்றம் தீர்ந்த சிறந்த பெண்மைநலம் தொலைவதைக் கண்டபின்னர்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும், – புறம் 71
மிக்க புகழுடைய வைகையாற்றால் சூழப்பட்ட வளம் பொருந்திய ஊர்களில் பொய்க்காத புதுவருவாயுடைய மையல் என்னும் பகுதிக்குத் தலைவனாகிய மாவன், நிலைபெற்ற அரண்களையுடைய ஆந்தை, புகழமைந்த அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, சினமிக்க இயக்கன் ஆகியோர் உட்பட …
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்