Skip to content

சொல் பொருள்

(வி) 1.இசைக்கருவிகளை வாசி, 2. கூறு, அறிவி,‘வயப்படுத்துவது’ ‘இசைவிப்பது’

2 (பெ) 1. இனிய ஓசை,  2. புகழ்,இசையைப் பாட்டு என்றும் பண் என்றும் கூறுவர்.

சொல் பொருள் விளக்கம்

(1) பல இயற்பாக்களுடனே நிறத்தை இசைத்தலால் இசை என்று பெயராம். (சிலம்பு. 3.26. அடியார்.)

(2) இசை என்னும் சொல்லுக்கு ‘வயப்படுத்துவது’ ‘இசைவிப்பது’ என்பது பொருள். மரம், செடி, கொடிகள் என்னும் ஓரறிவு உயிர்கள் முதல் மக்கள் என்னும் ஆறறிவு உயிர்கள் வரையில் எல்லா உயிர்களையும் இசையானது வசப்படுத்தும்… உயிரில்லாத கல், மண், காற்று, நீர் முதலான பருப்பொருள்களையும் பாடுகின்றவர்களின் எண்ணத்தோடு இசைத்து இயங்கச் செய்கின்ற ஆற்றல் அந்த இசைக்கு உண்டு.
(சங்க நூற் கட்டுரைகள். ஐ. 80.)

(3) சான்றோர்களின் இசைப் பாட்டாலும், இசைப்பாலும் புகழ் எக்காலத்தும் நிலைபெறுதலால் புகழுக்கு ‘இசை’ என்றே ஒரு பெயரும் உண்டு. ‘இசை என்னும் எச்சம்’ என்பார் திருவள்ளுவர். (திருக்குறள் அறம். 145.)

(4) இசையைப் பாட்டு என்றும் பண் என்றும் கூறுவர். ஓர் பண்ணின் பாலைகளைக் கொண்டு – அஃதாவது ஓர் இராகத்தின் சுரத்தானங்களைக் கொண்டு – இசைப்பாக்களை (சாகித்தியங்களை) இசைத்தலால் இதற்கு இசை என்றும் பெயராகும். (பாணர் கைவழி. 5)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

play musical instruments, express, indicate, melody, praise, fame

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 182

நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கு என் இடும்பை தீர – பொரு 66,67

விரும்பி வந்தார்க்குத் தடையில்லாத நல்ல பெரிய வாசலில்
கூறாமற் புகுந்து என் வறுமை தீர

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240

பல்லியக் கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு – சிறு 125,126

பல இசைக்கருவிகளையுடைய கூத்தரைக் காப்பவனாகிய பெரும் புகழையுடைய
நல்லியக்கோடனை விரும்பிய கருத்துடன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *