Skip to content

சொல் பொருள்

(பெ) தயிர், மோர், உணவுப்பொருள்களைக் கொண்ட பாத்திரங்களைப் பூனை, நாய் போன்ற விலங்குகளிடமிருந்தும்,
குழந்தைகள் ஆகியோரிடமிருந்து பாதுகாப்பாக வைப்பதற்காகவும் தூக்கிச் செல்வதற்கு எளிதாக இருப்பதற்கும்
பயன்படுத்தப்படும் ஒழுங்கமைப்பு உறி ஆகும்

சொல் பொருள் விளக்கம்

தயிர், மோர், உணவுப்பொருள்களைக் கொண்ட பாத்திரங்களைப் பூனை, நாய் போன்ற விலங்குகளிடமிருந்தும்,
குழந்தைகள் ஆகியோரிடமிருந்து பாதுகாப்பாக வைப்பதற்காகவும் தூக்கிச் செல்வதற்கு எளிதாக இருப்பதற்கும்
பயன்படுத்தப்படும் ஒழுங்கமைப்பு உறி ஆகும்

இது கயிற்றினால் ஆக்கப்படும். பல சட்டிகளை ஒன்றாக
வைப்பதற்குரியதாய் இருக்கும்

மாடுமேய்க்கப் போகிறவர்கள் இத்தகைய இரண்டு உறிகளில் பொருள்களைவைத்து காவடியின் மூலம் தோளில்
எடுத்துச் செல்வர் என்று கலித்தொகை கூறுகிறது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர்
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் – கலி 106/1-5

பசுவின் தலையில் கட்டும் கழியும், சூட்டுக்கோலும் வைத்துக் கட்டிய தோல்பையையும்,
ஒன்றோடொன்று கயிற்றினால் கட்டப்பட்ட மண்கலங்களைக் கொண்ட உறியையும் தூக்கிக்கொண்டு
நீண்டிருக்கிற கொன்றைப் பழத்தில் செய்யப்பட்ட இனிய குழலை வாசித்துக்கொண்டவராய்,
கொச்சையான பேச்சுக்களைப் பேசும் கோவலர்கள் தத்தம் மாட்டுக்கூட்டங்களை,
நேரத்தில் வந்த கார் காலத்தில் தோன்றின மழையில் நனைந்த அகன்ற புல்வெளிக்குக் கொண்டுசென்றனர்;

தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 169-175

செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும்,
விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்,
உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும்,
மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும், உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்

சிலர் ஒரே ஒரு உறியில் பொருளை வைத்துக் கையில் தூக்கிச்செல்வதும் உண்டு. அந்தணர்கள் கையில்
கொண்டு செல்லும் கரகம் என்ற கமண்டலத்தை உறியில் வைத்து எடுத்துச் செல்வதும் உண்டு.

பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/2-4

கையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன்,
தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி,
பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை,

உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் – கலி 9/2-4

உறியில் தொங்கும் கமண்டலத்தையும், புகழ் பெற்ற முக்கோலினையும்,
முறையாகத் தோளில் சுமந்து, நன்மையைத் தவிரே வேறு ஒன்றனையும் நினைக்காத நெஞ்சத்துடன்,
ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *