Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. தங்கு, 2. துளி, 3. ஒத்திரு, 4. உதிர்,

2. (பெ) 1. மழை, 2. பிரை மோர், 3. கிணற்றுச் சுவர்மண் சரிந்துவிடாமல் இருக்கச் செருகும் வளையம், 4. தேன்துளி, மழைத்துளி, 5. கத்தி, வாள் ஆகியவற்றைச் செருகிவைக்கும் மூடி

வட்ட வடிவில் அமைந்தவை

சொல் பொருள் விளக்கம்

உறைப்பெட்டி, உறைக்கிணறு, உறையாணி, தலையணை உறை முதலியவை பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. அனைத்தும் வட்ட வடிவில் அமைந்தவை. உரலைச் சுற்றியமைந்த மேல் வட்டம் உறைப்பெட்டியாம். வட்டக் கிணறு உறைக்கிணறு ஆகும். இவ்வாறே பிறவும். உறைக் கிணறு இலக்கிய ஆட்சி பெற்றது. உறைபோடுதல், பூண் பிடித்தலாம். இவை தென்னகப்பொது வழக்குகள்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dwell, drop, resemble, fall down, as pollen from flowers, rain, reserve of curd for curding milk, drop of honey, rain drop, sheath

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45

வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலையுடைய ஆண்பறவை

நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51

தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்

இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் – ஐங் 185/2

ஒளிவிடும் முத்தினை ஒத்திருக்கும் பற்கள் பொருந்திய சிவந்த வாயினையும்

புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – கலி 39/34

தினைப்புனத்தின் வேங்கை மரம் தன் பூந்தாதுக்களை உதிர்க்கும் பொன் போன்ற பாறை உள்ள முற்றத்தில்

கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் – நற் 201/8

காற்று மோதி வீசினாலும், சீறும் பெருமழை ஓங்கியடித்தாலும்

உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து – பெரும் 158

உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,

உறை கிணற்று புறச்சேரி – பட் 76

உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்

சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1

மூடியிருக்கின்ற, ஈங்கை மரத்தின் தேன்துளி மிகவும் திரண்டுள்ள அன்றைய மலர்கள்

உறை கழி வாளின் மின்னி உது காண் – நற் 387/9

உறையிலிருந்து உருவப்பட்ட வாளைப் போல மின்னி, அங்கே பார்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *