மலையமான் திருமுடிக் காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்
1. சொல் பொருள்
(பெ) 1. கடைவள்ளல்களுள் ஒருவன்,கரிய நிறமுள்ள தலைவன், 2. காரி என்ற வள்ளலின் குதிரை, 3. கருமை, 4.நஞ்சு, 5. வாசுதேவன், 6. கரிய காளை, பசு 7. கரிக்குருவி , 8. காக்கை, 9. சனி.
2. சொல் பொருள் விளக்கம்
சங்க காலத்தில் மாட்டினத்தையும் ஆட்டினத்தையும் விரும்பி வளர்த்தனர் . இவைகளை விரும்பி வளர்த்தோர் கோவலர் , ஆயர் எனப்பட்டனர் . முல்லை நிலத்தில் மாடும் , ஆடும் மந்தைகளாக வளர்க்கப்பட்டன . தமிழ்நாட்டில் இன்றும் கொங்கு நாட்டிலே காங்கேயம் பகுதியில் தான் சிறந்த உயர்ந்த இன மாடுகள் காணப் படுகின்றன . இந்தக் காங்கேய இனமாடுகள் சங்க காலத்திலேயே இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன .
சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்ன பல் செலவிற்பல்……….. ” -பதிற்றுப் பத்து , 77. வரிகள் , 10-11 .
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த – பதிற்றுப்பத்து , 22. வரிகள் . 14-15.
கொங்கர்கள் நிறைய மாடுகளை உடையவர்கள் என்று பதிற்றுப்பத்து இரண்டு இடங்களில் குறிப்பிடுவதிலிருந்து சங்க காலத்திலேயே காங்கேய இனமாடுகள் கொங்கு நாட்டில் பரவியிருந்தன என்பது விளங்கும் . இந்தக் காங்கேய இன மாடுகளைக் காரி என்று கலித்தொகை குறிப்பிடுகின்றது .
மணிவரை மருங்கின் அருவி போல
அணிவரம் பறுத்த வெண்காற் காரியும்
மீன்பூத் தவிர்வரும் அந்திவான் விசும்பு போல்
வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையுங் – கலி , 103
வள்ளுருள் நேமியான் வாய்வைத்த வளை போலத்
தெள்ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியும்
ஒருகுழை யவன் மார்பில் ஒண் தார்போ லொளிமிகப்
பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும்
பெரும்பெயர்க் கணிச்சியோன் மணிமிடற் றணிபோல
இரும்பிண ரெருத்தி னேந்திமிற் குராலும்
அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரங் கண்ணேய்க்குங்
கணங்கொள் பல்பொறிக் கடுஞ்சினப் புகரும்
வேல்வலா னுடைத்தாழ்ந்த விளங்குவெள் துகிலேய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண்காற் சேயுங் –கலி , 105
சுரி நெற்றி, வெண்கால் , கருமை நிறம் ஆகிய குணங்களையுடைய காங்கேயம் இனத்தைச் சேர்ந்தவை யென்பதில் ஐயமில்லை . இந்த இனச் சார்பான காளையையே மயிலைக்காளை என்று இக்காலத்தில் அழைப்பர் . காரியைச் சிறப்பாகக் கலித்தொகை கூறுவதையும் காணலாம் .
இது தவிர சிவந்த உடலில் வெள்ளைப் புள்ளி உடைய மாடும், கபிலை நிறமுடைய குரால் மாடும் , செம்மறுவுடைய வெள்ளை மாடும் , காலில் வெள்ளை நிறமுடைய சிவந்த நிறமுடைய மாடும் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது . ஆனால் காரியைத்தவிர மற்ற நிறமுடைய மாடுகள் தனித்த இனமாகக் கருத முடியாது. மற்றவை யெல்லாம் கலப்பினமாகவே ( Nondescript) கருத வேண்டும் . காரி , வெள்ளை , சிவலை என்று நிறத்தினடிப்படையாகக் கலித்தொகையில் வழங்கப்பட்ட பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. சங்க காலத்திலேயே மாடுகளின் இன வளர்ச்சிக்காகப் பொலிகாளை களைப் போற்றி வளர்க்கும் வழக்கம் இருந்தது .
நல்லேறுகளை நிரையில் சேர்த்து மேய்ச்சலுக்கு அனுப்பும் வழக்கம் இருந்த தென்பதும் சங்க நூல்களிலிருந்து தெரிகின்றது . ஏறுடைப் பெருநிரை என்று அகம் 213 ஆம் பாடல் கூறுவதைக் காணலாம் . ” துளங்கிமில் நல்லேற்றினம் ” என்று கலிப்பாடல் ( 106 ) கூறுவதைக் கவனிக்க வேண்டும் . பொலிகாளை நல்லேறு என்று சங்க நூல்களில் அழைக்கப்படும் . எருமைகளைக் கோட்டினம் என்றும் , பசுக்களைக் கோவினம் என்றும் , ஆடுகளைப் புல்லினம் என்றும் கலித்தொகை அழைக்கின்றது . பசுக்களை நல்லினம் என்றும் அழைக்கின்றது . குடப்பால் கறக்கும் மாடுகளைக் குடஞ் சுட்டு நல்லினம் என்று கூறுவதைக் காணலாம் . எருமைகளை நீர் நிறைந்த சூழ்நிலையான மருதத்திலேயே கூறியுள்ளனர் . எருமையைக் காரான் என்று அழைத்தனர் . மாடு , எருமைகளின் மேய்ச்சல் முறை களையும் பழந்தமிழர் நன்கு தெளிந்திருந்தனர் . மாடுகள் புல் மேய்வதற்கென்றே புல் முளைத்த நிலங்களை விட்டிருந்தனர் . ” விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து என்று மணிமேகலை கூறுவதைக் காணலாம் . மாடுகளை யும் எருமைகளையும் விடியற்காலத்தில் மேய்க்கும் வழக்கம் இருந்தது . வெயிற் காலத்தில் விடியற்காலை யில் மேய்ப்பது சிறந்த பழக்கம் என்று இக்காலத்து அறிஞரும் கூறுகின்றனர் . ( The grazing habits must be changed in summer months by allowing the animals to graze in the morning and evening instead of moontime to avoid exposure to the sun during the hottest part of the day ( Dr. D. N. Mullick – Physiological efficiency of animals in the tropics – Indian Farming . February 1961 ) இதே கருத்தைப் பழந்தமிழரும் கொண்டிருந்தனர் . எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் ” என்று ஆண்டாள் கூறுவதைக் காணலாம் விடியற்காலையில் மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்பும் வழக்கம் இருந்தது . பிற்பகலில் மாடுகளை மேய்க்க விடுகையைப் பெருவீடு என்று திருப்பள்ளி யெழுச்சி வியாக்கியானத்தில் கூறப்பட்டுள்ளது:
திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார். மலையமான் என்பது அவன் குடிப் பெயர். அவனுடைய குதிரை கார்(கரிய) நிறமுடையது. காரியென்பதே அதற்கும் பெயர்.
மலையமான் திருமுடிக்காரியின் சிறப்புகளைப் போற்றிப் பல புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களுள்,
- கபிலர்,
- குடவாயிற் கீரத்தனார்,
- பரணர்,
- கல்லாடனார்,
- வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்,
- மாறோக்கத்து நப்பசலையார்
முதன்மையர் ஆவர்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
A chief famed for liberality, one of seven kadai vaḷḷalkaḷ, poison, Vasudeva, blackness, that which is black, black bull, A kind of black bird, A crow, The planet Saturn, saturday.
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:
……………………… கறங்கு மணி வால் உளைப் புரவியொடு வையகம் மருள ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த, அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் கழல் தொடித் தடக் கை காரியும் - சிறுபாணாற்றுப்படை 91-95 ஒலிக்கும் மணிகளையுடைய வெள்ளைப் பிடரி மயிரையுடைய குதிரைகளுடன், உலகத்தோர் வியக்கும்படி, அன்பான நல்ல சொற்களைப் பொருள் வேண்டி வருபவர்களுக்கு அளிப்பவனும், சினம் மிகுந்த, சிறப்புடைய, இமைக்கும், அச்சத்தை உண்டாக்கும் பெரிய வேலினை உடையவனும், இறுக்குகின்ற தொடி(யினை அணிந்த), பெருமை மிக்க கையினையும் உடைய காரியும் “துஞ்சா முழவின் கோவல் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை பெண்ணையம் பேரியாற்று நுண்அறல்கடுக்கும் நெறிஇருங் கதுப்பின்” அகநானூறு 35 கோவல் (திருக்கோயிலூர்) மன்னன் காரி. தேர் நல்கும் கொடையாளி அவன். இந்தக் கொடை வழங்குவதற்காக அவன் அரண்மனையில் முரசு முழங்கும். அவனது கோவலூருக்கு அருகில் ஓடுவது பெண்ணை ஆறு (தென்பெண்ணை). அங்குள்ள ஆற்றுத்துறை ‘கொடுங்கால் முன்றுறை’. அந்தத் துறையிலிருக்கும் ஆற்றுமணல் படிவு போல் கூந்தலை (கதுப்பு) உடையவள் அவள். “ஆரியர் துவன்றிய பேர்இசை முள்ளூர்ப் பலர் உடன் கழிந்த ஒள்வாள் மலையனது ஒருவேற்கு ஓடி யாங்குதம் பன்மையது எவனோஇவன் நன்மைதலைப் படினே” நற்றிணை- 170 முள்ளூர் என்னுமிடத்தில் போர். ஆரியர் படையுடன் தாக்கினர். முள்ளூர் மன்னன் மலையன். அவனது ஒரு வேலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. திரும்பி ஓடிவிட்டனர். “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல்இசை நிறுத்த வல்வில் ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி நிலைபெறு கடவுள் ஆக்கிய பலர்புகழ் பாவை அன்ன நின் நலனே” அகநானூறு, 209 முள்ளுர் மன்னன் காரி. (கடையெழு வள்ளல்களில் ஒருவன்) இவன் சிறந்த வேல் வீரன். காலில் வீரக்கழல் அணிந்தவன். இவன் ஓரி (கடையெழு வள்ளல்களில் ஒருவன்) அரசனைக் கொன்றான். ஓரி வில் வீரன். வென்ற கொல்லிமலை நாட்டைக் காரி சேரலர்களுக்கு (சேரர்களுக்கு) வழங்கினான். “பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை பரூஉக்கண் மண்டையொடு ஊழ்மாறு பெயர உண்கும் எந்தைநிற் காண்குவந் திசினே! நள்ளாதார் மிடல்சாய்ந்த வல்லாளநின் மகிழிருக்கையே உழுத நோன்பகடு அழிதின் றாங்கு நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே; குன்றத் தன்ன களிறு பெயரக் கடந்தட்டு வென்றோனும் நிற்கூ றும்மே; வெலீஇயோன் இவன்எனக் கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு விரைந்துவந்து சமந்தாங்கிய வல்வேல் மலையன் அல்லன் ஆயின் நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்குஎனத் தோற்றோன் தானும் நிற்கூ றும்மே தொலைஇயோன் இவன்என ஒருநீ ஆயினை பெரும பெருமழைக்கு இருக்கை சான்ற உயர்மலைத் திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.” புறநானூறு, 125 அரசே! பகைவரின் வலிமையை அழித்த வலியவனே! பெண்கள் நூல் நூற்பதற்குப் பயன்படுத்தும் பஞ்சு போல் மென்மையானதாகவும், நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் நன்கு சமைக்கப்பட்டதும் கொழுமை நிறைந்ததுமான ஊன் துண்டுகளையும், பெரிய பாத்திரங்களில் வார்த்த கள்ளையும் முறையாக மாறி மாறி உண்ணலாம் என்று உன் மகிழ்ச்சியான இடத்திற்கு உன்னைக் காண வந்தோம். உழுத வலிய காளை (நெல்லைத் தின்னாமல்) வைக்கோலைத் தின்பதுபோல் நீ விரும்பி உண்ணும் மது அமிழ்தம் ஆகட்டும். மலைபோன்ற யானை சிதைவுறுமாறு எதிர் நின்று போரிட்டு வென்றவனும் வெற்றிக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். வீரக் கழலணிந்த, சிறந்த திருவடிகளால் போர்க்களத்தைக் கைக்கொள்ள விரும்பி, விரைந்து வந்து போரைத் தடுத்த வலிய வேலையுடைய மலையன் வராது இருந்திருந்தானானால், நல்ல போரை வெல்லுதல் நமக்கு எளிதாக இருந்திருக்கும் என்று போரில் தோற்றவனும் தம் தோல்விக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். ஆகவே, அரசே! உன்னை நட்பாகவும் பகையாகவும் கொண்டவர்களுக்கு, நீ பெரிய மழைக்கு இருப்பிடமான உயர்ந்த மலையையுடைய சிறந்த முருகனைப் போல் ஒப்பற்ற ஒருவன் ஆனாய். “ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தலைஇ வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர் ஓடாப் பூட்கை உரவொன் மருக வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே நினவயிற் கிளக்குவம் ஆயின் கங்குல் துயில் மடிந்தன தூங்கிருள் இறும்பின் பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் இரந்து சென்மாக்கட்கு இனிஇடன் இன்றிப் பரந்து இசை நிற்கப் பாடினான்” புறநானூறு 126) பகைவர்களுடைய யானைகளின் நெற்றிப் பட்டத்தில் இருந்த பொன்னால் செய்த தாமரைப் பூ போன்ற அணிகலன்களைப் பாணர்களின் தலையில் அணிவித்து அழகு செய்த பெருமையும், சிறந்த தலைமையும், புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையும் உடைய வலியவர்களின் வழித்தோன்றலே! யாம் எதையும் திறம்படக் கூறும் ஆற்றல் இல்லாதவராக இருப்பினும் விரைவாக உன்னிடத்து வந்து உன் புகழைச் சொல்லுவேம் என்று இங்கு வந்துள்ளோம். இரவு ஓரிடத்தே அடங்கி உறங்குவது போன்ற அடர்ந்த இருளுடைய சிறுகாடுகளும் பறையொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய முள்ளூர் வேந்தே! அழித்தற்கு அரிய பெருமையுடைய உன் சுற்றத்துடன் நீ விளங்குவாயாக. “நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது பெயர்குவர் அல்லர் நெறிகொளப் பாடு ஆன்று இரங்கும் அருவிப் பீடுகெழு மலையற் பாடியோரே” புறநானூறு 124 நல்ல நாளன்று போகாவிட்டாலும், போகும் பொழுது கெட்ட சகுனங்களைக் குறிக்கும் பறவைகள் குறுக்கே வந்தாலும், மன்னனைச் சந்திக்கூடாத நேரத்தில் அவன் அவைக்குள் நுழைந்தாலும், தன்மையற்ற சொற்களைச் சொன்னாலும் இடைவிடாத ஓசை நிறைந்த அருவிகளுடைய பெருமை பொருந்திய மலையையுடைய திருமுடிக்காரியைப் பாடியோர் (பரிசு பெறாமல்) வெறுங்கையோடு திரும்ப மாட்டார்கள். “நாட்கள் உண்டு நாள் மகிழ்மகிழின் யாரக்கும் எளிதே தேர்ஈதல்லே தொலையா நல்லிசை விளங்கு மலையன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பலவே” புறநானூறு, 123 பகல் பொழுதில் கள்ளுண்டு அரசவையில் மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது தேர்களைப் பரிசாக அளிப்பது யாவர்க்கும் எளிது. ஆனால், குறையாத புகழுடன் விளங்கும் மலையமான் திருமுடிக்காரி அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிவாக இருக்கும்பொழுது அளித்த வேலைப்பாடுகள் நிறைந்த நெடிய தேர்கள் பயனுள்ள முள்ளூர் மலைமேல் விழுந்த மழைத்துளிகளைவிட அதிகம். கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார் கழல்புனை திருந்து அடிக்காரி நின்நாடே அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே வீயாத் திருவின் விறல் கெழுதானை மூவருள் ஒருவன் துப்பாகியர் என ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை தோள் அளவு அல்லதை நினது என இலை நீ பெருமிதத்தையே புறநானூறு 122 வீரக்கழல் அணிந்த சிறந்த திருவடிகளுடைய திருமுடிக்காரி! உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; அதை கொள்ளுதற்குப் பகைவரும் முயற்சி செய்ய மாட்டார்கள். குறையாத செல்வத்தையும் வெற்றி பொருந்திய படையையுமுடைய மூவேந்தருள் ஒருவன் தனக்குத் துணையாகப் போரிட வேண்டுமென்று உன்னைப் புகழ்ந்து உனக்கு அளிக்கும் பொருள் உன் குடியை வாழ்த்தி வரும் பரிசிலர்க்கு உரியது. அருந்ததியைப் போல் கற்பில் சிறந்தவளும் மெல்லிய மொழியுமுடையவளாகிய உன் மனைவியின் தோள்கள் மட்டுமே உனக்கு உரியதாகவும், வெறொன்றும் இல்லாத பெருமிதம் உடையவன் நீ. அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென, சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல் அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, அரசு இழந்திருந்த அல்லல் காலை, முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி மல்லல் நல் நாட்டு அல்லல் தீர, பொய்யா நாவின் கபிலன் பாடிய, மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச் செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, அரு வழி இருந்த பெரு விறல் வளவன் மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந! விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண், சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன் ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர், உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் கவலை நெஞ்சத்து அவலம் தீர, நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! கல் கண் பொடிய, கானம் வெம்ப, மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க, கோடை நீடிய பைது அறு காலை, இரு நிலம் நெளிய ஈண்டி, உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே புறநானூறு, 174 தொலைவில் ஒளியுடன் விளங்கும் சிறப்புடைய ஞாயிற்றைப் பிறர்க்கு அச்சம் தரும் அசுரர்களின் கூட்டம் ஒளித்து வைத்தது. அதனால் சூழ்ந்த இருள், வட்ட வடிவமான இந்த உலகத்தில் வாழும் மக்களின் பார்வையைக் கெடுத்துத் துன்பத்தைக் கொடுத்தது. அத்துன்பம் தீர, மிகுந்த வலிமையும் கரிய உருவமும் உடைய திருமால், கதிரவனைக் கொண்டுவந்து நிறுத்தினான். அதுபோல், ஒரு சமயம் சோழ நாடு தன் அரசனை இழந்து துன்பப்பட்டது. அதைக் கண்ட உன் முன்னோர்களுள் ஒருவன், முரசு முழங்கும் முற்றத்தோடு, கரையை மோதி உடைத்து ஒலிக்கும் நீர் மிகுந்த காவிரி ஓடும் வளம் மிகுந்த நல்ல (சோழ)நாட்டின் துன்பதைத் தீர்க்க நினைத்து, பொய்யாத நாவுடைய கபிலரால் பாடப்பட்ட , மேகங்கள் தவழும் பெரிய மலையிடத்து விரைந்து, போரை விரும்பி வந்த பகைவர்கள் புறங்காட்டி ஓடும் மிகுந்த சிறப்புடைய முள்ளூர் மலையுச்சியில், காண்பதற்கரிய இடத்தில் இருந்த வலிமையுடைய சோழனின் திங்கள் போன்ற வெண்குடையைத் தோற்றுவித்து அக்குடையை புதிதாக நிலை நிறுத்தினான். அவன் புகழ் மேம்படட்டும். மலைக்குகையில் வாழும் புலியின் சின்னம் பொறித்த கோட்டையையும், ஒளிரும் அணிகலன்களையும், வண்டுகள் மொய்க்கும் மாலையையும் பெரும்புகழையும் உடைய நின் முன்னோனாகிய மலையமான் திருமுடிக்காரி இவ்வுலகில் செய்த நல்வினைப் பயனை நுகர்வதற்காக வானவர் உலகம் அடைந்தனன். அவனுக்குப் பிறகு, எல்லாத் திசைகளிலும் கவலையுற்றவர்களின் துயரம் நீங்க நீ தோன்றினாய். வரிசையாக மாலைகள் அணிந்த தலைவனே! நீ தோன்றியது, மலைகள் பொடிபடவும், காடுகள் தீப்பற்றவும், மிகுந்த நீர் வளமுடைய குளங்கள் வற்றவும், கோடைக்காலம் நீண்டு பசுமையற்ற காலத்துப் பெரிய நிலம் தாங்காமல் வாடிய பொழுது, மேகங்கள் திரண்டு இடியுடன் மழைபொழிந்தது போல் இருந்தது. நன்றி காரி குதிரை காரியொடு மலைந்த – சிறு 110 காரியென்னும் குதிரையையுடைய காரியோடு போர்செய்தவனும் காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 83 நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும் செம் கண் காரி கரும் கண் வெள்ளை – பரி 3/81 சிவந்த கண்ணும் கரிய மேனியும் உடைய வாசுதேவனே! கரிய கண்ணும் வெள்ளை உடம்பும் உடைய பலதேவனே சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி – கலி 101/21 சூரியனின் கதிர்கள் விரிவதைப் போன்ற சுழியினை நெற்றியில் கொண்ட கரிய காளை தொலையா நல் இசை விளங்கு மலையன் மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/3,4 கெடாத நல்ல புகழ் விளங்கும் மலையன் மது நுகர்ந்து மகிழாது வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர் மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/7,8 மாரி போலும் வண்மையையும், மிக்க போரினையுடைய மலையனும் காரி குதிரை காரியொடு மலைந்த - சிறு 110 காரி உண்டி கடவுளது இயற்கையும் - மலை 83 காரி புக்க நேரார் புலம் போல் - நற் 320/6 செம் கண் காரி கரும் கண் வெள்ளை - பரி 3/81 சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி/விடரி அம் கண்ணி பொதுவனை சாடி - கலி 101/21,22 காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி - கலி 104/21 நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண் - கலி 104/36 காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே - கலி 104/74 பாடு ஏற்றவரை பட குத்தி செம் காரி/கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா - கலி 105/39,40 மிக்கு தன் மேற்சென்ற செம் காரி கோட்டு இடை - கலி 105/68 நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை - அகம் 35/15 முள்ளூர் மன்னன் கழல் தொடி காரி/செல்லா நல் இசை நிறுத்த வல் வில் - அகம் 209/12,13 கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே - புறம் 122/2 காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த - புறம் 158/6 கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் - சிலப்.மது 12/123 காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ - சிலப்.மது 17/33 கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து - கம்.பால:13 52/3 தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் - கம்.யுத்3:22 160/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்