Skip to content
குமரி

குமரி என்பது குமரி முனை, குமரியாறு, இளமை, கன்னி

1. சொல் பொருள்

(பெ) 1. குமரி முனை, குமரியாறு, கன்னியாறு, 2. இளமை, 3. கன்னி, இளம்பெண் 4. கற்றாழை

2. சொல் பொருள் விளக்கம்

கற்றாழை
கற்றாழை

அந்நாளில் குமரியாறு இருந்த உண்மையை குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி’ என்று புறநானூற்றில் பி. சிராந்தையார் சொல்லி இருப்பதால் நாமறியலாம்.

அயிரை என்பது ஒருவகை மீன் இந்த அயிரை மீன் ஆற்று நீரிலே வாழும் கடல் நீரில் வாழாது. குமரியம் பெருந்துறை குமாரியாற்றங் கரையில் இருந்திருக்கின்றது. பெருந்துறை என்பதால் அது ஒரு துறைமுகமாகும். தமிழரின் போக்குவரத்து குமரியாறில் நடந்தது என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகின்றது.

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

கடற்கோளால் (சுனாமி) பஃறுளியாறும் பன்மலையடுக்கும், குமரியாறும், உரிக்கோடும், தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து போயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து இந்து மகா சமுத்திரமாக மாறியது. தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன.

குமரி
குமரி

குமரிமுனைக்குத் தெற்கே, இன்று குமரி மாகடல் அலைபாயுமிடத்தில், ஓர் அகன்ற நிலப்பரப்பு இருந்தது. அதில் குமரிக் கோடு, பன்மலை முதலிய மலைகளும்; குமரி, பஃறுளி முதலிய ஆறுகளும் இருந்தன. பஃறுளி யாற்றுக்குத் தெற்கே தென்பாலி முகம் என்ற நாடும்; பஃறுளி குமரி ஆறுகளுக்கிடையில் ஏழ்தெங்க நாடு, எம்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணகாரை நாடு, ஏழ்குறும்பானைநாடு ஆகிய 49 நாடுகளும், குமரியாற்றுக்கு வடக்கே பன்மலையை அடுத்துக் குமரி கொல்லம் நாடுகளும் ஆகமொத்தம் 52 நாடுகள் இருந்தன.

பஃறுளி ஆற்றின் கரையில் பாண்டியர் முதல் தலை நகரமான தென் மதுரையும், குமரியாற்றின் கடல் முகத்தில் இரண்டாம் தலைநகரமான அலைவாய் அல்லது கவாடபுரமும் இருந்தன. இத்தனையும் கடல் கொண்டபின் வைகையாற்றின் கரையிலுள்ள மதுரை கடைசித் தலைநகரமாயிற்று.

பாண்டியர் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் நிறுவினார்கள். தலைச்சங்கம் காய் சினவழுதி முதல் கடுங்கோன் வரை, 89 பாண்டியர் காலங்களில் 4440 ஆண்டுகள் தென்மதுரையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 549. பாடும் பெருமை சான்ற 7 பாண்டியர் உட்பட பாண்டிய புலவர் தொகை 4449. தலைசிறந்த புலவர்கள் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றமெரித்த குமரவேள், நிதியின் கிழவன், அகத்தியன், முரஞ்சியூர் முடிநாகராயர் முதலியோர். மற்றும் அதங்கோட்டாசான், தொல்காப்பியனார், பனம்பாரனார் ஆகியோரும் இச்சங்கத்தவர் என்று கூறப்படுகிறது. இச்சங்கத்தில் பாடல் பெற்ற நூல்கள் முத்தமிழிலக்கணமாகிய அகத்தியம்; இயல் தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம்; முதுநாரை, முதுகுருகு போன்ற இசைநூல்கள்; முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போன்ற நாடக நூல்கள் ஆகியவை. மற்றும் பரிபாடல், களரியாவிரை, காக்கை பாடினியம், அவிநயம், நற்றத்தம்வாமனம், புறப்பொருள், பன்னிருபடலம் ஆகியவையும் இச் சங்க காலத்தவை என்று குறிப்பிடப்படுகின்றன.

இடைச்சங்கம் வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை, 59 பாண்டியர் காலங்களில், 3700 ஆண்டுகள், கவாடபுரம் அல்லது அலைவாயில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 59. பாடும் பெருமைசான்ற 5 பாண்டியர் உட்பட, பாடிய புலவர் தொகை 3700. தலைசிறந்த புலவர்கள் அகத்தியர், தொல்காப்பியர் நீங்கலாக, இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்காப்பியன், சிறுபாண்டரங்கன், துவரைக்கோன், கீரந்தை ஆகியவர்கள். அரங்கேற்றப்பட்ட நூல்கள் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் ஆகியவை. தவிர, மேற்கோள் நூல்களாக மாபுராணம் இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகியவையும் கொள்ளப்பட்டன.

கடைச்சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை 49 பாண்டியர் காலங்களில், 1950 ஆண்டுகள், வைகைக் கரையிலுள்ள மதுரையில் நடைபெற்றது. அதன் உறுப்பினர் தொகை 49. பாடும் பெருமைசான்ற 3 பாண்டியர் உட்பட, பாடிய புலவர் தொகை 449. தலைசிறந்த புலவர்கள் சிறுமேதாவியார். சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகியவர்கள். பாடப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு; குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, நூற்றைம்பதுகலி, எழுபது பரிபாடல்,
கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன.

குமரி
குமரி

குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன் – வஞ்சி:27/69

குமரியின் அழகிய பெரிய துறைக் கண்ணே நீராடி

குமரியாறு கடல் கொள்ளப்பட்டதன் பின்னரே முடத்திரு மாறனால் கடைச்சங்கம் தொடங்கப்பெற்றது. பஃறுளியாறு முதற்கடற்பெருக்கிலே மறைந்தொழிந்தது. குமரியாறு கடலுள் அமிழ்ந்த காலத்தை ஒட்டியே மணிமேகலையுட் கூறப்பட்டபடி காவிரிப்பூம் பட்டினம் கடல் வயமானது.

குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – மது:15/15

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

cape comorin, river kumari, youthhood, virgin. aloe vera

The Kumari river mentioned in Tamil literature as having been once the southern boundary of the Tamil land, and afterwards submerged in the Indian ocean

குமரி
குமரி

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தென் குமரி வடபெருங்கல்
குண குட கடலா எல்லை
தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 70-72

தெற்கே குமரியும், வடக்கே பெரிய இமயமும்,
கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்)
(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக,
– குண, குட கடலா என்பதால் குமரி என்பது கடல் இல்லை, அது குமரியாறு என்பர்.

வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் – புறம் 6/1-4

வடக்கின்கண்ணது பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்
தெற்கின்கண்ணது உட்குந்திறம் பொருந்திய குமரியின் தெற்கும்
கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும்
மேல்கண்ணது பழையதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்
– பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது.
– குமரி என்பதற்கு குமரியாறு – கன்னியாறு என்று பொருள்கொள்வார் ஔவை.சு.து.
– இப்பாண்டியன் காலத்தில் தெற்கில் கடல் இல்லை என்பது அவர் கருத்து.

தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல் – நற் 54/8,9

தழை உடுத்த இள மகளிர் கொய்யுமாறு தழைத்து பூ அரும்பிய இளைய ஞாழலையும்

குமரி வாகை கோல் உடை நறு வீ – குறு 347/2

இளமையையுடைய வாகைமரத்தின் காம்புடைய நறிய பூக்கள்

குமரி மகளிர் கூந்தல் புரைய – புறம் 301/2

மணமாகாத நலங்கனிந்த மகளிருடைய கூந்தல் போல

கற்றாழை
குமரி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *