சொல் பொருள்
கொங்குநாட்டைச் சேர்ந்தவர்
சொல் பொருள் விளக்கம்
கொங்கு நாடு என்பது சேரநாட்டை ஒட்டிய பகுதி. இந்தக் கொங்கர்கள் யாருக்கும் அடங்காமல் தனித்து ஆளும் பண்புள்ளவர்கள். எனவே முடியுடை மூவேந்தரும் கொங்கரை அடக்கியாளப் படைகளை அனுப்பி இவர்களைப் பணியவைத்திருக்கின்றனர். பழையன் என்பவனை அனுப்பிச்சோழர்கள் இவர்களைப் பணியவைத்திருக்கின்றனர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A ruling tribe belonging to a place called kongu
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர் வெண் கோட்டு யானை போஒர் கிழவோன் பழையன் வேல் வாய்த்து அன்ன – நற் 10/6-8 என்ற அடிகள் சோழர் இவர்களை வெற்றிகொண்டதை விளக்கும். நார் அரி நறவின் கொங்கர் கோவே – பதி 88/19 என்று சேரமன்னர்கள் பாராட்டப்படுவதால், இவர்களைச் சேரர்கள் வென்ற செய்தி தெரியவரும். வாடா பூவின் கொங்கர் ஓட்டி நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன் – அகம் 253/4,5 என்று பாண்டியர்கள் பாராட்டப்படுவதால், பாண்டியர்கள் இவர்களை வென்ற செய்தி தெரியவரும். வாகை என்ற இடத்தில் இவர்கள் பாண்டியன் தளபதியான அதிகன் என்பவனின் படையினை முறியடித்து வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்ற செய்தியும் கிடைக்கிறது. கூகை கோழி வாகை பறந்தலை பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. கொங்கரை மூவேந்தர்கள் மட்டுமன்றி ஆய் அண்டிரன் என்ற வேளிர்குல சிற்றரசனும் வென்றிருக்கிறான். அண்ணல் யானை எண்ணின் கொங்கர் குட கடல் ஓட்டிய ஞான்றை தலைப்பெயர்ந்திட்ட வேலினும் பலவே – புறம் 130/5-7 இந்தக் கொங்குநாடு மேலைக் கடல்வரை விரிந்திருந்தது என்பதுவும் மேற்கண்ட அடிகளால் பெறப்படும். ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15 சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர் ஆ பரந்து அன்ன செலவின் பல் – பதி 77/10,11 வன்_புலம் துமிய போகி கொங்கர் படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந்நிலக் குரூஉ துகள் – அகம் 79/5-7 என்ற அடிகளால் இவர்களின் நாடு பசுக்கள் நிறைந்தது என்பது பெறப்படும். (ஆ = பசு) சர்க்கரைக்கட்டி கலந்து பயறுகளை வேகவைத்த உணவினை இவர்கள் உட்கொண்டனர். கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/25 (கட்டி= சர்க்கரைக்கட்டி, புழுக்கு = பயறுகளை வேகவைத்தது) இவர்கள் மணியினை இடையில் கட்டிக்கொண்டு தெருக்களில் ஆடிக்கொண்டு உள்ளி என்ற விழாவினைக் கொண்டாடுவர். கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவின் அன்ன – அகம் 368/16-18
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்