Skip to content
சாத்தன்

1. சொல் பொருள்

(பெ) 1. கீரஞ்சாத்தன், ஒரு குறுநில மன்னன், 2.ஒல்லையூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன், வள்ளல், 3. சோழநாட்டுப் பெருஞ்சாத்தன், வள்ளல், 4. சாத்தன் அல்லது சாத்தனார் என்ற பெயர் என்பது புத்தரின் பெயர்களுள் ஒன்று, 5. வாணிகன், 6. ஐயனார், 7. ஐயப்பன்

2. சொல் பொருள் விளக்கம்

  1. இவன் முழுப்பெயர் பாண்டியன் கீரஞ்சாத்தன். இவன் முடிவேந்தன் அல்லன் என்பார் ஔ.சு.து.தம் உரை முன்னுரையில். இவன் பாண்டிவேந்தர்க் கீழ் இருந்த குறுநிலத் தலைவன். கீரன் என்பானின் மகன். ஆவூர் மூலங்கிழார் இவனைப் பாடியுள்ளார் (புறம் 178)
  2. இவன் முழுப்பெயர் ஒல்லையூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன். சாத்தனது பெருமை முற்றும் அவனது போராண்மையிலும், தாளாண்மையிலும், கொடையாண்மையிலும் ஊன்றி நின்றது என்பார் ஔ.சு.து. இவர் சங்ககால அரசர்கள்களில் ஒருவன். இவரது தந்தை ஒல்லையூர் கிழான். இவரது நாடு ஒல்லையூர் நாடு. தலைநகர் ஒல்லையூர். இவன் வல்வேல் சாத்தன் எனப் போற்றப்பட்டான். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் தாக்கிய போரில் இவன் மாண்டான்.
  3. இவன் முழுப்பெயர் சோழநாட்டுப் பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன்(சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்). இவனும் இவனைச் சார்ந்தோரும் அந்நாளில் வேந்தர்க்கு மண்டிலமாக்களும் தண்டத்தலைவருமாய்த் துணைபுரிந்தனர் என்பார் ஔ.சு.து. இவன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவனது தலைநகர் பிடவூர். நக்கீரர் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் என இவனைக் குறிப்பிடுகிறார். இவன் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான்.
  4. பண்டைத் தமிழகத்தில் சாத்தன் என்ற பெயர் புத்தரையே குறித்தது
சாத்தன்
சாத்தன்

அக்காலத் தமிழ்ப் பௌத்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாத்தன் என்ற பெயரைச் சூட்டினர். மணிமேகலையை இயற்றியவர் பௌத்த மதத்தைச் சேர்ந்த சீத்தலைச் சாத்தனார்.

சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்த சாத்தனார் என்பவர் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை என்னும் நூலை எழுதியவராவார். இவருடைய தந்தையார் மதுரையில் கூலவாணிகம் செய்தவர் என்பதை ‘மதுரைக் கூலவாணிகனார் மகனார் சீத்தலைச் சாத்தனார்’ என்ற தொடர் உணர்த்துகிறது. இவரும் கூலவாணிகராக இருந்தவர் என்பதை மணிமேகலைப் பதிகத்தில் வரும் “வளங்கெழு கூலவாணிகன் சாத்தன்” என்னும் அடி தெரிவிக்கிறது.

கூலம் என்றால் நெல், வரகு, சாமை, தினை முதலிய பதினெண் வகைப் பொருட்களுக்கும் உரிய பொதுப்பெயர். சீத்தலை என்னும் ஊர் பெரம்பலூர் அருகில் உள்ளது என்கின்றனர். இளங்கோவடிகளின் சமகாலத்தவரான சாத்தனார், அவருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றத் தூண்டுகோலாக இருந்தவர் இவரே.

சாத்தனார் இயற்றியது என்ற பெயரில் சங்க இலக்கியத் தொகைநூற் பாடல்கள் சில காணப்படுகின்றன. ஆனால் மணிமேகலை பாடிய சாத்தனாரும் தொகைநூற் சாத்தனாரும் வேறானவர்கள் என்பது அறிஞர் கருத்து

சாத்தனார் என்ற பெயருக்கு மலையாளத்தில் ஐயப்பன் என்ற அர்த்தமும் உண்டு என்கிறார் பௌத்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.

சாத்தன்
சாத்தன்

சாத்தன் என்ற சொல்லுக்கான தமிழ்ச் சொல் ஐயன் அல்லது ஐயனார். இதற்குக் குரு, ஆசான், உயர்ந்தவர் என்று அர்த்தம்.புத்தருக்கு சாக்கிய முனி என்றொரு பெயர் உண்டு.

ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல்கள், அகநானூறு (324, 384) , குறுந்தொகை (126, 139, 186, 220 மற்றும் 275), புறநானூறு (279)

சாத்து என்னும் வணிகர் கூட்டத்தில் ஒருவனைச் சாத்தன் எனக் குறிப்பிடுவது தமிழ்நெறி. சங்ககாலப் புலவர்களில் பலர் சாத்தனார் என்னும் பெயர் பூண்டு வாழ்ந்தனர்.

  1. அழிசி நச்சாத்தனார்
  2. ஆடுதுறை மாசாத்தனார்
  3. ஆலம்பேரி சாத்தனார்
  4. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
  5. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
  6. ஒக்கூர் மாசாத்தனார். அகநானூறு 14, புறநானூறு 248, இவரது பாடல்கள்
  7. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
  8. கருவூர்ச் சேரமான் சாத்தன்
  9. கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
  10. சாத்தனார்
  11. சீத்தலைச் சாத்தனார்
  12. செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
  13. தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
  14. பிரான் சாத்தனார், நற்றிணை 65, இவரது பாடல்.
  15. பெருஞ்சாத்தனார். குறுந்தொகை 263, இவரது பாடல்.
  16. பெருந்தலைச் சாத்தனார்
  17. பெருந்தோள் குறுஞ்சாத்தன்(பெருந்தோட் குறுஞ்சாத்தன்). குறுந்தொகை 308, இவரது பாடல்.
  18. பேரிசாத்தனார்
  19. மோசி சாத்தனார். புறநானூறு 272, இவரது பாடல்.
சாத்தன்
ஐயப்பன்

வணிகர்களின் கூட்டத்தைக் குறிக்க ‘வணிகச் சாத்து’ என்ற சொல் உண்டு. தமிழகத்தில் சாத்தனின் வடிவமான ஐயனார் கோயில்கள் கண்மாய் கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் அமைந்திருக்கும். யானை, குதிரை, நாய் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று இந்த இடங்களில் ஐயனாரின் வாகனங்களில் ஒன்றாக இருக்கும். நெல்லை மாவட்டத்தில் உள்ள மறுகால்தலை என்ற இடத்தில் உள்ள கோயிலில் சாத்தனுக்கு பூரணை, புஷ்கலை என்ற இரு மனைவியர் உண்டு. எனவே, சாத்தன் பிரம்மச்சரிய கடவுள் என்றெல்லாம் கற்பிக்கப்படுவது பிறகு வந்தது. கேரளத்திலும் காவுகள் என்று சொல்லப்படும் சாஸ்தா கோயில்கள் பல இடங்களில் உண்டு.

தமிழகத்தில் உள்ள சாத்தன் சிலைகள் இடது காலை குத்துக்காலிட்டும், வலது கால் தொங்கும் வகையிலும் கையில் சாட்டையோடு இருக்கும். ஐயப்பன் சிலை இரண்டு கால்களும் குத்துக்காலிட்டபடி இருக்கும்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain with the name keeranjsaaththan

a philanthropist of Pandiya country in sangamperiod

a philanthropist of chozha country in sangamperiod

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஐயப்பன்
சாத்தன்

மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணாராயினும் தன்னொடு சூளுற்று
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன்
ஈண்டோர் இன் சாயலனே – புறம் 178/3-6

இடு மணல் மிக்க முற்றத்தின்கண் புக்க சான்றோர்
அப்பொழுது உண்ணாராயினும் தன்னுடனே சார்த்திச் சூளுற்று
உண்மின் என்று அவரை வேண்டிக்கொள்ளும் பெரிய பெயரையுடைய சாத்தன்

வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே – புறம் 242/5,6

வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு
முல்லைய்யாய நீயும் பூக்கக் கடவையோ அவனது ஒல்லையூர் நாட்டின்கண்

ஐயனார்
ஐயனார்

சிறுகண் யானை பெறல் அரும் தித்தன்
செல்லா நலிசை உறந்தை குணாது
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும – புறம் 395/18-21

சிறிய கண்ணையுடைய யானைகளையுடைய பெறுதற்கரிய தித்தன் என்பானுடைய
கெடாத நல்ல புகழையுடைய உறையூர்க்குக் கிழக்கே
நீண்ட கையையுடைய வேண்மானுக்குரிய அரிய காவல் பொருந்திய பிடவூரிலுள்ள
அறத்தாலுண்டான புகழையுடைய சாத்தனுக்குக் கிணப்பொருநராவோம் பெருமானே

அவன் உழை இருந்த தண் தமிழ் சாத்தன்
யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் – புகார்: 0/10,11

கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் – புகார்:0/89

மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு அ சாத்தன்
அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – புகார்: 9/23,24

தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் – வஞ்சி:25/66

நீ வா என்றே நீங்கிய சாத்தன்
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – வஞ்சி: 30/87,88

கடவுள் சாத்தனுடன் உறைந்த – வஞ்சி:29/54

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *