Skip to content

சொல் பொருள்

(பெ) மிருதங்கம் போன்ற ஒரு தோற்கருவி

சொல் பொருள் விளக்கம்

மிருதங்கம் போன்ற ஒரு தோற்கருவி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a kind of drum

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தோலை மடித்துப்போர்த்த வாயை உடையது.

மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 144

(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க

நெல் அறுவடையின்போது பறவைகளையும், விலங்குகளையும் விரட்ட ஒலிக்கப்படும்.

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 471,472

வெண்ணெல்லை அறுப்போரின் முழவு(எழுப்பும் ஓசை)க்குப் பயந்து, சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த (ஒற்றை)எருமைக்கடா

இதன் ஒலி தழங்கு குரல் எனப்படும், ஒன்றுகூடிய மேகங்கள் உறுமுகின்ற சத்தத்தை ஒக்கும்

மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட
எருவை சேவல் கிளை_வயின் பெயரும் – நற் 298/3,4

மடித்துவிட்ட வாயையுடைய தண்ணுமைப் பறையின் முழங்குகின்ற ஓசையைக் கேட்ட பருந்தின் சேவல் தன் சொந்தங்களை நோக்கிப் பறந்து செல்லும்.

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும் – – பதி 90/41,42

வயல்வெளிகளிலிருக்கும் உழவர்கள் தண்ணுமையை முழக்கினால் நீர்நிலைகளில் வாழும் மயில்கள் மேகங்களின் முழக்கம் என்று எண்ணி ஆடுகின்ற,

இதனுடைய வாய் பெரிதும் அகலமாக இருக்கும். இதன் ஒலி அருவிநீர் விழுவதுபோன்று இருக்கும்.

பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன
அருவி இழிதரும் பெரு வரை நாடன் – நற் 347/6,7

அகன்ற வாயையுடைய தண்ணுமைப் பறையின் முகப்பைத் தட்டுவது போன்று அருவிகள் ஒலித்துக்கொண்டு இறங்கும் பெரிய மலைகளையுடைய நாட்டினன்

ஊர் ஊராகச் செல்லும் வணிகர் கூட்டம், ஓர் ஊருக்குச் சென்றால், முதலில் இதனை ஒலிப்பர்.

சாத்து வந்து இறுத்து என
வளை அணி நெடு வேல் ஏந்தி
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலே – குறு 390/3-5

வணிகர்கூட்டம் வந்து சேர்ந்ததாக வளையை அணிந்த நெடிய வேலை ஏந்தி, காவற்காட்டில் வந்து மீள்கின்ற தண்ணுமை என்னும் முரசொலி

இது கையினால் அடித்து முழக்கப்படும்.

தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை
கைவல் இளையர் கை அலை அழுங்க – பதி 51/33,34

உன் வலிமையான அம்புகள் பாய்ந்து கிழித்த, பகைவரின் கரிய கண்ணையுடைய தண்ணுமையை, இசைக்கும் தொழிலில் வல்ல இளையர்கள் கையால் தட்டி இசைப்பதைத் தவிர்க்க,

இது தோலால் போர்த்தப்பட்டிருக்கும். போரின் தொடக்கத்தைக் குறிக்க இது ஒலிக்கப்படும்.

போர்ப்பு_உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15

தோலால் போர்க்கப்பட்ட தண்ணுமையின் மிகுந்த ஓசை எழுந்து போரைத் தெரிவிக்க,

திருமண வீட்டில் இதனை ஒலிப்பர்.

நெருநை அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும்
உடல் ஏறு கோள் சாற்றுவார்
ஆங்கு இனி
தண்ணுமை பாணி தளராது எழூஉக – கலி 102/30-34

இதற்கு முன்பும் கொலைவெறியுள்ள காளையின் கழுத்தை அணைத்துக்கொண்டவர்களைக் கண்டிருக்கின்றனர்! இன்றும் சீற்றங்கொண்ட காளையைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று பறை சாற்றுகின்றனரே! அங்கே இப்பொழுது
மணம்செய்வதற்குத் தண்ணுமையில் தாளம் தவறாமல் எழுப்புவார்களாக,

இதன் முகப்பு வாரினால் இழுத்துக்கட்டப்பட்டிருக்கும். பாலை நிலத்துக் கள்வர் ஊரில் உள்ள மாடுகளைத்
திருடிக்கொண்டு தமது ஊர் திரும்பிய பின்னர் இதனை ஒலித்து மகிழ்வர்.

வேட்ட கள்வர் விசி_உறு கடும் கண்
சே கோள் அறையும் தண்ணுமை – அகம் 63/17,18

வேட்டையாடும் கள்வரின், வாரினை இழுத்துக்கட்டிய கடிய கண்களையுடைய, காளைகளைப் பிடிக்கும்போது அடிக்கும் பறையின் ஒலி

பாலை நிலத்தில் அரண்களை எழுப்பிக்கொண்டு ஆறலைக் கள்வர் இதனை ஒலிப்பர். இதனைக் கேட்டு வழிச்செல்வோர் அஞ்சி நடுங்குவர்

கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடம் கண் பாணி
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் – அகம் 87/7-10

கொடுமையையுடைய மறவரது கற்கள் பொருந்திய காட்டரண்களில் எழுந்த தண்ணுமைப் பறையின் அகன்ற கண்ணிலிருந்து எழும் ஒலி அரும் சுரம் செல்வோர்நெஞ்சு நடுக்குற ஒலிக்கும் குன்றினைச் சேர்ந்த கவர்த்த நெறிகளையுடைய காட்டில்

ஊருக்குப் பொதுவான மன்றத்தில் இது தொங்கவிடப்பட்டிருக்கும்.

பொதுவில் தூங்கும் விசி_உறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின் – புறம் 89/7,8

பொதுமன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இழுத்துக்கட்டப்பட்ட தண்ணுமை காற்று அடிப்பதால் எழுப்பும் தெளிந்த ஓசையையுடைய கண்ணின்கண் ஒலியைக்கேட்டால்

இந்தத் தண்ணுமையை இயக்குபவர் புலையர் எனப்பட்டனர்.

மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே – புறம் 289/10

தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையை ஒலிக்கும் புலையனின் குரல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *