Skip to content
துணங்கை

துணங்கை என்பதன் பொருள், கைகளை முடக்கி விலாப்பக்கங்களில் சேர்த்து அடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து,

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) கைகளை முடக்கி விலாப்பக்கங்களில் சேர்த்து அடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து. குரவை, துணங்கை, தழூஉ – ஆட்டங்கள் பழங்கால மகிழ்ச்சி விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்கவை.

துணங்கைக் கூத்து என்பது பண்டைத் தமிழகத்தில் மகளிர் ஆடிய ஒரு ஆடல் வடிவம் ஆகும். பெண்கள் பலர் கூடிக் கை கோர்த்து ஆடும் கூத்து இது. இளம் பெண்கள் இறை வழிபாட்டோடு தொடர்புடையதாக இதனை ஆடியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

குரவை என்பது கைகோத்து ஆடப்படும்.

துணங்கை என்பது முடக்கிய கைகளால் விலாவில் புடைத்து ஆடப்படும். துணங்கை ஆட்டம் தோளை உயர்த்தியும் ஓச்சியும் ஆடப்படும்.

தழூஉ என்பது அடுத்தவர் தோளையோ இடுப்பையோ தழுவிக்கொண்டு ஆடப்படும்.

கூத்தின் தன்மையினைப் பின்வருமாறு அறியலாம். எ.டு : வள்ளிக் கூத்து, துணங்கைக் கூத்து.

இத்துணங்கைக் கூத்தானது இசையொலிக்கு ஏற்ப நடத்திக்காட்டப்பெறும்.

‘இணையொலி இமிழ் துணங்கை’
என்ற மதுரைக்காஞ்சிப்     பாடல்     வரி இதனைப் புலப்படுத்துவதாய் உள்ளது.

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

A kind of dance in which the arms bent at the elbows are made to strike against the sides

துணங்கை
துணங்கை

3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அடுத்து ஆடிக்கொண்டு வருவோரைத் தழுவிக்கொள்ளுதலும் உண்டு.

நற்றிணையில், பரத்தை காரணமாகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் சிலநாட்களின் பின் மீண்டும் தலைவிமேல் மோகங்கொண்டு, பாணனைத் தூது விடுக்கின்றான். அதற்குத் தோழி, பாணனிடம் 'தலைவி, தலைவனை ஏற்பதற்கு விரும்பாள்' என அவன் வருகைக்கு மறுபு;புத் தெரிவித்தாள். தலைவன் குண்டலம் அணிந்து, கோதை சூடி, பல வளையல்களை அணிந்து, பெண்மைக் கோலம் தாங்கிச் சேரிப் பரத்தையரோடு துணங்கைக் கூத்தாடியிருந்தான் என்று மருதம் பாடிய இளங்கடுங்கோ என்னும் புலவர் பாடியுள்ளார்.

அறியா மையின், அன்னை! அஞ்சிக்
குழையன் கோதையன் குறும் பைம் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல – நற் 50/2,3

நம் தலைவன் இளந்தளிர்களையும், மாலையையும், குறிய சிறிய வளையல்களையும் கொண்டவனாய்
(சேரி)விழாவில் கொண்டாடும் துணங்கைக் கூத்தில் (பரத்தையரைத்)தழுவிக்கொள்ளுதலை கையகப்படுத்தச் சென்றபோது

முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக – பதி 52/14

முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்தில் தழுவியாடுவோருக்குத் துணையாக

பெரும்பாலும் மகளிர் ஆடுவது.

மள்ளர் குழீ இய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோ ராடுகள மகளே என்னைக்
கோடீ ரிலங்கு வளைநெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே – குறு 31/1-3 - ஆதிமந்தியார்.

மறவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும்,
மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும்,
எங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை!

இன்னொரு பாடலில் வளையல் அணிந்த மகளிர் ஆடுகளத்தில் துணங்கைக் கூத்தாடுவதையும் சிறப்பித்துக் காட்டியுள்ளார் ஒளவையார்.      
                      
'வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண் அவர்
மணம்கொளற்கு இவரு மள்ளர் போரே.' -  (364-5-8) 

ஆடும்போது பாடல் இசைப்பதும் உண்டு.

தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே – கலி 70/14

சுற்றத்தார் பாடும் துணங்கைக் கூத்துப் பாடலின் ஆரவாரம் வந்து அத் தூக்கத்தைக் கலைக்கும்;

விடியும்வரை பரத்தையர் சேரியில் சுற்றிவிட்டு, அதன்பின் வீடுவந்த தலைவனை, 'நீ வந்துவிட்டாய், அதுவே போதும், நின் பரத்தையர் வருந்துவர், அங்கேயே மீண்டும் போவாயாக!' என்று தலைவி அவனை ஒதுக்கி வைத்தாள். இன்னும் கேள், 'இங்கே அணைபோன்ற என் தோள்கள் வாடி வதங்க, யானும் கிடந்து வருந்துகின்றேன். பரத்தையரோடு கூடி மகிழ்ந்து விட்டு, அச்சின்னங்களோடு நீயும் வந்துள்ளாய். பரத்தையரோடு கூடிக்கலந்து நீர் விளையாடினாயென்று பிறர் வந்து கூறினர். அது என்னைச் சுட்டு வருத்தியது. உன் மாலையை எவளுக்கோ அணிந்துவிட்டு, அவள் தலைக் கோதையை அணிந்துள்ளாய். ஏன்னைப் பிரிந்தாய். நான் வருந்திக் கிடக்க, பரத்தையரோடு துணங்கைக் கூத்தும் ஆடினாயென்றும் அறிந்தேன். உன் பரத்தையருக்கு மிகவும் வேண்டிய பாகன் தேரோடு வெளியில் காத்திருக்கின்றான். நீ காலம் கடத்தினால் அவன் உன்னையும் விட்டுச் சென்று விடுவான். அதனால் நீ பரத்தையரிடம் போய் வருக!' என்று கூறினாள்.

'அணைமென்தோள் யாம்வாட, அமர்துணைப் புணர்ந்து நீ,
மணமனையாய்! எனவந்த மல்லனின் மாண்புஅன்றோ –
பொதுக்கொண்ட கவ்வையின் பூவணிப் பொலிந்தநின்
வதுவைஅம் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை;
கனலும் நோய்த்தலையும், 'நீ கனங்குழை அவரொடு
புனல்உளாய்' எனவந்த பூசலின் பெரிதன்றோ –
தார்கொண்டாள் தலைக்கோதை தடுமாறிப் பூண்டநின்
ஈர்அணி சிதையாது, எம்இல்வந்து நின்றதை;
தணந்ததன் தலையும், 'நீ தளர்இயல் அவரொடு
துணங்கையாய்' எனவந்த கவ்வையின் கடப்பன்றோ-
ஒளிபூத்த நுதலாரோடு ஓரணிப் பொலிந்தநின்
களிதட்ப வந்தஇக் கவின்காண இயைந்ததை;
என வாங்கு;
அளிபெற்றேம், எம்மைநீ அருளினை;  விளியாது
வேட்டோர் திறத்து விரும்பியநின் பாகனும்
'நீடித்தாய்' என்று, கடாஅம், கடும் திண்தேர்;
பூட்டு விடாஅ நிறுத்து.'  - - (மருதக்கலி. 1-9-25)

தன் தலைவி   ஏதும் அறியாதவள் என்று நினைத்த தலைவன் துணிவுடன் வந்து 'மனத்தில் தீதிலன் யான்' என்று கூறி அவளை ஏமாற்ற நினைக்கிறான். ஆனால் தலைவி 'நீ பரத்தையருடன் சென்றாய். உன் மார்பிலே தோன்றும் சந்தனம் உன்னைக் காட்டிக் கொடுத்து விட்டதே. நீ பரத்தையரோடு ஆடிய துணங்கைக் கூத்தினால், கரை கிழிந்துபோன உன் ஆடை உன்னைக் காட்டிக் கொடுக்கின்றதே. என்னைப் பற்றிக் கவலைப்படாதே. உன்னைக் காணாது பரத்தையர் வருந்துவர். எனவே நீயும் அவர்களை நாடிச் செல்வாயாக!' என்று கூறி முடித்தாள் தலைவி.

'மனத்தில் தீதிலன்' என மயக்கிய வருதிமன்- 
அலமரல் உண்கண்ணார் ஆய்கோதை குழைந்தநின்
மலர்மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால்?
என்னைநீ செய்யினும், உரைத்தீவார் இல்வழி,
முன்அடிப் பணிந்து, எம்மை உணர்த்திய வருதிமன்-
நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ளக்,
கரையிடைக் கிழிந்தநின் காழகம் வந் துரையாக்கால்?
என வாங்கு   
மண்டுநீர் ஆரா மலிகடல் போலும்நின்
தண்டாப் பரத்தை தலைக்கொள்ள, நாளும்
புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி;  மற்று யாம் எனின்,
தோலாமோ, நின்பொய் மருண்டு?' - - (மருதக்கலி, 8-11-22)

பசுக்கள் கூட்டமாக மேயும் இடங்கள், ஆரல் மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம் நிறைந்த வயல்கள், அங்கே எருமைகள் கிடந்து புரண்டு வயலைச் சேறாக்கி விதையிட ஏற்றதாக்கி வைத்துவிடும். கரும்புப் பாத்திகளில் நெய்தல் பூக்கள் பூத்துக் குலுங்கும். இவற்றை எருமைக் கூட்டம் உணவாக்கிக் கொள்ளும். இளமகளிர் ஆடும் துணங்கைக் கூத்தின் ஆரவார ஒலி ஒருபக்கம் கேட்டபடி இருக்கும்.

'தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,
ஏறு பொருத செறு உழாது வித்துநவும்,
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங் கண் எருமை நிரை தடுக்குநவும்,
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்..  .. பதிற்றுப்பத்து (13-1-5)

போரில் புறமுதுகு காட்டி ஓடாத பகைமன்னர் ஆற்றல் அழிந்து வீழ்ந்தனர். அவர்கள் உடலிலிருந்து செங்குருதி, மன்னன் சேரலாதன் மேல் தெறிக்க, அவன் சூடியிருந்த பனம்பூ மாலையும்,, அணிந்திருந்த வீரக் கழலும் இரத்தம் படிந்து புலால் நாற்றம் வீசப் போர்க் களத்தில் வீரர்களோடு துணங்கை என்னும் வெற்றிக் கூத்தாடினான்.

'ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப,
குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,
துணங்கை ஆடிய வலம் படு கோமான்' – பதிற்றுப்பத்து (57-1-4)

காவல் பூதத்து வாயிலிலே அமைந்த பலிபீடுகையில் புழுக்கலும்;, நிணச்சோறும், பூவும், புகையும், பொங்கலும் படைத்து மறக்குடி மகளிர் துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் ஆடுவர்.

'காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப், -
புழுக்கலும், நோலையும், விழுக்குடை மடையும்,
பூவும், புகையும், பொங்கலும், சொரிந்து;
துணங்கையர், குரவையர், அணங்கு எழுந்து ஆடிப்;'  - சிலப்பதிகாரம் (5-67-70)

பேய்களும் துணங்கைக் கூத்து ஆடுவதாகச் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறுகின்றார். போர் தொடுத்துள்ள செய்தி, பசியால் வாடித் துடிக்கும் பிணம் தின்னும் பேய்களுக்கு உணவு கிடைத்து விட்டது என்று ஆடிப்பாடி மகிழ்ச்சியடைந்தன. சில பேய்கள் தம் கைப் பிள்ளைகள் நிலத்தில் விழுந்து விடுமாறு பெரிய துணங்கைக் கூத்தை ஆடின. வள்ளைப் பாட்டைப் பாடியும், ஆடியும், ஓடியும் மற்றப் பேய்களைத் தம்முடன் விளையாட வருமாறும் கூப்பிட்டன.

'பிள்ளை  வீழ  வீழவும்
பெருந் துணங்கை கொட்டுமே;
வள்ளை, பாடி, ஆடி, ஓடி
'வா' என அழைக்குமே.'  - கலிங்கத்துப் பரணி (310)


நிணம் தின் வாயள் துணங்கை தூங்க - திரு 56

துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் - பெரும் 235

துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு - பெரும் 459

இணை ஒலி இமிழ் துணங்கை சீர் - மது 26

துணங்கை அம் சீர் தழூஉ மறப்ப - மது 160

துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி - மது 329

விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல - நற் 50/3

துணங்கை நாளும் வந்தன அ வரை - குறு 364/6

கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் - பதி 13/5

பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி - பதி 45/12

துணங்கை ஆடிய வலம் படு கோமான் - பதி 57/4

கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின் - பதி 77/4,5

முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் - அகம் 336/16

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *