Skip to content

சொல் பொருள்

சொல், கூறு, சொடுக்குப்போடு, குறிசொல், சைகையால் அழை, இசையில் காலவரை காட்டும் ஒலி, ஓசை,

விடுகதை, பள்ளம்

சொல் பொருள் விளக்கம்

நொடி என்பது விடுகதை. கதை நொடி என்பது இணைச்சொல். நொடித்தல் பதில் கூறுதலாகும். நொடி என்பது பள்ளம் என்னும் பொருளில் தென்னக வட்டார வழக்காகும். வண்டியை நொடியில் விட்டுவிடாதே; நொடிப் பள்ளம் இருக்கிறது; பார்த்து வண்டியை ஓட்டு என்பது பெரியவர்கள் இளையவர்க்குக் கூறும் அறிவுரை.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

say, tell, snap by joining the thumb with the middle finger, say unknown and wise things, call by signs, Instant, as the time-measure of the snap of the finger, noise

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி
சென்றது நொடியவும் விடாஅன் நசை தர – மலை 544,545

அவனது வெற்றியாலுண்டான பல புகழ்களை அவனது சிறப்பியல்புகளோடு புகழ்ந்து
நீர் அவனிடம் சென்ற காரணத்தையும் முற்றக் கூறவும் பொறாதவனாய்

செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர – அகம் 337/13

குருதியால் சிவந்த கோலாகிய அம்பினையுடைய அவர்கள் கையை சொடுக்குப்போட்டுக்கொண்டு புறம்போக

துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 459,460

துணங்கைக்கூத்துடைய அழகிய இறைவிக்குப் பேய்மகள் குறிசொன்னாற் போன்று,
குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி,

அலையா உலவை ஓச்சி சில கிளையா
குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள் மடந்தை – நற் 341/4-6

அங்குமிங்கும் ஓடி, காய்ந்த குச்சியை எடுத்து அடிக்க ஓங்கிக்கொண்டு, சில சொற்களைக் கூறிக்கொண்டு இருக்கும்
குன்றக் குறவனின் மகனைச் சிறிய சைகையால் அழைக்கும்
நல்ல துணையை உடையவள் தலைவி!

கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி
நொடி தரு பாணிய பதலையும் பிறவும் – மலை 10,11

அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,
காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்

கவை முட கள்ளி காய் விடு கடு நொடி
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் – குறு 174/2,3

கவைத்த முள்ளையுடைய கள்ளியின் காய் வெடிக்கும் கடிய ஒலிக்கு
நெருக்கமான மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய புறாக்கள் அஞ்சியோடும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *