Skip to content

சொல் பொருள்

(வி) 1. குளிர், 2. நடுங்கு, 3. குளிரால் நடுங்கு, 4. நடுங்கச்செய், நடுக்கு,

(பெ) 1. குளிர்ச்சி, 2. உறைந்த நீர், 3. மஞ்சு, 4. கண்ணீர், 5. குளிர், 6. பனிக்காலத்துக்குளிர்ச்சி, 7. குளிர்ந்த நீர்த்துளி, 8. காய்ச்சல்

சொல் பொருள் விளக்கம்

பனி என்பது குளிரா, வெதுப்பா? பனிகுளிர் என்போம். ஆனால் அது வெப்பமானதே. எப் பொருள் எத்தன்மைத் தாயினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு, என்பதன்படி தோற்றம் ஒன்றாகவும் உண்மை ஒன்றாகவும் இருத்தல் உண்டு. பனி என்பதற்குக் ‘காய்ச்சல்’ என்னும் பொருள் குமரி மாவட்ட வழக்கில் உள்ளமை எண்ணத்தக்கது. குளிர் காய்ச்சல் இல்லையா!

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become cool, tremble, shiver, cause to tremble, coolness, snow, ice, mist, fog, tears, chill, cold, coldness is winter / dewy season, dew

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புது பெயல் பொழிந்தென – நெடு 1,2

உலகம்(எல்லாம்) குளிரும்படியாக, வலப்புறமாக வளைந்து (எழுந்திருந்து),
(பருவம்)பொய்யாத மேகம் (கார்காலத்து முதல்)மழையைப் பெய்ததாக,

அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை – முல் 79

பகையரசு இருந்து நடுங்கும் முரசு முழங்கும் பாசறையில்

மடதகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1

மெல்லிய தகைமையுடைய கரிய மயில் குளிரால் நடுங்குமென்றுஅருள்செய்து

அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர் – நற் 99/3

அச்சம் தரும்படி நடுக்குகின்ற கொடுமையான பாலை நிலக்காட்டில் சென்றோர்

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45

பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று

பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள் – சிறு 240

பனி படர்ந்த மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய,

கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க – பெரும் 328,329

கொன்றையின் அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளில் பனிப்படலம் தவழ்பவை போல
பசிய மணிகளைக் கோத்த வடங்களையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய

ஆகத்து அரி பனி உறைப்ப – குறி 249

மார்பினில் (கண்களிலிருந்து)அரித்துவிழும் நீர் சொட்ட

நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 446,447

(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
குளிர் முற்றிலும் விட்டுப்போக இனிதே சேர்ந்து தூங்கி,

கடும் பனி அற்சிரம் நடுங்க – நற் 86/4

கடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில் நம்மைப் பிரிந்து நாம் நடுங்கிநிற்க,

தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர்
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள் – கலி 77/5-7

அழகுள்ள மலர்களையுடைய நீர்நிலையிலுள்ள பறவை வந்து தாக்க, மிகவும் சாய்ந்து வளைந்து,
மிக மிக அருகிலிருக்கும் அந்த மொட்டுக்களின் மேல் அந்தத் தாமரை மலரின்
உள்ளிதழ்களிலிருந்து குளிர்ந்த நீர்த்துளிகளைச் சொட்டும் ஊரினைச் சேர்ந்தவனே கேட்பாயாக!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *