Skip to content

சொல் பொருள்

(வி) 1. பயன்கொடு, 2. கொடு, 3. பெற்றெடு, 4. இயற்று, உருவாக்கு, படை, 5. உண்டாக்கு, விளைவி, 6. பலனாக அமை, விளைவுறு, 7. பசந்துபோ, காதல்நோயினால் நிறம் மங்கு, 2. (வி.அ) மெல்ல, பைய என்பதன் குறை

சொல் பொருள் விளக்கம்

1. பயன்கொடு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be beneficial, give, beget, produce, create, make, cause, yield, result in, turn sallow through affliction;, slowly

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நன் மலை நாடன் பிரிதல்
என் பயக்கும்மோ நம் விட்டு துறந்தே – ஐங் 268/4,5

நல்ல மலைநாடன் பிரிந்து செல்வது
என்ன பயனைத் தருமோ? நம்மைத் தனியே விட்டுவிட்டுத் துறந்து –

நய_தகு மரபின் விய_தகு குமர
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே – பரி 9/82-85

விரும்பத்தகுந்த பண்பினையுடைய வியக்கத்தக்க குமரவேளே!
உன்னை வாழ்த்துகின்றோம்! புகழ்கின்றோம்! தலைகளைத் தாழ்த்தியவராய் உன்னை நாம்
விரும்புதலினால் சிறப்புற்று விழங்கும் எமது அடியுறை வாழ்வானது
நீ எமக்கு அருள்செய்வதனால் சிறந்து விளங்கட்டும் நாள்தோறும் மேலும் மேலும் அழகுபெற்று.

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255

அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்தின செல்வனே

பூ விரி கச்சை புகழோன் தன்முன்
பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில் – சிறு 239-241

பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும்,
பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனன் இயற்றிய நுணுகிய பொருளையுடைய,
சமையல்நூல் (நெறியில்)தப்பாத பலவிதமான அடிசிலை,

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன – பெரும் 83,84

நீண்ட தாளினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்பு காய்த்த
பஞ்சினையுடைய அழகிய பசிய காயின் முதுகு விரிந்து தோன்றினதைப் போன்ற

விரவு பூ பலியொடு விரைஇ அன்னை
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே – அகம் 232/12-15

விரவிய பலவகைப் பூக்களாய பலியுடன் பொருந்து, தாயானவள்
காவல் பொருந்திய அகன்ற மலையின்கண் காத்தலைக் கருதி
வேறுபாடு முருகனால் உண்டாயதென்று வேலனை அழைக்கும்
காலமாக நமக்கு விளைந்தது.

பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே – ஐங் 264/4

பசந்துபோயிருக்கின்றன நீ விரும்பியவளின் கண்கள்.

கை பய பெயர்த்து மை இழுது இழுகி – புறம் 281/3

கையை மெல்ல எடுத்து மையாகிய இழுதினை இட்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *