Skip to content
பாதிரி

பாதிரி என்பது பொன் நிறப்பூ மரவகை

1. சொல் பொருள்

(பெ) 1. அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி மரவகை, 2. வெள்ளைப்பூ, சிவப்புப்பூ, பொன் நிறப்பூ மரவகை; 3. கிருத்துவ போதகர்(Rev. Father)

2. சொல் பொருள் விளக்கம்

அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி எனவும் அழைப்பர்

  1. வழக்கமாக, பங்குனி, சித்திரை மாதத்தில் பூக்கள் பூக்கும்
  2. இம்மரத்தில், பூக்கள் காய்ந்து உதிர்ந்து விடும்; காய் பிடிக்காது.
  3. பண்ணன் வாழ்ந்த சிறுகுடியில் இம்மரங்கள் மிகுதி
  4. இம்மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்
  5. ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும்
  6. பருத்த அடிமரம் கொண்டது. 
  7. மலர் பழுக்கக் காய்ச்சிய தகடு போல் எரிநிறம் கொண்டிருக்கும்
  8. ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போலப் பாதிரியின் தூய மலர் இருக்கும்
  9. காம்பு சிறிதாக வளைந்திருக்கும்
  10. அடிப்பூ கருத்திருக்கும்
பாதிரி
பாதிரி

மொழிபெயர்ப்புகள்

yellow snake tree • Bengali: পারুল parul • Gujarati: પાડેલી padeli • Hindi: पारल paral, पारोली paroli • Kannada: ಕಲಾದ್ರಿ kalaadri, ಪಾದರಿ paadari • Konkani: पाडल paadal • Malayalam: കരിങ്ങഴ karingazha, പാതിരി paathiri, പൂപ്പാതിരി puuppaathiri • Marathi: पाडळ padal, पाडळी padali • Mizoram: zinghal • Oriya: pamphunia • Sanskrit: पाटला patala, पाटलि patali • Tamil: அம்பு ampu, அம்புவாகினி ampuvakini, பாடலம் patalam, பாதிரி patiri, புன்காலி punkali • Telugu: అంబువాసిని ambuvasini, కలిగొట్టు kaligottu, పాదిరి padiri, పాటల patala • Urdu: پارل paral

பாதிரி
பாதிரி

3. ஆங்கிலம்

Purple-flowered fragrant trumpet-flower tree, Stereospermum suaveolens, Bignonia suaveolens;

White-flowred trumpet-flower tree, Stereospermum xylocarpum

Yellow-flowered fragrant trumpet-flower tree, Stereospermum chelonoides;

christian missionary, clergyman

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பாடலம்
பாடலம்
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று_இடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை – பெரும் 4-6

பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
வளமையான இதழையுடைய பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய
உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்;

துகிலிகை அன்ன துய் தலை பாதிரி
வால் இதழ் அலரி – நற் 118/8,9

வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்
வெண்மையான இதழ்களையுடைய மலர்களில்

மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/1,2

கரிய கொடியையுடைய காட்டு மல்லிகைப் பூவுடனே பாதிரியின்
தூய பொன் தகடு போன்ற மலரையும் சேர எதிரெதிர் வைத்துத்தொடுத்துக்கட்டிய மலர்மாலையைச் சூடிய கூந்தலின்

அ. இந்தப் பாதிரி மலர் மிகுந்த மணமுடையது.

போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி – குறி 74

கோங்கப்பூ, மஞ்சாடி மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ

ஆ. பாதிரி மரம் பருத்த அடிமரத்தைக்கொண்டது.

பராரை பாதிரி குறு மயிர் மா மலர் – நற் 337/4

பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,

இ. பாதிரிப்பூ இளவேனில் காலத்தில் பூக்கும்.

வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1

வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று

வேனில் பாதிரி விரி மலர் குவைஇ – ஐங் 361/2

வேனில் பாதிரி கூனி மா மலர் – அகம் 257/1

ஈ. இதன் காம்பு சிறியதாக இருக்கும்.

புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ – அகம் 237/1

புல்லிய காம்பினையுடைய பாதிரியின் வரிகள்பொருந்திய நிறமுடைய திரண்ட மலர்

உ. பாதிரிப்பூ பஞ்சுபோன்ற துய்யினை உச்சியில் கொண்டிருக்கும்.

அத்த பாதிரி துய் தலை புது வீ – அகம் 191/1

பாலையிலுள்ள துய்யினை உச்சியில் கொண்ட புதிய பாதிரிப்பூவை

துகிலிகை அன்ன துய் தலை பாதிரி – நற் 118/8,9

வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரி

ஊ. இதன் புறவிதழ்கள் கருமையாக இருக்கும்.

கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ – அகம் 261/1

காட்டிலுள்ள பாதிரியின் கரிய புறவிதழையுடைய ஒளிபொருந்திய மலர்களை
பாதிரி
பாதிரி
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி/வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் - பெரும் 4,5

போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி/செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம் - குறி 74,75

மா கொடி அதிரல் பூவொடு பாதிரி/தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் - நற் 52/1,2

துகிலிகை அன்ன துய் தலை பாதிரி/வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி - நற் 118/8,9

பராரை பாதிரி குறு மயிர் மா மலர் - நற் 337/4

வேனில் பாதிரி கூன் மலர் அன்ன - குறு 147/1

அம் சினை பாதிரி அலர்ந்து என - ஐங் 346/2

வேனில் பாதிரி விரி மலர் குவைஇ - ஐங் 361/2

குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி/நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை - பரி  12/79,80

அதிரல் பரந்த அம் தண் பாதிரி/உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ - அகம் 99/6,7
அம்புவாகினி
அம்புவாகினி
அத்த பாதிரி துய் தலை புது வீ - அகம் 191/1

புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ - அகம் 237/1

வேனில் பாதிரி கூனி மா மலர் - அகம் 257/1

கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ - அகம் 261/1

பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல் - புறம் 70/14

பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன - புறம் 399/7

நித்தில பந்துடன் ஈன்று பாதிரி
ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால் - சிந்தா:1 52/1,2

ஆடை பூத்தன பாதிரி வெண்கடம்பு பந்து அணிந்தவே - சிந்தா:7 1650/4

மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் - மது:12/83

ஒள் நிற பாதிரி பூ சேர்தலால் புத்தோடு - நாலடி:14 9/3

வரி நிற பாதிரி வாட வளி போழ்ந்து - கார்40:3/1
புன்காலி
புன்காலி
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி - தேவா-சம்:2663/1

கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி
மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் - தேவா-சம்:3183/1,2

பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி - தேவா-சுந்:162/3

வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் - தேவா-சம்:3778/2

செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே - திருமந்:1003/4

பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய் - நாலாயி:184/4

பனி பூம் குவளையொடு பாதிரி விரைஇ - உஞ்ஞை:40/123

பைம் கூன் பாதிரி போது பிரித்து அன்ன - உஞ்ஞை:42/204

நறும் பாதிரியும் நாள் மலர் கொகுடியும் - இலாவாண:12/20

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *