Skip to content

சொல் பொருள்

1. (பெ) 1. குழவி குட்டி முதலியவற்றை ஊட்டத்தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான திரவப் பொருள், 2. வகை, 3. தானிய மணிகளில் ஆரம்ப நிலையில் காணப்படும் குழைவான திரவப்பொருள், 4. பக்கம், 5. ஊழ், விதி, 6. ஆண், பெண் என்ற பகுப்பு, 7. பகுத்தல், 8. தன்மை, இயல்பு, 9. குலம்,

2. (இ.சொ) மீது, மேல், இடம்,

சொல் பொருள் விளக்கம்

1. குழவி குட்டி முதலியவற்றை ஊட்டத்தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான திரவப் பொருள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

milk, class, kind, fluid in grains, side, fate, destiny, sex, dividing, quality, nature, social hierarchy, caste, on, upon, over, towards

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2

நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்

திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/3,4

தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;

ஐம் பால் திணையும் கவினி அமைவர
முழவு இமிழும் அகல் ஆங்கண் – மது 326,327

ஐந்துவகை நிலங்களும் அழகுபெறப் பொருந்துதல் தோன்ற –
முழவு முழங்கும் அகன்ற ஊரில்,

பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 114,115

பால் பிடித்து முற்றி, பலவிதமாய்க் கிளைத்து (அடிக்கும்)காற்றால் ஊடறுக்கப்பட்டு,
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;

காமம் கடையின் காதலர் படர்ந்து
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை
———————– ——————————-
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340

காதல் மிகும்போது காதலரை நினைத்துச் சென்று,
நாம் அவரிடத்தே வருந்தும்போது நம்மோடு ஆகி,
ஒரு பக்கமாகச் சேர்தல் இல்லாது, இரண்டு பக்கமுமாக,
—————————————– ——————————-
வருந்தும் தோழி! தலைவர் இருந்த என் நெஞ்சம்.

பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்_வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/1,2

விதியால்தான் அவளின் காதல் அமைந்தது என்பதன்றி, அவரின்
இயல்பை அளந்து அறிவதற்கு நாம் யாரோ?

புலி கொல் பெண் பால் பூ வரி குருளை – ஐங் 265/1

புலியால் கொல்லப்பட்ட பெண் இனத்தைச் சேர்ந்த பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,

பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் – கலி 96/8

ஐந்து பகுப்பாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும்

பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் – புறம் 183/3,4

பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும்
சிறப்பான தன்மையினால் தாயும் மனம் வேறுபடும்

கீழ் பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன்கண் படுமே – புறம் 183/9,10

கீழ்க்குலத்துள் ஒருவன் கற்றால்
மேற்குலத்துள் ஒருவனும் அவனிடத்தே சென்று வழிபடுவான்

குட காற்று எறிந்த குப்பை வட பால்
செம்பொன்_மலையின் சிறப்ப தோன்றும் – பெரும் 240,241

மேற்காற்றில் (தூவித்)தூற்றின நெற்பொலி, வட திசைக்கண்(உள்ள)
சிவந்த பொன்(போன்ற மேரு) மலையினும் மாண்புடையதாகத் தோன்றும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *