Skip to content

பொதினி என்பது பழனி

1. சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககால ஊர்/மலை

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு சங்ககால ஊர்/மலை. இன்றைய பழனி சங்ககாலத்தில் பொதினி என்று அழைக்கப்பட்டது. இது ஊரையும், ஊரை அடுத்துள்ள மலைக்கும் பொருந்தும். ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி. இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சங்ககால மன்னன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன். மற்றும் வையாவிக்கோப் பெரும்பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசர்கள். பொதினி நகரில் வைரக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்று வந்தது. பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது.
அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a town/hill in sangam period

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவ குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர்-கொல்லோ தோழி – அகம் 1/1-7

வண்டுகள் மொய்ப்பதால் சிதைவுண்ட தலைமாலையையும், ஒளிரும் கழலையும்,
அச்சம்தரும் குதிரைகளையும் உடைய மழவரை ஓட்டிய,
முருகனைப் போன்ற நல்ல போர்த்திறம் கொண்ட நெடுவேள் ஆவியின்
அறுக்கப்பட்ட தந்தங்களையுடைய யானைகளைக் கொண்ட பொதினியில் உள்ள
சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த
சாணைக்கல் போல் (உன்னைப்) ‘பிரியமாட்டேன்’ என்ற சொல்லைத் தாம்
மறந்துவிட்டாரோ! தோழி!

விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலை பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 61/13-18

விழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கட மலையைப் பெறினும்,
அந்த இடம் பழகிப்போய் அங்கேயே தங்கியவராதல் நடவாததாகும் – மிகப் பழமையான,
முரசைப்போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின்
பொன் மிகுந்த பெரிய நகரமாகிய பொதினியைப் போன்ற உனது
ஒளி விளங்கும் அழகிய முலைகளில் பொலிவுற்று விளங்கும்
நுண்ணிய பூணினை அணிந்த மார்பினில் பொருந்துதலை மறந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *