Skip to content
பேகன்

வையாவிக் கோப்பெரும் பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதினி (பழனி) மலைக்குத் தலைவர்

1. சொல் பொருள்

(பெ) 1. சங்ககாலச் சிற்றரசன், கடையெழு வள்ளல்களில் ஒருவன், பே என்னும் சொல் மழைமேகத்தை உணர்த்தும். மழைமேகம் போன்றவன் என்னும் பொருளில் பேகன் என்னும் பெயர் உருவாகியுள்ளது. 2. ஆண் தவளை, 3. மேகம், 4. நுரை, 5. அச்சம், 6. இல்லை;

2. சொல் பொருள் விளக்கம்

வையாவிக் கோப்பெரும் பேகன் சேரர் குடியின் தொடர்புடையவன். இவன் குடி முதல்வன் வேளாவிக் கோமான். சேரன் செங்குட்டுவனது மாற்றாந்தாயின் தந்தையாவான். அஃதாவது சேரன் செங்குட்டுவனுக்குப் பாட்டன் முறையினன். இவன் பொதினிமலைக்குரிய ஆவியர் குலத்தில் தோன்றியவன். 

சங்ககாலச் சிற்றரசன், கடையெழு வள்ளல்களில் ஒருவன். இன்றைய பழனி என்ற ஊருக்கு அந்நாளில் ஆவிநன்குடி என்று பெயர். ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடமாதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் சொன்னார்கள்; அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது. அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். பாரியைப்போல அவனும் ஒரு வேள். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சொல்லுவார்கள். வையாவி ஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது பொருள். ஒரு சிறந்த கொடை வள்ளல்.

மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

A liberal chief of sangam period, one of last seven such chieftains

male frog

no, not

Fear

Foam, scum, froth

cloud.

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது, 
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே. - புறநானூறு 142

மதம் மிக்க யானையினையுடைய கழல் புனைந்த காலையுடைய பேகன்
கொடையிடத்துத் தான் அறியாமைப்படுதலல்லது
பிறர் படை வந்து கலந்து பொரின் அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்

உதவாத இடங்களிலும் பெய்யும் மழை போலப் பேகன் கொடையில் மடையன். ஆனால் படையில் போர் புரியும்போது மடையன் அல்லன்.

மடத்தகை  மாமயில்  பணிக்குமென்  றருளிப்
படாஅ  மீத்த  கெடாஅ  நல்லிசைக்
கடாஅ  யானைக்  கலிமான்  பேக
பசித்து  வாரேம்  பாரமு  மிலமே
களங்கனி  யன்ன  கருங்கோட்டுச்  சீறியாழ்
நயம்புரிந்  துறையுநர்  நடுங்கப்  பண்ணி
அறஞ்செய்  தீமோ  அருள்வெய்  யோயென
இஃதியா  மிரந்த  பரிசிலஃ  திருளின்
இனமணி  நெடுந்தே  ரேறி
இன்னா  துறைவி  யரும்படர்  களைமே. - புறநானூறு : 145

மென்மையும் அழகும் நிறந்த கருநிறத்து மயில் குளிரால் நடுங்குவதாக எண்ணி அருள் செய்து போர்வை கொடுத்து அழியாத நல்ல புகழை பெற்ற, மதம் கொண்ட யானையையும் செருக்குடைய குதிரையை கொண்ட பேகனே! நான் பசியுடன் வரவில்லை; என்னை சேர்ந்துப்பவர்களை காக்கும் பாரமும் இல்லை. களாப்பழம் போன்ற கரிய நிறத்து கிளை உடைய சிறிய யாழை இசையின் தன்மையை புரிந்து ஒன்றுவோரை தலையசைத்துக் கொண்டாடும்படி வாசித்த எனக்கு அறத்தை செய்வாயாக; அருள் புரிய விரும்புவோனே இது நான் வேண்டும் பரிசு. அது, இந்த இரவிலேயே இனமான மணியை உடைய பெரிய தேரில் ஏறிச் சென்று துன்பத்தில் வாழும் உன் மனைவியின் பொறுத்துக்கொள்ள கடினமான பிரிவுத்துயர் களைக.

பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையடு விளங்கக்,
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
யாரீ ரோ?’ என வனவல் ஆனாக்,
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே ; என்றும்
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும்
படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலிமான் பேகன்,
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என
மறுமை நோக்கின்றோ அன்றே,
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே. புறநானூறு - 141

வாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும் 
கடும் பசியோடும் உள்ள இரவலனே! (பாணனே!) 
“ உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! 
நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; 
உங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார்கள். 
விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு, 
நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! 
நீங்கள் யார்?” என்று கேட்கிறாயோ?
வெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு 
முன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். 
இப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம்.
எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும் 
தன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்க யானைகளும் 
செருக்குடைய குதிரைகளும் உடையவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை 
எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன். 
அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது

அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல் துவலை புதல்மிசை நனைக்கும் 15
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே. அகநானூறு - 262

அன்னிமிஞிலி மகிழ்ச்சியில் திளைத்தாள். 
அவளைப் போல நான் மகிழ்ச்சியில் திளைக்கிறேன், என்கிறான் தலைவன்.

பேகன் கொண்டல் மலையின் தலைவன். 
(கோடைமலை என்பது கொடைக்கானல், கொண்டல் மலை என்பது பழனிமலை எனப்படும் பொதினிமலை) 

அருவி முழங்கும் மலை, கொண்டல்மலை. 
அந்த மலையின் மணம் போல ஒரு செய்தி வந்துள்ளது. 
என் காதலி என்னிடம் வருவதாகச் சொல்லிவிட்டாள்.
அதனால் மகிழ்ச்சியில் திளைக்கிறேன், என்கிறான் தலைவன்.

யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி:
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்,
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல் ஊரானே.  புறநானூறு - 144

'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய்,
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
பெயல் கண்மாறிய உவகையர், சாரல்
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க்
கை வள் ஈகைக் கடு மான் பேக!  புறநானூறு - 143

வானம் வாய்த்த வள மலைக் கவா அன் 
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன், 
பெருங் கல் நாடன், பேகனும்; - சிறுபாணாற்றுப்படை 85-87

பருவ மழை தவறாது பெய்யும் வளம்மிக்க மலை நாட்டை உடையவன் பேகன். மயில் காட்டில் அகவியதை இவன் கேட்டான். குளிரால் நடுங்கியே மயில் அகவியது என்று எண்ணினான். அதன் மீது மிகுந்த இரக்கம் கொண்டான். அம் மயில் மீது தன் போர்வையைப் போர்த்தினான்.

முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;    5
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,         10
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர,
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,   15
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்    20
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!          25
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!
இசை மேந்தோன்றிய வண்மையொடு,
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! புறநானூறு 158

முதிரமலை நாட்டு வேந்தே, குமண, ஏழு வள்ளல்களும் இறந்த பின்னர் நாடி வருபவர்களின் வறுமையைப் போக்க நீ இருக்கிறாய் என்று உன்னை நினைத்துக்கொண்டு வந்துள்ளேன். உன் வேல் பகைவரை வென்று மேம்படுவதாகுக.

குமணனுக்கு முன் இறந்துபோன ஏழு வள்ளல்கள்

பாரி: சங்கும் முரசும் முழங்க முற்றுயிட்ட அரசரோடு போரிட்ட பறம்புமலை அரசன்
ஓரி: கொல்லிமலை அரசன்
மலையன்: கருங்குதிரை மேல் வந்து போரிட்டு வென்றவன். மழை போல் வழங்கும் கொடையாளி (காரி)
எழினி: கூர்மையான வேல்வீரன். கூவிளம் பூ மாலை அணிந்தவன்
பேகன்: கடவுள் (பழனிமுருகன்) காக்கும் குகையை உடைய பெருங்கல்-மலை நாட்டு அரசன்.
ஆய்: மோசிக்கீரனாரால் பாடிப் போற்றப்பட்டவன்.
நள்ளி: பகைவர்களை ஓடச்செய்த்தோடு, ஆர்வத்தோடு வருவோரின் அல்லலைப் போக்க மறுக்காமல் வழங்கியவன்

கைவள் ஈகை கடு மான் பேக/யார்-கொல் அளியள் தானே நெருநல் - புறம் 143/6,7
கடாஅ யானை கலிமான் பேக/பசித்தும் வாரோம் பாரமும் இலமே - புறம் 145/3,4
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக/சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல - புறம் 146/2,3
வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன்/கொண்டல் மா மலை நாறி - அகம் 262/16,17
கடாஅ யானை கலிமான் பேகன்/எ துணை ஆயினும் ஈதல் நன்று என - புறம் 141/12,13
கடாஅ யானை கழல் கால் பேகன்/கொடை மடம்படுதல் அல்லது - புறம் 142/4,5
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன்/ஒல்லென ஒலிக்கும் தேரொடு - புறம் 144/12,13
பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண - சிறு 87
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி - புறம் 158/12

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *