சொல் பொருள்
1. (வி) 1. தைத்துமூட்டு, 2. உள்ளடக்கு, பொதி, 3. தீ மூட்டு, 4. மோது, 5. மறை, 6. மூள், தீ, கோபம், ஐயம் முதலியன உருவாகு, 7. நிறை
2. (பெ) 1. பொந்து, 2. குறைபாடு, தவறு
சொல் பொருள் விளக்கம்
தைத்துமூட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stitch, mend, patch, botch, as baskets or bags, hold, contain, light fire, hit, hide, conceal, be stirred up as anger, doubt, get filled, hole, hollow, defect, fault
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொல்லம் பொத்திய பொதி_உறு போர்வை – பொரு 8 இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்து மூட்டிய (மரத்தைத் தன் அகத்தே)பொதிதலுறும் போர்வையினையும்; மாலை அன்னதோர் புன்மையும் காலை கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 96-99 (முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில் கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும், கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி, வலிய வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த (என்)உள்ளம் உவக்கும்படியும், ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட வள மனை பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி அந்தி அந்தணர் அயர கானவர் விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 223-226 ஆம்பல் மலரின் அழகிய இதழ்கள் தளையவிழவும், செல்வம் நிறைந்த இல்லங்களில் பொலிவுள்ள வளையல் அணிந்த மகளிர் விளக்கின் திரியை ஏற்றி அந்திக்கடனை அந்தணர்(போல்) ஆற்ற, காட்டில் வாழ்வோர் வானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கொள்ளிகளை மூட்ட, ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி மையல் மட பிடி இனைய கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே – நற் 114/9-12 மிகுந்த ஓசையுடைய இடியின் பேராரவாரத்தைக் கொண்ட பெருத்த இடிமுழக்கம் பாம்பிற்கு அழகாக விளங்கும் அதன் படத்தை அழிக்கின்ற, உயர்ந்த மலைமேல் மோதிக் கரிய இளம் பெண்யானை வருந்துமாறு தன் துதிக்கையை ஊன்றி இறங்குகின்ற களிற்றினைத் தாக்கிக் கொல்ல கூறுவென் வாழி தோழி முன் உற நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி ஆன்றோர் செல் நெறி வழாஅ சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/6-9 கூறுவேன், வாழ்க, தோழியே! இனி அவன் உன் முன்னால் நிற்கும்போது உன் அன்புடைய நெஞ்சத்தில் இருக்கும் காதலை மறைத்து, ஆன்றோர் செல்லும் வழியில் வழுவாது சான்றோனாக அவன் இருத்தலை நன்கு அறிந்து தெளிந்துகொள்வாயாக. நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால் இறை இறை பொத்திற்று தீ – கலி 145/57,58 நிறைந்த வளையல்களையெல்லாம் தொளதொளக்கச் செய்தவன் செய்த துயரினால் என் உடம்பின் மூலை முடுக்கெல்லாம் மூண்டுநிற்கிறது காமத்தீ! கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை – பதி 16/7,8 மதம் சொரிந்து மிகுதியான கோபம் மூண்டு பகைவரின் கணையமரம், காவல்மரம் ஆகியவற்றை அழிக்கும் இளம் யானைகள் முழங்கும் பாசறை இறை மிசை மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல் வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் காஞ்சி அம் குறும் தறி குத்தித் தீம் சுவை மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடும் சிறை மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பய பார்வல் இருக்கும் .. .. – அகம் 346:1-11 கூரையின் உட்பக்கச் சாய்ப்பின் மேலுள்ள மாரிக்காலத்துச் சுண்ணச் சாந்து பூசிய ஈரமான வெளிப்புறத்தை ஒத்த இறகினையுடைய குறுகக் குறுகப் பறக்கும் கொக்கின் சேவலானது, வெள்ளியாலான வெண்மையான பூவிதழ் போன்ற கயல் மீனைப் பெறுவதற்காக, கள்ளை மிகுதியாக உண்ட களிப்பினால் மிக்க செருக்கினைக் கொண்ட உழவர், காஞ்சி மரத்தின் குறிய துண்டுகளை நட்டு, இனிய சுவையுடைய மெல்லிய தண்டையுடைய கரும்பின் சிறந்த பல கழிகளைக் குறுக்கே வைத்துக் கட்டி பெரிய நெற்பயிரையுடைய வயலில் பசிய பள்ளங்களில் நீரை நிறைத்து, சிரமப்பட்டுச் செய்த, உறுதியான திறப்புக்களின் வளைந்த தடுப்பின் மேலே பொங்கி வழிந்து விரையும் நீரைப் பார்த்து, மெல்ல மெல்லச் சென்றவாறு கூர்த்து நோக்கியிருக்கும் பொத்த அறையுள் போழ் வாய் கூகை – புறம் 240/7 பொந்தாகிய தான் வாழுமிடத்து போழ்ந்தாற்போலும் வாய் அலகையுடைய பேராந்தை பொத்து இல் காழ அத்த யாஅத்து – குறு 255/1 பொந்துகள் இல்லாத வயிரம்பாய்ந்த, பாலை வழியில் உள்ள யாமரத்தின் கோழியோனே கோப்பெருஞ்சோழன் பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ வாய் ஆர்பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/8-10 உறையூர் என்னும் படைவீட்டில் இருந்தான் கோப்பெருஞ்சோழன் குறைபாடு இல்லாத நட்பினையுடைய பொத்தி என்னும் புலவனோடு கூடி மெய்ம்மை ஆர்ந்த மிக்க மகிழ்ச்சியை நாள்தொறும் மகிழ்ந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்