பொருநை என்பது தண்பொருநை ஆறு
1. சொல் பொருள்
(பெ) தண்பொருநை ஆறு
2. சொல் பொருள் விளக்கம்
பொருநை
என்பது ஒப்பில்லாப் பெருமை என்ற பொருள் பெறும். பொரு= பொருந்துதல்/ ஒப்புமை . பொருநை = ஒப்பில்லாப் பெருமை. தண்மை = குளிர்மை
தென் தமிழ்நாட்டில் தண்பொருநை என்னும் தாமிரவருணி ஆறு மேற்கே பெரிய பொதிகை என்னும் அகத்தியர் மலையிலே தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடி கிழக்கே மன்னார் வளைகுடாக் கடலிலே கலக்கின்றது.
பொதிகை மலையில் இருந்து இரண்டு பொருநை ஆறுகள் வழிகின்றன, ஒன்று கேரள நாட்டின் வழியே மேற்கே அரபிக்கடலில் போய்க் கலக்கின்றது. அதன் பெயர் ஆன்பொருநை. மற்றொன்று நெல்லை மாவட்டத்தை செழிப்பூட்டிச் சென்று மன்னார் வளைகுடாக் கடலில் போய் மண்டுகின்றது. இதன் பெயரே தண்பொருநை ஆகும்
- நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழியிலே, இந்த ஆறு பொருநல் என்று வழங்கப்பெற்றுள்ளது
- முக்கூடல் பள்ளு என்னும் சிற்றிலக்கியத்திலே பொருநையாறு பெருகிவர புதுமை பாரும் பள்ளீரே! என்று புலப்படுத்தப் பெற்றுள்ளது
- கம்ப ராமாயணம் “பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை” என்று காட்டுகின்றது
- இராசராச சோழன் உலா “பொருநை” என்று புகழ்ந்துள்ளது
- பரஞ்சோதி முனிவர் ஆக்கிய திருவிளையாடற் புராணம் பொதிகை என்னும் மலை மடந்தை, “பெருகு தண்பொருநை” என்னும் நீத்தம்(வெள்ளம்) மிகு மகளைச் செவிலிபோல் வளர்க்கும் என்று புனைந்துரைத்து உள்ளது.
- குமரகுருபர அடிகள் அருளிய மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், ‘பொருநைத் துறைவன் பொற் பாவாய், புதுநீர் ஆடி அருளுகவே என்று புகன்றுள்ளது.
- பகழிக்கூத்தர் வழங்கியுள்ள ‘திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்’ என்னும் நூல், ‘தண்பொருநை பேராற்றிலே, தமிழ் நாகரீகம் மணக்கும்.என்ற கருது புனைந்துரைக்கப் பெற்றுள்ளது
- பாரதியார் இந்த ஆற்றை தமிழ் கண்ட தண் பொருநை என்று உறுதி செய்துள்ளார்
பொருநை அல்லது தன்பொருனை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது.
பொதிகை மலையிலிருந்து உருவாகி பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி.
‘தண்பொருநை‘, ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘தண் பொருத்தம்‘, ‘தாமிரபரணி‘ என இலக்கியங்களும், ‘தண்பொருந்த ஆறு‘, ‘தண் பொருத்தப் பேராறு‘, ‘முடி கொண்ட சோழப் பேராறு‘ என்று கல்வெட்டுகளும் இன்றைய தாமிரபரணி ஆற்றினைச் சுட்டுகின்றன. இந்நதிக் கரையில்தான் ஆதிச்சநல்லூரும், கொற்கையும் பழந்தமிழர் நாகரிகத்தினை வளர்த்துள்ளன. கீழ்வேம்ப நாட்டுத் திருநெல்வேலி, குலசேகரச் சதுர் வேதிமங்கலம் எனக் கல்வெட்டுகள் கூறும் திருநெல்வேலியும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பழம்பெருமை மிக்க ஊராகும். திருநெல்வேலி பகுதியைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் பனைமரம் மிகுதி. அதனால் இங்குள்ள மக்கள் தமிழ் இலக்கியங்களையும் பிறகலைகளையும் பனை ஒலைகளில் பதிவு செய்து பாதுகாத்துள்ளனர்.
சங்க இலக்கியங்கள் தாமிரபரணியை ‘தன் பொருநை’, ‘பொருநை’ என்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் பிறந்த நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் தாமிரபரணியை ‘தன்பொருநல்’, ‘வண்பொருநல்’ என்கிறார். சிலப்பதி காரம் சேரனை,‘பொருநை பொறையன்’ என்று போற்றுகிறது. பெரிய புராணத்தில் சேக்கிழார் பாண்டிய நாட்டை ‘தன்பொருநைப்புனல் நாடு’ என்கிறார்.
‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருநதி’ என்கிறார் கம்பர். ‘அழகர் கருணைப்போல பொருநை பெருகிவரும் அழகைப் பாரும் பள்ளீரே’ என்கிறது முக்கூடற்பள்ளு. ‘தமிழ் கண்டது வைகையும் பொருநையும்’ என்கிறார் பாரதியார். முதல் ராஜராஜன் காலமான 1013-ம் வருடம் வெட்டப்பட்ட கல்வெட்டு, தாமிரபரணியில் சிற்றாறு (சித்ரா நதி) கலக்கும் இடத்தில் தாமிர பரணியை ‘தன் பொருந்தம்’ என்று குறிப் பிடுகிறது. தாமிரம் என்றால் செம்பு. தாமி ரக் கனிமம் கலந்த தண்ணீர் என்பதால் தாமிரபரணி பெயர் வந்திருக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
The river Thamiraparaṇi in the south of India,
A river in the Chera Country
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தண் பொருநை புனல் பாயும்
விண் பொரு புகழ் விறல் வஞ்சி – புறம் 11/5,6
குளிர்ந்த ஆன்பொருந்தத்து நீரின்கண் பாய்ந்து விளையாடும்
வானை முட்டிய புகழினையும் வென்றியையுமுடைய கருவூரின்கண்
‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால்,
அம்மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடு வரையும், கடலும், காண்டிர் – கம்பராமாயணம் 4477
பொருநைத் துறைவன் பொற்பாவாய் புது நீராடி யருளுகவே” (குமர. பிர, மீனா. பிள். 88.)
3675 பண்டை நாளாலே நின் திரு அருளும்
பங்கயத்தாள் திரு அருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால்
குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப்புளிங்குடிக் கிடந்தானே (1)
3679 பவளம்போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண்
தாமரை தயங்க நின்றருளாய்
பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய் சினப் பறவை ஊர்ந்தானே
3685 கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான்
அடி இணை உள்ளத்து ஓர்வாரே
பொருநல் வடகரை வண்டொலை வில்லி மங்கலம். (திவ். திருவாய். 6, 5, 8)
குமரகுருபரரால் ” அங்கயற்கண்ணியின் எல்லையில்லாக் கருணை போல் பொங்கும் பொருநை” என்றும் தாலமி காலத்து கிரேக்கர்களால் “சோலன்” என்றும் மகாகவி பாரதியாரால் “தமிழ் கண்டதோர் வையை, பொருநை” என்றும் போற்றப்பட்டுள்ளது தாமிரபரணி!
தமிழ் கண்டதோர் வையை, பொருநை
ஆன்பொருநை என்றும் அழைக்கப்படும் பொருநை என்பது இன்றைய கரூர் நகரையொட்டிப் பாயும் அமராவதி நதி என்பர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்