Skip to content

சொல் பொருள்

(வி) 1. நெருங்கு, ஒன்றோடொன்று சேர், 2. மனம் இசை,  3. அடை, 4. தகுதியாகு, 5. ஒட்டிக்கொண்டிரு, 6. புணர், கூடு, 7. தங்கியிரு, 8. அளவொத்திரு,

சொல் பொருள் விளக்கம்

நெருங்கு, ஒன்றோடொன்று சேர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

come into close contact, consent, agree, reach, approach, be suitable, worthy of, stick to, be glued to, cohabit with, abide, dwell, be of same size

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன் துறை ஊரனும் வந்தனன் – நற் 40/6-11

ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த,
பசுநெய் தடவிய மென்மையான உடம்பினையுடைய,
சிறப்புப் பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க,
நள்ளென்ற இரவில் கள்வன் போல,
அகன்ற துறையையுடைய தலைவனும் வந்தான்,

பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய – மலை 488

(மன்னனோடு)இசைந்துபோகாத பகைவரின் கரிய தலைகள் துண்டிக்கப்பெற

உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த – பரி 11/4-6

மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர,
மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க, பொருள்களை ஆராய்ந்தறிகின்ற
புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க

பணை தாள் ஓமை படு சினை பயந்த
பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக – நற் 318/2,3

பருத்த அடிமரத்தைக் கொண்ட ஓமை மரத்தின் தாழ்ந்த கிளை தந்த
நிழல் என்ற சொல்லுக்கே தகுயில்லாத வரிவரியான நிழலில் இருக்கும்போது

உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே – நற் 333/10-12

சிறந்த புகழையுடைய நல்ல இல்லத்தின் ஒளிபொருந்திய சுவரில் ஒட்டிக்கொண்டு
விரும்பத்தக்க குரரையுடைய பல்லி
நள்ளென்னும் நடு இரவில் நாம் நினைக்கும்போதெல்லாம் கௌளிசொல்லும்

மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்
கை உடை நன் மா பிடியொடு பொருந்தி
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும் – குறு 319/1-4

ஆண்மான்கள் தம் மடப்பம் பொருந்திய பெண்மான்களைத் தழுவி, மயக்கம் மிக்கு
காட்டில் சேர்ந்த புதர்களில் மறைந்து ஒதுங்கவும்,
துதிக்கையையுடைய நல்ல களிறுகள் தன் பெண்யானைகளோடு கூடி
முகில்களை அணிந்த பக்கத்தையுடைய மலையில் சேரவும்,

கானத்து
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும் – பதி 58/12-14

காட்டினில்
ஒலிக்கின்ற ஓசையையுடைய சிள்வண்டுகள் பொரிப்பொரியான அடிப்பகுதியில் தங்கியிருக்கும்
சிறிய இலைகளைக் கொண்ட வேல மரங்கள் மிகுதியாய் இருக்கும்

பொருந்து மலர் அன்ன என் கண் அழ – ஐங் 18/3

அளவொத்த மலர்களைப் போன்ற என்னுடைய கண்கள் அழும்படியாக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *