Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தூண், 2. கொடுங்கை, கட்டிட/தூண்களின் உச்சியில் சிற்பவேலைப்பாடமைந்த பிதுக்கம், 3. ஆதரவு, பற்றுக்கோடு, 4. துணை, உதவி,  5. மதலை கோல் – இசைப்பவர் தலைவன் தன் கையில் வைத்திருக்கும் கோல்,

சொல் பொருள் விளக்கம்

தூண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

post, pillar, pop, Overhanging border, cornices or projections on the sides, front or pillars of a house, support, help, aid, support to produce music (vaidehi herbert)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 346-350

வானம் (வீழாதபடி முட்டுக்காலாக) ஊன்றிவைத்த தூண் போல
ஏணியைச் சாத்திய ஏறுதற்கரிய தலையினையுடைய,
விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது (சாந்திட்ட)மாடத்தில்,
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்

மனை உறை புறவின் செம் கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 45-48

வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்
(தான்)இன்பம் நுகரும் பெடையொடு நாற்சந்தியில் (இரை)தேடி உண்ணாமல்,
இரவுக்காலமும் பகற்காலமும் தெரியாமல் மயங்கி, செயலற்று,
கொடுங்கைகளைத் துயிலிடமாய்க் கொண்டு, (அவற்றிற்கிடையே)தாவிக்கொண்டிருக்க;

அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி
துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்ஒருவிர் ஓம்பினர் கழிமின் – மலை 214-218

அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,
பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,
செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே,
ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள் –

அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின்
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/13-15

நம்மைச் சுற்றிப் பழிச்சொற்கள் மிகுந்தன, அவரோ என்னை விட்டுப் பிரிந்து இருக்கிறார்,
துணையில்லாத நெஞ்சுடன் இவள் துயர் தாங்கும் ஆற்றல் இல்லாதவள் என்றிராமல்,
என் நெற்றியில் பசலை படர்கின்றது, நொடித்திறங்கும் தோளினாய்! அவரின் அன்பால் என்ன பயன்?

மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின்
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்
மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/14-18

முழவுக்கு மண்சாந்து பூசுங்கள், யாழை மீட்டுங்கள்
கந்தூம்பு என்ற யானையின் துதிக்கை போல்வடிவமைந்த பெருங்குழலை ஊதுங்கள்
சல்லரியைத் தட்டுங்கள், சிறுபறையை அறையுங்கள்
ஒரு பக்கமுள்ள மதலையைக் கொட்டுங்கள்
இசைப்புலமைக்குச் சான்றாக அமையும் கோலை என் கையில் தாருங்கள் – ச.வே.சுப்பிரமணியன்

இறுதி அடிக்கு மட்டும் வேறு உரை:

place in my hand the black rod that foretells the future – Vaidehi Herbert
நமது பிறப்புணர்த்தும் கரிய கோலைக் கையின்கண்ணே தாருங்கள் – ஔவை துரைசாமி.

இதற்கு

கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தும் பதி 43:27

என்று பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்படும் நுண்கோல் என்ற சொல்லை எடுத்துக்காட்டுவார் உரையாசிரியர்.
இந்த நுண்கோல் என்பதை இசைஞர்கள் தம் கையில் வைத்திருந்தனர் என்று அகம் 152/4, அகம் 208/3, புறம் 70/3
ஆகிய பாடல்களால் அறிகிறோம்.
இன்றைக்கும் மேற்கத்திய இசை இசைக்கும் இசைக்குழுவுக்குத் தலைவர், தம் குழுவினர் பாடும்போது கையில்
ஒரு சிறு கோல் வைத்திருப்பதைக் காணலாம். ஒருவேளை, இதைப்போன்றே, பாணர் தலைவர் தம் கையில்
கோல் வைத்திருந்தார் என எண்ணத் தோன்றுகிறது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *