Skip to content

சொல் பொருள்

(வி) 1. உயர்வாகக் கருது, பெருமையாகக் கொள், 2. எண்ணு, உறுதிசெய், துணி,  3. கருது,

2. (பெ) 1. சந்திரன், 2. மதிப்பு, சிறப்பு,  3. இயற்கை அறிவு, 4. நல்லறிவு, பகுத்தறிவு,

3. (இ.சொ) ஒரு முன்னிலை/படர்க்கை அசைச்சொல்,

சொல் பொருள் விளக்கம்

உயர்வாகக் கருது, பெருமையாகக் கொள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

esteem, value, regard, respect, decide, ascertain, consider, think, moon, esteem, value, understanding, intellect, Discrimination, judgment, discernment, An euphonic suffix of the imperative mood / Expletive of the third person

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி – நற் 81/3

மன்னர்கள் உயர்வாகக் கருதும் மாட்சிமையான போர்வினையில் மேம்பட்ட குதிரைகளின்

அணி சிறை இன குருகு ஒலிக்கும்_கால் நின் திண் தேர்
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/6-9

அழகிய சிறகுகள் கொண்ட கூட்டமான குருகுகள் ஒலிக்கும்போது, அதனை, உன்னுடைய திண்ணிய தேரின்
மணியொலி என்று இவள் எண்ணுவாள், அவ்வாறு எண்ணித்துணிந்தபோது
உள்ளுக்குள் அடங்கின ஒலியாக இருக்கக்கண்டு , அவை கடற்கரைச் சோலையின்
பறவைகளின் குரல் என்று தெளிந்து, பின்னர் தனிமை கொண்டு வருந்துவாள்;

காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/12,13

காதலைவைத்துக்கொண்டு என்ன செய்ய, பொருள் இல்லாவிட்டால்? என்று
ஊரார் கூறும் சொற்களை ஒரு பொருட்டாக மதித்தாயோ?

பல் மீன் நடுவண் பால் மதி போல – சிறு 219

பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று

மதி நிறைந்த மலி பண்டம் – பட் 136

மதிப்பு மிக்க ஏராளமான பண்டங்கள்

மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண்
நன்னன் சேய் நன்னன் – மலை 62,64

தன் அறிவிற்கு மாறாக நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடைய,
வில்தொழில் பயின்ற பெரிய கையினையும், (தனக்குப்)பொருத்தமான சிறந்த அணிகலன்களையும் உடைய
நன்னன் மகனான நன்னனை

அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்
தாம் வர தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/3-10

அச்சம் தரும்படி நடுக்குகின்ற கொடுமையான பாலை நிலக்காட்டில் சென்றோர்
தான் திரும்பி வருவேன் என்று தெளிவாகக் கூறிய பருவம் மிக்க அழகிதாக
வந்திருக்கும் இதுவோ என்று கேட்கிறாய் மடந்தையே! நல்லறிவில்லாது
பருவகாலத்தை மறந்து, கடல் நீரை முகந்த நிறைவான சூல்கொண்ட கரிய மேகங்கள்,
அதனைத் தாங்கமாட்டாது கொட்டித்தீர்த்த பெருமழையைக்
கார்காலத்து மழை என்று பிறழக்கருதிய உள்ளத்தோடு, தேர்ந்தறியும் அறிவு இல்லாதனவான
பிடவமும், கொன்றையும், காந்தளும்
மடமையுடையனவாதலால் மலர்ந்துவிட்டன பலவாக –

இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
செறி_தொடி உள்ளம் உவப்ப
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487

இதுவே பிரிந்திருப்போர் ஒருவரையொருவர் நினைத்தேங்கும் மாலைக்காலம்;
செறிவான வளையல்களை அணிந்தவளின் உள்ளம் உவக்குமாறு
அறிவுடைய பாகனே! விரைந்து செலுத்துவாய் தேரினை.

மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நல் மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி – திரு. 290-295

மணம் கமழ்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய இளைய வடிவைக் காட்டி அருளி,
‘அஞ்சுவதை விடுக, அறிவேன் நின் வரவை’ என
அன்புடைய நல்ல மொழிகளைப் பலகாலும் அருளிச்செய்து, கேடு இன்றாக
இருண்ட நிறத்தையுடைய கடலால் சூழப்பட்ட (இந்த)உலகத்தில்
ஒருவனாகிய நீயே (யாண்டுமாகித்)தோன்றுமாறு, சீரிய
பெறுதற்கரிய பரிசில்(ஆன வீடுபேற்றினைத்) தந்தருளுவான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *