Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. பெரிய, 2. கரிய, 3. அழகிய, 4. சிறந்த,

2. (பெ) 1. மாமரம், 2. நில அளவை – நூறு குழி, 3. குதிரை, 4. விலங்கு, 5. இலக்குமி, திருமகள், 6. அரிசி, கிழங்கு போன்றவற்றின் மாவு, பொடி, 7. மாமை நிறம், மாந்தளிர் போன்ற நிறம், 8. மான், 9. வண்டு,

சொல் பொருள் விளக்கம்

பெரிய,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

large, extensive, dark, beautiful, fine, excellent, mango tree, a land measure equal to one third of an acre, horse, animal, beast, Lakshmi, flour, powder, colour as that of a tender mango leaf, deer, bee

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91

பெரும் இருள் (சூழ்ந்த)உலகம் குற்றமில்லாததாய் விளங்க

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232

மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7

கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்ட கரிய மேகங்கள்,

மா முக முசு கலை பனிப்ப – திரு 303

கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203

சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகிய தழையை

மாரி ஈங்கை மா தளிர் அன்ன
அம் மா மேனி ஆய் இழை மகளிர் – அகம் 206/7,8

மாரிக் காலத்து ஈங்கைச் செடியில் தோன்றும் சிறந்த தளிரினை ஒத்த
அழகிய மாமை நிறத்தினையுடைய மேனியினையும் ஆய்ந்த அணியினையும் உடைய மகளிரது
(ந.மு.வே.நாட்டார் உரை)

மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60

மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்

மா_மாவின் வயின்_வயின் நெல் – பொரு 180

ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின்

மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்
வாண் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 259,260

குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து

மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் – பெரும் 497

மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முற்றத்தில்

வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 2

வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்

மா மறுத்த மலர் மார்பின் – புறம் 7/5

திருமகள் பிறர் மார்பை மறுத்தற்கேதுவாகிய பரந்த மார்பினையும்

மா இருந்து
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 126-128

(முற்றி)மாவாகும் தன்மை பெற்று,
வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;

செயலை அம் தளிர் அன்ன என்
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே – நற் 244/10,11

அசோகமரத்தின் அழகிய தளிரைப் போன்ற என்
வலிமை அற்ற மாமைநிறங்கொண்ட மேனியில் பசலை நோயையும் பார்த்துவிட்டு

நறும் தண்ணியளே நன் மா மேனி – குறு 168/4

மணமும் குளிர்ச்சியுமுள்ளவள் நல்ல மாமைநிறமுள்ள மேனியுள்ள தலைவி

மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2

மானின் பார்வையை ஒத்த மருண்ட பார்வையையும் கொண்டு, மயில் போன்ற சாயலில் நடமாடி,

மனை இள நொச்சி மௌவல் வால் முகை
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் – அகம் 21/1,2

இளமையான, வீட்டு நொச்சிச் செடியில் (படர்ந்த) காட்டு முல்லையின் வெள்ளிய மொட்டுகளை
இரண்டிரண்டாய் வரிசையாக வைத்ததைப் போன்ற, வண்டுகள் விரும்பும் வெள்ளைப் பற்கள்

மா என்ற சொல் பொதுவாக எந்தவொரு விலங்கையும் குறிக்குமாதலால், இதனுடன் பல அடைமொழிகளைச்
சேர்த்து அந்தந்த விலங்குகளைக் குறிப்பிட்டனர்.

அ. கடுமா – குதிரை,

கடு மா பூண்ட நெடும் தேர் – நற் 91/11

ஆ. கலிமா – குதிரை

விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா – நற் 121/8

இ. பரிமா – குதிரை

பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/2

ஈ. வயமா – குதிரை

வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18

உ. கயமா – யானை

கய_மா பேணி கலவாது ஊரவும் – பரி 20/19

ஊ.கைம்மா – யானை

இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் – கலி 23/1

எ. மதமா – யானை

கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி – பரி 10/49
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18

ஏ. கோட்டுமா – காட்டுப்பன்றி, யானை

கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சி – நற் 75/6
கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/5

ஐ. முளவுமா – முள்ளம்பன்றி

முளவு_மா தொலைச்சிய பைம் நிண பிளவை – மலை 176

ஒ. கோள்மா – சிங்கம், புலி

குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி – புறம் 58/30

ஓ. மடல்மா – காதலியின் கவனத்தைக் கவர்வதற்காக இளைஞர் ஊர்ந்து வரும் பனை மடலால் செய்த குதிரை

மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி – நற் 377/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *