Skip to content

1. சொல் பொருள்

மொய், நெருங்கு, அடர்த்தியாகு, ஒன்றுகூடு, பரவலாகப் படர்ந்திரு, உண், தின்னு, 

2. சொல் பொருள் விளக்கம்

மொய்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

swarm, throng, be dense, crowd, gather or assemble together, spread all over, eat

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் – அகம் 257/8,9

தேன் பொருந்திய கூந்தலில் குறியனவாய்ப் பலவாக மொய்க்கும்
வண்டுகளை கடிந்து பாதுகாத்தலையும் அறியாயாய்

புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/7-9

புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் நெருங்கத் தூர்க்காநிற்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
– பின்னத்தூரார் உரை,
புன்னையின் கொம்பும் குழையும் மேலே உரிஞுதலால் வெண்குருகின் முதுகிடம் முழுதும் நுண்ணிய தாது படிவது
விளங்க மொசிய வரிக்கும் என்றார் – ஔவை.சு.து.உரை

வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/7-9

வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,

கூர் நுதி செம் வாய் எருவை சேவல்
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/12-15

கூரிய அலகினைக் கொண்ட சிவந்த வாயினையுடைய ஆண் பருந்துகள்
இறந்துபட்ட பிணங்களின் பசிய தலையினைத் தோண்டுவனவாகக் கூடி
வலிய நெருங்கிய விரலால் தோண்டி, கண்மணியைப் பெயர்த்துக்கொண்டு
வலிய வாயினையுடைய தம் பேடைகட்குச் சொரியும் அவ்விடத்தே
– நாட்டார் உரை.

இங்கே ,மொசிய என்பதற்கு நெருங்கிய என்ற பொருள் ஒத்துவருமா என்று தெரியவில்லை.
பிணந்தின்னிக் கழுகுகளின் அல்லது பருந்துகளின் கால் விரல்கள் நெருக்கமாக இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு பொருளை நாலாபுறங்களிலும் நன்கு கவ்விப் பிடிப்பதற்காக, அவற்றின் விரல்கள் நாலாபுறத்திலும்
படர்ந்திருப்பதையே மொசி விரல் என்று புலவர் கூறுவதாகக் கொள்ளலாம்.

நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்
அத்த எருவைச் சேவல் – அகம் 375/7,8

என்ற இடத்திலும் இதே பொருள் குறிப்பால் உணர்த்தப்படுவதையும் காணலாம்

மை ஊன் மொசித்த ஒக்கலொடு – புறம் 96/7

செம்மறியாட்டுத் தசையைத் தின்ற சுற்றத்துடனே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *