Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கச்சு, 2. புதிதானது, புதுமை, 3. நறுமணம், 4. தேர்ச்சீலை,  5. கைச்சரடு, உள்ளங்கையில் அணிந்துகொள்ளும் கவசம், 

சொல் பொருள் விளக்கம்

கச்சு 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

belt, a new thing, newness, novelty, fragrance, screen for the chariot, gloves to hide palm

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் – மது 514

செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,
இது இன்ன வகைக் கச்சு என எந்த உரையும் குறிப்பிடவில்லை. எனவே இதற்குப் பல்வேறு விளக்கங்கள்
காணப்படுகின்றன.
பொதுவாகக் கச்சு என்பது ஒரு பட்டையான துணி. இதனைப் பெண்கள் தம் மார்பை மறைக்கக் கட்டிக்கொள்வர்.
ஆண்கள் தம் வேட்டி நழுவிவிடாமல் இருக்க, அதன்மேல் இடுப்பில் கட்டிக்கொள்வர். இந்தக் கச்சில் வாளைச்
செறுகிக் கொள்வதும் உண்டு.

துணியை மகளிரின் மார்பணிகளாகத் தைத்துத் தருபவர்கள் – https://ta.wikipedia.org/s/3dtf

மகளிர் சட்டையில் மணிமுடிந்து அழகுபடுத்துவோர் – http://vaiyan.blogspot.com/2015/08/51.html

those who tie knots on ends of fabrics – https://learnsangamtamil.com/maduraikanchi/

வம்பு – பெண்கள் முலைக்கச்சு. Stays for woman’s breast

பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன் என
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட
கண் உருத்து எழுதரும் முலையும் – அகம் 150/1-3

பின்னும்படி வளர்ந்து நெளிந்த கூந்தலையும் பொன் போல
மார்பிலே தோன்றிய தேமலையும், கட்டிய கச்சு கிழியும்படி
கண்ணுடன் உருப்பெற்று எழுந்த முலையினையும்

அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின்
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 149-151

அழகான மூங்கில் (போலத்)திரண்ட மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை
கச்சை வலித்துக் கட்டினவாய், வளைந்து நெளியும் இடையினையும்,
மென்மையான தன்மையினையும் உடைய சேடியர் (தலைவியின்)நல்ல அடியை வருடிக்கொடுக்க,

வம்பு – ஆடவர் அரைக்கச்சு -இடுப்புப்பட்டை,Girdle, belt for the waist
இது, வம்புடை ஒள் வாள் மறவர் என்ற புறப்பொருள் வெண்பாமாலை (6, 24) பாடலாலல் அறியலாம்

யானைக்கும் அதன் கழுத்தைச் சுற்றி இந்தக் கச்சு கட்டப்படுவது உண்டு.

தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார் – பரி 19/30,31

வண்டுகள் தொடர்ந்து மொய்த்துக்கொண்டுவரும் கன்னங்களையுடைய யானைகளின் கால்களில் சங்கிலியைப்
பிணித்து, கச்சை அணிந்த புரோசக்கயிற்றினால் கழுத்தைச் சுற்றிக் கட்டி அந்த யானைகளை மரத்தில் கட்டுவர்;

வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – புறம் 37/12

கச்சு அணிந்த யானையையுடைய அரசு உண்டாகலின்

இந்தக் கச்சு வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் இருக்கும்.

வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்று – அகம் 11/8

கச்சினை விரித்துப் பரப்பி வைத்தாலென்ன விளங்கும் மணல் மிக்க காட்டாற்றினது

இந்தக் கச்சு அழகிய பூவேலைப்பாடு உள்ளவைகளாகவும் இருக்கும்.

விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த – குறி 196-198

விசும்பைத் தீண்டுகின்ற சிகரங்களில் கிளைத்த செங்காந்தளின்
குளிர்ந்த மணம் கமழ்கின்ற பூக்கள் உதிர்ந்து பரவி, நன்றாகிய பற்பல
கச்சை விரிந்த களம் போல அழகு மிக்குப் பொலிவுற்ற

தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லை
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை
பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று
கார் இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே – குறு 382

குளிர்ந்த மழைத்துளிகளை ஏற்றுக்கொண்ட பசிய கொடியுள்ள முல்லை
மொட்டுகள் வாய் திறந்தததனால் ஏற்பட்ட நறுமணம், புதரின்மேல்
பூக்கள் செறிந்திருக்கும் செம்முல்லையொடு தேன் மணக்கும்படி நெருங்கியிருக்க
புதிதாகப் பெய்கின்றது மழையே! இது புதுமழை இல்லை,
கார்காலத்து மழையே இது கார்ப்பருவம் என்றால்
வந்திருக்கமாட்டாரோ நம் காதலர்?

வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார் – பரி 10/20

நறுமணம் தங்குகின்ற புதிய மலர் வாய்விரிந்தாற்போன்ற பருவத்தையுடையவரும் ஆகிய

மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய
பொன் தொடர்ந்து அன்ன தகைய நன் மலர்
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க
வம்பு விரித்து அன்ன செம் புல புறவில் – நற் 221/1-5

நீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர்,
ஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய,
பொற்காசுகளைத் தொங்கவிட்டாற்போன்ற அழகுள்ள நல்ல மலராகிய
கொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள் கிளைகள்தோறும் தொங்க,
ஒரு புதுமையான நறுமணத்தைப் பரப்பிவிட்டாற்போன்ற சிவந்தநிலமாகிய முல்லை நிலத்தில்

வம்பு பரந்த தேர் – பதி 22/19

புதிய தேர்ச் சீலைகள் பரந்து விளங்கும் தேர்களோடும்

வில்வீரர்கள் உள்ளங்கையில் அணிந்துகொள்ளும் கவசம் வம்பு எனப்படுகிறது.

மண்_உறு முரசம் கண் பெயர்த்து இயவர்
கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து – பதி 19/7-9

கழுவிப் பூசிக்கப்பட்ட முரசத்தின் மேற்பகுதியில் குருதியினைப் பூசி, முரசு முழக்குவோர்
குறுந்தடியை வலது கையில் கொண்டவராய், தொடி அணிந்த தோளினை ஓங்கி உயர்த்தி முழக்க,
கைச்சரடுகளைக் களைதலை அறியாத வீரரோடு, அம்புகளைத் தெரிவுசெய்து

வம்பு – கைச்சரடு, ஏந்திய படை கை வியர்த்தலால் நெகிழாமைப் பொருட்டு அணிவது என்பார்
ஔவை.சு.து.அவர்கள்.
இது கைக்கு அணியும் தோலாகிய கவசம் என்பார் கு.வெ.பா

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *