Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஒரு சூரன், 2. ஒரு சங்ககாலச் செல்வன், 

சொல் பொருள் விளக்கம்

ஒரு சூரன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

An Asura, said to have had a thousand hands, and considered as a sovereign

a rich man in sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 202,203

தெற்கு நாட்டு இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்

வாணன் என்பவன் பாண்டிய நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு சிறுகுடி என்னும் ஊரைச் சேர்ந்தவன்.
இவன் பெரும் செல்வம் படைத்தவன். இவனது ஊரான சிறுகுடி நீர்வளம், நெல்வளம் மிக்கது.

பெருநீர் கானல் தழீஇய இருக்கை
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின் – அகம் 269/21,22

கடற்கரைச் சோலை சூழ்ந்த ஊராகிய வாணன் என்பானது ஊராகிய சிறுகுடியிலுள்ள வளைந்த கதிர்களைக் கொண்ட நெல்லினையுடைய

பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி – அகம் 117/17,18

பொய்கைகள் சூழ்ந்துள்ள என்றும் அறாத புதுவருவாய்களையுடைய வாணனது சிறுகுடி என்னும் ஊர்

வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை
பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி – அகம் 204/10-12

வெண்ணெல்லை அரிவோர் அடிக்கும் தோல் மடங்கிய வாயினையுடைய கிணையின் ஒலி பல மலர்களையுடைய பொய்கையில் பொருந்திய பறவைகலை ஓட்டும் விளைந்த நெற்களையுடைய வயல்களையுடைய வாணனது சிறுகுடி

பாண்டிய மன்னன் செழியன் குளத்து மடைநீர் இவ் வாணன் சிறுகுடி வழியாக கடலில் பாய்ந்தது

கல்லா யானை கடும் தேர் செழியன்
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – நற் 340/2-10

பாகன் மொழியைத் தவிர வேறொன்றைக் கல்லாத யானைப்படையையும் கடிய தேர்ப்படையையும் உடைய செழியனின் சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட, வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன் சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி காளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேறுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன், செம்மையாக நீள உழும் உழவர் தம் காளையைக் கோலால் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குக்கொண்டு பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும் வாணனின் சிறுகுடி என்ற ஊரைப் போன்ற என் அணிந்துகொள்வதற்கு நேராக இருக்கும் ஒளிமிகுந்த வளையல்கள் நெகிழும்படி செய்த உன்னை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *