சொல் பொருள்
(வி) வாய்திறந்து பேசு,
சொல் பொருள் விளக்கம்
வாய்திறந்து பேசு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
open mouth and talk
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா – பரி 20/75 மத்தளத்தை முழக்கியதுபோல் முழங்கிக்கொண்டு வருபவளே! நீ பேச்சை நிறுத்து! – வாய்வாளா – சொல்லாதமைக – பொ.வே.சோ.விளக்கம் – வாய்வாளா – பேச்சைக் கைவிடுக – புலி..கே.உரை பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/28,29 மனம் குழம்பியவளைப் போல், பிறருடைய வருத்தத்தை நீ அறியாதவளாய் வேறொன்றும் வாய்திறந்து கூறாமல் கடந்து போகின்றவளே! இப்போது கேட்பாயாக! தையால் தம்பலம் தின்றியோ என்று தன் பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும் வாய்வாளேன் நிற்ப – கலி 65/13-15 “பெண்ணே, வெற்றிலைபாக்கு போடுகின்றாயோ?” என்று தன் பையினைத் திறந்து “எடுத்துக்கொள்” என்று தந்தான்; நான் ஒரு வார்த்தையும் வாய்திறந்து சொல்லாமல் நின்றிருந்தேன்; – வாய் வாளேன் – வாய் திறந்து பேசாது – மா.இரா. விளக்கம் ஆயனை அல்லை பிறவோ அமரருள் ஞாயிற்று புத்தேள்_மகன் அதனால் வாய்வாளேன் முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும் நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/12-18 “ஆயர்மகனைப் போல் நீ இல்லை! வேறாகத் தேவர்களுக்குள் ஞாயிறாகிய தெய்வத்தின் மகனோ நீ?” “இவ்வாறு இகழ்ந்து பேசுகிற உன்னோடு ஒன்றும் பேசேன்! முல்லை மொட்டையும், மயிலிறகின் அடியையும் வரிசையாய் அடுக்கிவைத்தது போன்ற பல்லும், மூங்கில் போன்ற தோள்களும், பெரிதாய்ச் செழுமையாக இருக்கும் மைதீட்டிய கண்களும், ஆகிய இவற்றால் நான் அழகி என்று தற்பெருமை பாராட்டிக்கொள்ளும் சொல்லாட்டியே! உன்னோடு சொல்லாடக்கூடியவர் யார்?”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்