Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஒழுங்குபடப் பரப்பு, 2 ஒழுகு, தாழ், கீழ்நோக்கி வா,  3. முடியை ஒழுங்குபடுத்து, கோது 4. ஒழுங்குபடு, 5. நீண்டிரு,  நீள், 6. ‘வா’ என்னும் சொல்லின் ஏவல் வடிவம், 7. உதிர், தூர், தூவிவிடு, 8. நேரிதாகு, 9. உருக்கி அச்சில் ஊற்று, 10. நெல்மணி முதலியன பால் பிடி, 11, ஊற்று, ஒழுக்கு, (சோற்றை வடி),

2. (பெ) 1. பட்டையான தோல், துணி போன்றவை, 2. பெண்கள் மார்புக்கச்சு, 3. நீர்,

சொல் பொருள் விளக்கம்

ஒழுங்குபடப் பரப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

spread evenly, flow ,flow down, decline, comb the hair, be in order, be arranged in order, be long, lengthen, second person imperative form of the verb ‘come’, shower, pour forth, become upright, cast in a mould as metal, form milk, as grain, pour, cause to flow, drain, strap, belt, strip of leather, cloth etc., bodice, water

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 335

முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்
– முத்த வார் மணல் என்றது முத்துப்போன்ற பருமணல் பரப்பிக் கழங்காடற்கமைந்த இடத்தில் என்றவாறு.
– பொ.வே.சோ. விளக்கம்

பனி வார் சிமைய கானம் போகி – மது 148

பனி ஒழுகுகின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து,

நீர் வார் கண்ணேன் கலுழும் – நற் 143/4

நீர் ஒழுகும் கண்ணுடையவளாய் மனம் கலங்குகின்றேன்

வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் – அகம் 189/8

வயலைக் கொடியாலாகிய அழகிய தழையுடை தாழ்ந்த துடையினையும்

இரும் கடல் வான் கோது புரைய வார்_உற்று
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 407,408

கரிய கடலில் (மிதக்கும்)வெண்மையான சங்கைப் போல, வாருதல் உற்று(தலை முடியைச் சீவி)
பெரியதாகப் பின்பக்கத்தில் இட்ட (முழுதும்)வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய

பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141

பொன்னாற் செய்த தொடி கிடந்து தழும்பிருந்த மயிர் ஒழுங்குபட்டுக்கிடந்த முன்கையிலே

முதிர் வார் இப்பி முத்த வார் மணல் – புறம் 53/1

முற்றி நீண்ட சிப்பிக்கண் முத்துப்போலும் வெளிய ஒழுங்குபட்ட மணற்கண்ணே
– ஔவை.சு.து.உரை

வார்ந்து இலங்கு வால் எயிற்று – நற் 198/7

நேராக விளங்கும் வெண்மையான பற்களும்

வார் கோல்
உடு உறும் பகழி வாங்கி கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 169-171

நெடிய கோலையுடைய,
இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,
தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,

நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை – நற் 191/2,3

அழகிய அணிகலன்களை அணிந்த மகளிர் நெடிய மணலில் செய்த
வண்டல்மண்ணால் ஆன பாவை

கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை – நற் 203/4

சங்கு நீண்டாற் போன்ற, வெள்ளையான பூவைக்கொண்ட தாழையானது

வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து – நற் 273/6,7

இயற்கை அழகு மிகுந்த தலைமைப்பண்புள்ள யானை
நீர் உண்ணும் நெடிய சுனையில் அமைந்து நீண்டநாள் இருக்கும்
– வார்தல் – நெடுகுதல் – பின்னத்தூரார் உரை விளக்கம்.
– வார்ந்து – நீண்டு – ச.வே.சு. உரை விளக்கம்
– நெடுகு-தல் – நீளுதல் – To extend; to be lengthened; to grow tall , high or long – தமிழ்ப்பேரகராதி

சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை
வந்திக்க வார் என – பரி 20/68-70

“இவள் பெயரைச் சிந்தித்தாலேயே தீர்ந்துவிடும் பாவப்பிணிகள், அப்படிப்பட்டவள் மீது சினங்கொள்ளாதே,
பேதைமைகொண்டாய் கொடிய சொல்கூறி, இந்த இளம் மயில்போன்ற சாயல் உடையவளை
வணங்க வருவாயாக” என்று சொல்ல

புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/7-9

புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள

வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ – மலை 24,25

வரகின்
கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு

பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – நற் 35/1

பொங்கிவரும் அலைகள் மோதுவதினால் நேரிதாகிய மணல் அடைத்த கடற்கரையில்

பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 34

பொன்னை உருக்கிஊற்றிய (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்

பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 114,115

பால் பிடித்து முற்றி, பலவிதமாய்க் கிளைத்து (அடிக்கும்)காற்றால் ஊடறுக்கப்பட்டு,
மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்

துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடு அலை கொண்டன ஏனல் – நற் 206/1,2

மெல்லிய பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத் தலைசாய்க்கக்
கதிரை மூடிய தாள்கள் காற்றால் அசைகின்றன தினைப்பயிருக்கு

முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
(கஞ்சியை)வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் சோற்றை

பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு – மலை 2,3

தாளங்களைத் தட்டிப்பார்த்து,
உறுதியான தோல்பட்டையால் இறுகக் கட்டிய மத்தளத்துடன்,

மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார் – பரி 9/46

மார்பினை அழகுசெய்யும் தம் கொங்கைகளின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,

மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறை
உகு வார் அருந்த பகு வாய் யாமை – அகம் 356/1,2

மேலைத்துறையில் கள்ளினைக் கொண்ட கலங்களைக் கழுவுதலின், கீழ்த்துறையின்
ஒழுகும் கள்ளின் கலங்கல்நீரை அருந்திட,பிளந்த வாயினையுடைய யாமை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *