சொல் பொருள்
(வி) 1. குறுக்கிடு, 2. ஒதுங்கு, 3. மாறுபடு, 4. விலகு, நீங்கு, 5. கடந்து செல், 6. மாட்டு, 7. தவிர், 8. தடு, 9. விலக்கு, 10. வளை, 11. தவறுசெய்,
2. (பெ) 1. குறுக்கு, 2. மிருகம்,
விலங்கு – குறுக்கிட்டு செல்வது அல்லது கிடப்பது, நெடுந்தொலைவு
சொல் பொருள் விளக்கம்
விலங்கு என்பது குறுக்கிட்டுச் செல்வது, குறுக்கிட்டுக் கிடப்பது என்னும் பொருளில் வந்த சொல். அது விலகிக் கிடக்கும் நெடுந்தொலைவைக் குறிக்கும் சொல்லாகத் திருச்செந்தூர் வட்டார வழக்கில் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lie across, be transverse, step aside, change, become different, leave, go away, go past, fasten on, hook, avoid, obstruct, hinder, turn aside, put out of the way, bend, err, that which is crosswise, animal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 17/22, அகம் 153/19, அகம் 187/24 மேகங்கள் பொருந்திய பெரிய மலைகள் குறுக்கிட்டு நிற்கும் சுரநெறியில் துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261 விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி, ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன் கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் தேறல் எளிது என்பாம் நாம் – கலி 60/23-25 “உலக ஒழுக்கத்திலிருந்து மாறுபட்டு தெருவில் நின்றுகொண்டு ஒருவன் கூறும் சொல்லை உண்மையென்று எடுத்துக்கொண்டு, அதன் தன்மையை உணராமல் அவனை நம்பி எளிதாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொல்லுவோம் நாம்” இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10 இருள் செறிந்த நடுயாமத்தே நெறி தடுமாறுதலான் விலகி புடையல் கழல் கால் புல்லி குன்றத்து நடை அரும் கானம் விலங்கி – அகம் 295/13,14 ஒலிக்கின்ற வீரக் கழலணிந்தபுல்லி என்பானது வேங்கடமலையைச் சார்ந்த செல்லற்கு அரிய காட்டினைக் கடந்து – நாட்டார் உரை ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட மாலை போல் தூங்கும் சினை – கலி 106/26-29 காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்தி எடுத்த கொத்தான குடல்களைத் தொங்கவிட்டவாறே தூக்கிக்கொண்டு பறந்த பருந்துகளின் வாயிலிருந்து வழுக்கி விழ, அவை ஆலமரத்தின் மேலும், கடம்ப மரத்தின்மேலும் தெய்வங்களுக்கு அணிவிப்பதற்காக விலங்க இட்டுவைத்த மாலையைப் போல தொங்கிக்கொண்டிருந்தன மரக்கிளைகளில் – நச். உரை – விலங்கிட்ட – மாட்டிவிட்ட – பெ.விளக்கம் நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின் – பொரு 46 நல்ல உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்த்தலால் வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த வினை இடை விலங்கல போலும் – நற் 252/5,6 இதுவரை துணியாத நெஞ்சம் இப்போது முடிவுசெய்ய, ஆராய்ந்து தொடங்கிய செயல்முனைப்பினைத் தடுக்கவில்லை போலும் யாரீரோ எம் விலங்கியீஇர் என – அகம் 390/14 எம்மைத் தடுப்பீர் நீவிர் யாவிரோ என சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய் – புறம் 205/7,8 சிறியனவும் பெரியனவும் ஆகிய புழைகளைப் போக்கற விலக்கிய மானினது திரட்சியைத் தொலைத்த கடிய செலவையுடைய சினமிக்க நாயையும் இன்று நம் செய்_வினை ஆற்று_உற விலங்கின் எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே – அகம் 33/18-20 இன்று நமது செய்யப்படும் இவ்வினையை இந்த இடைநெறியில் உற்ற அளவில் விலக்குவையாயின் பிறர் சிரிக்கத்தக்க இகழ்ச்சியை அடைவாய் அல்லவா? வில் என விலங்கிய புருவத்து வல்லென நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் – புறம் 361/15,16 வில் போல் வளைந்த புருவத்தையும், வல்லென ஒரு சொல் நல்கின் நா அஞ்சுதற்கேதுவாகிய முள் போன்ற பற்களையுமுடைய மகளிர் – ஔவை.சு.து.உரை கடவுள் கடி நகர்-தோறும் இவனை வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் யார் இல் தவிர்ந்தனை கூறு – கலி 84/6-9 தெய்வங்கள் மிகுதியாக இருக்கும் கோயில்கள்தோறும் இவனை சுற்றிக்காண்பித்துக் கொண்டுவா என்று சொல்ல, அப்படியே சென்றாய்! தவறுசெய்துவிட்டாய்! நெஞ்சில் ஈரமில்லாத இவனுடைய தந்தையின் பரத்தையர்களுக்குள் யாருடைய வீட்டில் தங்கியிருந்தாய்? கூறு!” – விலங்கினை – தப்பினாய் – நச்.உரை – விலங்கினை – தவறினை – பெ.விளக்கம் பேஎம் நிலைஇய இரும் பௌவத்து கொடும் புணரி விலங்கு போழ கடும் காலொடு கரை சேர நெடும் கொடி மிசை இதை எடுத்து – மது 76-79 அச்சம் நிலைபெற்ற கரிய கடலில், வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு, வேகமான காற்றால் (ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு, நெடிய கொடியை உச்சியில் உடையவாய், பாய் விரித்து நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா இன்பம் எளிதின் நின் மலை பல் வேறு விலங்கும் எய்தும் நாட – அகம் 2/7-9 நறிய பூக்களாலான படுக்கையில் களிப்புற்றுத் தூங்கும் எண்ணி முயலாத இன்பத்தை எளிதாக, நின் மலையிலுள்ள பல்வேறு விலங்குகளும் எய்தும் நாடனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்