அதிரல் என்பது மரத்தில் படரும் கொடி
1. சொல் பொருள்
(பெ) காட்டு மல்லிகை.
2. சொல் பொருள் விளக்கம்
காட்டுமல்லிகை எனப் பேச்சு வழக்கில் சொல்லப்படும் மல்லிகையின் மணமில்லா மல்லிகை
- வேனில் காலத்தில் பூக்கும். இம்மலர் இரவில் அல்லது வைகறைப் பொழுதில் மலரும்.
- இதன் பூக்கள் பூனைப் பற்கள் அளவில் காணப்படுகின்றன
- ஒருவகைக் கொடி. இது ஆற்றுமணலில் படர்ந்து வளரும்
- மொட்டின் வடிவம் கூர்மையாகவும் நீட்சியுடையதாகவும் இருக்கும்
இதனைப் `புனலிக்கொடி’ என்று நச்சினாரிக்கினியரும், காட்டுமல்லிகை என்று அரும்பதவுரையாசிரியரும், மோசிமல்லிகை, என்று அடியார்க்கு நல்லாரும் குறிக்கின்றனர்
- பைங்கொடிஅதிரல் – வேம்பற்றூர்க் குமரனார்
- நுண்கொடிஅதிரல் – காவன் முல்லைப் பூதனார்
- நன்முகைஅதிரல் – பெருங்கடுங்கோ
- ததர்கொடிஅதிரல் – இளங்கீரனார்
- புதுப்பூஅதிரல் – ஓதலாந்தையார்
- வேனில்எதிரியஅதிரல் – பெருங்கடுங்கோ
- கூர்முகைஅதிரல் – ஔவையார்
- கொய்குழைஅதிரல் – தாயங்கண்ணனார்
- மாக்கொடிஅதிரல் – பாலத்தனார்
- முகைவீஅதிரல் – மோசி கண்ணத்தனார்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
wild jasmine, Jasminum angustifolium, Derris scandens
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் – முல் 51 காட்டு மல்லிகை பூத்த அசைகின்ற கொடியினையுடைய புதர்கள் இதன் அரும்பு குயிலின் வாய் போல் இருக்கும். குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் – புறம் 269/1 இது ஓர் ஆண்டில் இளவேனில் காலத்தில் பூக்கும் முதிரா வேனில் எதிரிய அதிரல் – நற் 337/3 முற்றாத இளவேனில் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகையையும் இது ஒரு நாளில் மாலையில் மலரும் எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல் – அகம் 157/6 இரவில் மலர்ந்த பசிய அதிரல் கொடியை
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் - முல் 51 செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம் - குறி 75 மா கொடி அதிரல் பூவொடு பாதிரி - நற் 52/1 முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் - நற் 124/5 முதிரா வேனில் எதிரிய அதிரல்/பராரை பாதிரி குறு மயிர் மா மலர் - நற் 337/3,4 புது பூ அதிரல் தாஅய் - ஐங் 345/2 அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் - பரி 20/81
அதிரல் பரந்த அம் தண் பாதிரி - அகம் 99/6 எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல்/பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி - அகம் 157/6,7 கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி - அகம் 213/4 நன் முகை அதிரல் போதொடு குவளை - அகம் 223/14 உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்/நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் - அகம் 289/2,3 வரி மென் முகைய நுண் கொடி அதிரல்/மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர் - அகம் 391/2,3 வேனில் அதிரல் வேய்ந்த நின் - அகம் 393/25
குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல்/பயிலாது அல்கிய பல் காழ் மாலை - புறம் 269/1,2 நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப - அகம் 237/2 வேனில் அதிரலொடு விரைஇ காண்வர - அகம் 261/2 அதிரல் பரந்த அசோகம் தண் பொழில் - உஞ்ஞை:40/121 அணி குருக்கத்தியும் அதிரலும் அனுக்கி - உஞ்ஞை:51/39
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்