Skip to content
அத்தி

1. சொல் பொருள்

(பெ) 1. குறுநில மன்னன், 2. ஆட்டன் அத்தி, சோழநாட்டு நாட்டியக்காரன், 3. ஒரு வகை மரம்

2. சொல் பொருள் விளக்கம்

சேரன்‌ படைத்தலைவரோடு கழுமலம்‌ எனும்‌ இடத்தே, சோழர்‌ படைத்‌ தலைவன்‌ பழையனுக்குத்‌ துணையாகப்‌ போரிட்டவன்‌

அத்தி என்பது மோரேசி குடும்பத்தில் உள்ள கெட்டியான மரங்கள், புதர்கள், கொடிகள், மேலொட்டிகளைக் கொண்ட ஏறத்தாழ 850 இனங்களின் ஒரு பேரினம் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain, one of the commanders of the chera king.

a dancer of the chozha country

Fig tree/fruit

அத்தி
அத்தி

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/7-10

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,

நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றிறை ஆகியோர் சேரனது படைத்தலைவர்களாயிருந்து தத்தம் நிலப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாசறை அமைத்துப் போரிட்டுச் சோழர் தளபதியாகிய பழையன் என்பானைக் கொன்றனர். அதைக் கண்டு பொறுக்காமல், இவர்களுடனும், இவர்களைச் சேர்ந்த கணையன் என்பானுடனும் கழுமலம் என்ற இடத்தில் போரிட்டு அனைவரையும் தோற்கடித்தான் சோழன் பெரும்பூண் சென்னி.

அத்தி
அத்தி

புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ – அகம் 376/10,11

புனலில் விரும்பி ஆடிய அத்தி என்பானது அழகினை விரும்பி
காவிரி அவனை வௌவிக்கொண்டு கடலில் ஒளித்தாற்போல

மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு – அகம் 396/11-14

ஆதிமந்தி என்பாள் நீர் ஒழுகும் கண்ணினையுடையாளாய்ப் பலவற்றையும் வெறுத்திருக்க கடிய திறல் பொருந்திய ஆட்டன் அத்தி என்னும் அவள் காதலன் ஆடும் அழகினை விரும்பி நீர்ப்பெருக்கினையுடைய காவிரியாறு கொண்டு மறைந்தாற்போல ஆட்டன் அத்தி – ஆதிமந்தி ஆகியோரின் வரலாறு அகநானூறு 222, 226, 376 ஆகிய பாடல்களில் காணப்படுகிறது.

அத்தி
அத்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *