சொல் பொருள்
(வி) 1. மலர், பெரிதாகு, 2. பழிச்சொல்கூறு
(பெ) 1. மலர், 2. ஊரார் பழிச்சொல்,
சொல் பொருள் விளக்கம்
அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல்,
அலர் என்பது சொல் நிகழ்தல்;
அம்பல் என்பது சொல் நிகழ்தல்,
அலர் என்பது இல் அறிதல்;
அம்பல் என்பது இல் அறிதல்,
அலர் என்பது அயல் அறிதல்;
அம்பல் என்பது அயல் அறிதல்,
அலர் என்பது சேரி அறிதல்;
அம்பல் என்பது சேரி அழிதல்
அலர் என்பது ஊர் அறிதல்;
அம்பல் என்பது ஊர் அறிதல்,
அலர் என்பது நாடு அறிதல்;
அம்பல் என்பது நாடு அறிதல்,
அலர் என்பது தேசம் அறிதல்;
(இறையனார்.22. நக்.)
ஒரு வினைத் தொடக்கத்தை அரும்பு நிலைக்கும் அதன் விரிவை அலர் நிலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். இரு காதலரின் களவொழுக்கத்தை ஓரிருவர் அறிந்து மறைவாய்ப் பேசுவதை அம்பல் என்றும், பலர் அறிந்து வெளிப் படையாய்ப் பேசுவதை அலர் என்றும் அகப்பொருள் இலக்கணம் கூறும். அம்பல் /அரும்பு; அலர் / விரிந்த மலர். (சொல். கட். 8.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
blossom, become large, indulge in gossip, fully blossomed flower, gossip of the village-folk regarding somebody’s secret love
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய – திரு 299,300 விண்ணைத் தீண்டுகின்ற நெடிய மலையில் ஞாயிற்றின் மண்டிலத்தைப் போலச் சேர்த்துவைத்த குளிர்ந்த மணக்கின்ற விரிந்த தேன்கூடு சிதைய அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் – புறம் 390/3 அரும்பு மலர்ந்த செருந்தி மரங்கள் உள்ள நெடிய காட்டின் மலர்கள் கமழும் ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 136 முத்து மாலையைத் தாங்கிய பருத்த முலைகளைக் கொண்ட மார்பினில் ஆடுமகள் போலப் பெயர்தல் ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16 கூத்தாடும் பெண் போல, ஊரைவிட்டுச் செல்லுதல் இயலாதவளாகின்றேன், அலர்கூறட்டும் இவ்வூர். மாரிப் பீரத்து அலர் சில கொண்டே – குறு 98/5 மழைக்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துச் சென்று ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ – அகம் 383/2 ஊரிலும், தெருவிலும் ஒன்றுசேரப் பழிச்சொல் எழ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்