Skip to content
உழிஞை

உழிஞை என்பது ஒரு கொடி வகை

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு கொடி வகை, கொற்றான், முடக்கொற்றான், முடக்கறுத்தான், 2. உழிஞைத் திணை, புறத்திணைகளில் ஒன்று, 3. பகைவரது அரணை வளைப்போர் சூடும் மாலை, 4. உழிஞைத் திணையின் இலக்கணத்தை இயம்பும் உட்பிரிவு உழிஞைப் படலம்

2. சொல் பொருள் விளக்கம்

பகைவர் நாட்டின் மீது படையோடு சென்று மதிலை வளைத்துப் போரிடுவது உழிஞைத் திணை

இக் கொடி மரத்தை மூடிக்கொண்டு படர்வதுபோல பகைவர் மதிலைப் படை வீரர்கள் முற்றுகையிடும் போர்முறையைத் தமிழ் இலக்கணங்கள் உழிஞைத் திணை எனக் குறிப்பிடுகின்றன. உழிஞை – கொற்றான் ; அது குடநாட்டார் வழக்கு. (புறம். 50. ப. உ.)

இதனை இக்காலத்தில் கொற்றான் என்றும், முடக்கொற்றான் என்றும் நாட்டுப்பற மக்கள் வழங்குகின்றனர். மக்களை ஆளும் அரசன் (கொற்றவன்) போல மரத்தை ஆண்டுகொண்டு படரும் கொடியைக் கொற்றான் என்பது மரூஉ-மொழி. 

பலூன் போன்ற அமைப்பிலிருக்கும் இதன் காய்களை, கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டும்போது பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒலி உண்டாக்கும். 

மரங்களை மூடி முடமாக்கும் கொற்றானை முடக்கொற்றான் என்பதும் காரணப்பெயர்.

உழிஞைத்திணை 30 பாடல்களைக் கொண்டது உழிஞை மாலை.

வாத நோய்களுக்குரிய மூலிகை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

balloon vine, Cardiospermum halicacabum, Lesser balloon vine

கொற்றான்
கொற்றான்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உழிஞை-தானே மருதத்து புறனே - பொருள். புறத்:9/1
நுண்மையான நீண்ட கொடியினைக் கொண்டது

நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை – பதி 44/10

நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து – புறம் 76/5

சிறிய இலைகளை உடையது

சிறியிலை உழிஞை தெரியல் சூடி – பதி 63/8

பொன்னிறத் தழைகளை உடையது

பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி – புறம் 50/4

உழிஞை-தானே மருதத்து புறனே
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
அனை நெறி மரபிற்று ஆகும் என்ப – தொல் – புறத்திணை – 9,10

ஓர் அரசன் பகை மன்னரின் கோட்டையை முற்றுகையிடும்போதும், அல்லது
பகை மன்னன் தன் கோட்டையை முற்றுகையிடும்போது அந்தக் கோட்டையைக் காத்து நிற்கும்போதும்
நடைபெறும் போர் உழிஞைப் போர் எனப்படும். அப்போது அந்த அரசர் உழிஞைப்பூ மாலை
சூடிக்கொள்வது வழக்கம். இத்தகைய சூழலைப் பாடும் பாடல்கள் உழிஞைத் திணைப்பாடல்கள்
எனப்படும்.
முடக்கொற்றான்
முடக்கொற்றான்
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி - பட் 235

பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவ - பதி 22/27

துய் வீ வாகை நுண் கொடி உழிஞை/வென்றி மேவல் உரு கெழு சிறப்பின் - பதி 43/23,24

நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை - பதி 44/10

பணியா மரபின் உழிஞை பாட - பதி 46/6

சிறியிலை உழிஞை தெரியல் சூடி - பதி 63/8

நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து - புறம் 76/5

நெடும் கொடி உழிஞை பவரொடு மிலைந்து - புறம் 77/3

இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன்/மடம் பெருமையின் உடன்று மேல் வந்த - பதி 56/5,6

பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி - புறம் 50/4

பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த - கலி 140/4
முடக்கறுத்தான்
முடக்கறுத்தான்
வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் - மணி:28/3

மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான் - யுத்1:13 5/2

உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் - யுத்1:13 12/4
முடக்கொத்தான்
முடக்கொத்தான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

2 thoughts on “உழிஞை”

  1. முடக்கறுத்தான் கொடி போன்று எண்ணற்ற மூலிகைச் செடி கொடிகள் தமிழகத்திலா மெதுவாக அழிந்து கொண்டிருக்கின்றன . அவ்வழிவைத் தடுத்து உழவர் பெருமக்களுக்கு உற்பத்தி உணர்வூட்டலாமே!

  2. மிக்க நன்றி…முடுக்கு (மூலை) அறைகளில் விதைகள் இருப்பதால் முடுக்கறை காய் கொடி என்று பெயர்பெற்றது…..
    .முடுக்கறைக்குறிச்சி என்ற ஊர்ப்பெயரே மொடக்குறிச்சி என மருவியது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *