Skip to content

சொல் பொருள்

(வி) 1. விரலால் தெறி, 2. இடி, 3. பொங்கு, 4. வீசு, 6. அழுத்து, பதி, 7. சிதறு, இறை, 8. தாக்கு, தகர், நொறுக்கு, 9. அடி 10. (விலங்குகள்) பின்னங்கால்களைப் பின்புறமாக உதைத்துத் துள்ளு, 11. தெறித்து விழு, 12. பாய்ந்து பற்று, 13. அறு, பறி, 14. வெட்டு, 15. உதிர்,  16. (பறை)முழக்கு 17, (களைக்கொத்தால்) கொத்து, 18. அழி, 19. ஒளிவீசு, 20. வழி

சொல் பொருள் விளக்கம்

1. விரலால் தெறி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

finger the string of a musical instrument, strike against, surge (as waves of the sea), throw, fling, hurl, blow as windபொழி, as a shower, press, inlay as a gem, disperse, scatter, smash, beat, animals frisking by springing their hind legs as though to kick, splash up as spray, fly off, as sparks, pounce upon as birds on prey, chop, pluck, cut into pieces, drop as tear drops, beat as a drum, dig with a hoe, destroy, shine, glitter, smear

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 182

வில்யாழ் இசைக்கும் விரலாலே தெறித்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை

அவல் எறி உலக்கை பாடு விறந்து – பெரும் 226

அவலை இடிக்கும் உலக்கையின் ஓசை செறிகையினால்

எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் – முல் 57

‘(திரை)எறிகின்ற கடல்(சூழ்ந்த) உலகத்தே (பகைவரை)வெல்வதற்குச் செல்கின்றவனே

எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து – முல் 68

ஓங்கி வீசிய வாள் வெட்டுதலினால், புண் மிக்குப்

இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180

கரிய சேற்றையுடைய தெருவில் (தம்மேலே)வீசும் துளிகளை உடல் குலுக்கி உதற

பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 59,60

தங்கத்தில் பதிக்கப்பட்ட (நீல)மணியைப் போல சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த எம்
பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி,

முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் எறி பிரசமொடு ஈண்டி – குறி 188,189

பருத்த அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக,
(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த

நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா – குறி 247

பெரிய மழைத் துளிகள் தாக்கிய மலர் போல் அழகழிந்து, இமை சோர்ந்து

எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின் – மலை 469,470

எருதுகளை அடித்து ஓட்டும் உழவரின் (உழவுப்)பாட்டோடு இயையுமாறு (உமது)நல்ல யாழில்
மருதப்பண்ணை வாசித்து, (அங்கு)இளைப்பாறியவராய்ச் செல்வீர்

அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/7,8

பாலைவழியில் இருக்கும் குமிழமரத்தின் வளைந்த மூக்கையுடைய நன்கு விளைந்த பழம்
துள்ளிக்குதிக்கும் இளைய மானுக்கு உணவு ஆகும்

எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி – நற் 13/6,7

ஊதும்போது தெறிக்கும் பொன்போன்ற தீப்பொறிபோல சிறியவாகவும் பலவாகவும் பரவிவிழும்
வேங்கைமரத்தின் பூக்கள் உதிர்கின்ற உயர்ந்த மலையில் தங்கும்

நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு
மீன் எறி பரதவர் மகளே – நற் 45/2,3

நீல நிறப் பெருங்கடல் கலங்குமாறு அதன் உள்ளே புகுந்து
மீனைப் பிடிக்கும் பரதவர் மகள் ஆவாள்!

சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/2

சிவந்த இறால் மீனைப் பாய்ந்துபற்றித் தின்ற சிறிய கடற்காக்கை

அயலோர் அம்பலின் அகலான்
பகலின் வரூஉம் எறி புனத்தானே – நற் 285/10,11

அயலோர் உரைக்கும் பழிச்சொற்களைக் கேட்டும் நம்மை விட்டு நீங்கான்,
பகலிலும் வருவான் தினை கொய்யப்பட்ட தினைப்புனத்துக்கு
– எறி புனம் – தினை அறுக்கப்பட்ட கொல்லை – ஔவை.து.சு.உரை விளக்கம்

உண்-மின் கள்ளே அடு-மின் சோறே
எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/1,2

உண்பீராக கள்ளை! சமைப்பீராக சோற்றை!
அறுப்பீராக, தின்பதற்கான ஊன்கறியை! உலையில் ஏற்றுவீர்களாக வேகவைக்கவேண்டியவற்றை!

கரும்பின்
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/2-4

கரும்பின்
அடிப்பகுதியில் வெட்டிய துண்டினை உண்டது போன்ற
வெள்ளிய பற்களில் ஊறிய குற்றமற்ற இனிய நீரையும்

எறி பிணம் இடறிய செம் மறு குளம்பின் – பதி 65/1

வெட்டப்பட்டு வீழ்ந்த பிணங்களை இடறிக்கொண்டு செல்வதால் சிவந்துபோன கறை படிந்த குளம்புகளையு

வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே
எறி கண் பேது உறல் – குறு 358/1,2

இறுக்கமான அணிகலன்கள் நெகிழ்ந்துபோக, அழுது இங்கே
நீர்த்துளி உதிர்க்கும் கண்களால் வருத்தமடையாதே!
– எறி கண் – துளி எறியும் கண் – பொ.வே.சோ.உரை, விளக்கம்.

விசும்பு கண் புதைய பாஅய் வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கி – குறு 380/1,2

வானத்தின் இடமெல்லாம் மறையப் பரவி, வேந்தர்கள்
வெற்றியடைந்து முழக்குகின்ற முரசைப்போன்று நன்றாகப் பலமுறை முழங்கி

துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை – குறு 392/5

களைக்கொத்தால் கொத்துவதால் எழுந்த நுண்ணிய புழுதி படிந்த களையெடுப்போரின் தங்கை

எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை
வானவரம்பன் என்ப – பதி 58/10-12

பகைவரின் மதில்களை அழிக்கும் வலிய வில்லும், அம்பும் விளங்குகின்ற பெரிய கையினையும்,
உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற,
வானவரம்பனாகிய சேரமன்னன் என்று கூறுவர்;

கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய – மது 665

கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று

திரு நிலைஇய பெரு மன் எயில்
மின் ஒளி எறிப்ப – பட் 291,292

செல்வம் நிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய (உறந்தையின்)மதிலில்,
பிரகாசமான விளக்குகள் ஒளிவீசுவதால்

உள் அரக்கு எறிந்த உருக்கு_உறு போர்வை – சிறு 256

உள்ளே சாதிலிங்கம் வழித்த உருக்கமைந்த (மேற்)பலகையினையும்

சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை – பதி 42/11

சந்தனத்தை வெளியில் பூசிய கள்குடங்கள் சமைக்குக்கும்போது ஆடுகின்ற அடுப்புகளிலிருந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *