குரங்கு என்பது ஒரு பாலூட்டி விலங்கு
1. சொல் பொருள்
(பெ) ஒரு பாலூட்டி விலங்கு,
பார்க்க மந்தி கடுவன் கலை முசு ஊகம் பெருங்கிளை கணக்கலை கிளை
2. சொல் பொருள் விளக்கம்
குரங்கினத்தைப் பற்றிப் பல செய்திகள் சங்க நூல்களில் தெளிவாகவும் , நுட்பமாகவும் கூறப்பட்டுள்ளதைக் காணும்போது பெரும் வியப்பெழுகிறது . இந்தியாவில் வாழும் குரங்கினத்தில் தமிழ் நாட்டிலே காணப்படும் நான்குவகைக் குரங்கினத்தைப் பற்றியும் சங்க நூல்களில் செய்திகளைக் காண்பது குறிப்பிடத்தக்கதாகும் .
சங்க இலக்கியத்தில் மூன்று குரங்கு வகைகளை நன்கு பிரித்து உணர்ந்திருந்தனர் என்பது தெரிகின்றது . அவை தொல்காப்பியத்தில் மரபியலில் பிரித்துக் கூறப்பட்டுள்ள குரங்கு , முசு, ஊகம் ” என்பவையாகும் . இந்த மூன்று வகைகளைத் தவிர நீலகிரியில் வாழும் ஒருவகைக் குரங்கு பற்றியும் சில செய்திகள் வருவதைப் புலவர் பலரும் தெரிந்திலர். சங்க இலக்கியத்தில் குரங்கு என்ற சொல் பொதுப் பெயராகக் குரங்கு இனத்தையே குறித்துப் பலவகைக் குரங்குகளுக்கும் வழங்குவதைக் காண்கிறோம் . ஆனால் அதே சொல் ஒரு குறிப்பிட்ட தனித்த குரங்கு வகைக்கும் சிறப்புப் பெயராக வழங்கு வதைக் காணலாம் .
குரங்கு முசு ஊகமும் மந்தி என்று வரும் தொல்காப்பிய மரபியல் 622 ஆம் சூத்திரத்தில் குரங்கு என்ற சொல் ஒருவகைக் குரங்கிற்கே சிறப்பாக வழங்கிவருவதைக் காண்கிறோம் . பேராசிரியரும் மரபியலுரையில் குரங்கு என்ற சொல் பொதுப் பெயராகவும் சிறப்புப் பெயராகவும் வழங்குவதை நன்கு உணர்ந்து குரங்கின் பிறப்புப் பகுதி என குரங்குக்குட்டி , முசுக்குட்டி , ஊகக்குட்டி என்று கூறினார் .
தமிழ்நாட்டில் எங்கும் எளிதாகக் காணப்படும் குரங்கு , மக்களிடம் பெரிதும் பழகும் ஒருவகைக் குரங்கு வகையே என்பது தெளிவு . அதே பெயர் பின்னர்ப் பொதுப் பெயராகப் பிற குரங்கு வகைகளையும் குறித்த தெனலாம் . தமிழ் நாட்டில் அன்றும் இன்றும் பொதுவாக எங்கும் எளிதில் காணப்படும் குரங்கு வகை, மக்களிடம் நெருங்கிப் பழகும் குரங்கு வகை சங்க இலக்கியத்தில் செம்முகமந்தி என்றும் செம்முகப் பெருங்கிளை என்றும் அழைக்கப்பட்ட குரங்கு வகையே . இந்த வகைக் குரங்கிற்கு முகம் இளம் சிவப்பாக முக்கியமாகக் குளிர்காலத்தில் காணப்படும் . வெயில்காலத்தில் வெண்மை நிறம் கலந்து இதன் முகம் காணப்படும் . இதன் காரணமாக இக்காலத்தில் சிலர் இதை “ வெள்ளை மந்தி ” என்றும் கறுவர் .
தமிழ்நாட்டில் எங்கும் எளிதாகக் காணப்படும் குரங்கு , மக்களிடம் பெரிதும் பழகும் ஒருவகைக் குரங்கு வகையே என்பது தெளிவு . அதே பெயர் பின்னர்ப் பொதுப் பெயராகப் பிற குரங்கு வகைகளையும் குறித்த தெனலாம் . தமிழ் நாட்டில் அன்றும் இன்றும் பொதுவாக எங்கும் எளிதில் காணப்படும் குரங்கு வகை, மக்களிடம் நெருங்கிப் பழகும் குரங்கு வகை சங்க இலக்கியத்தில் செம்முகமந்தி என்றும் செம்முகப் பெருங்கிளை என்றும் அழைக்கப்பட்ட குரங்கு வகையே . இந்த வகைக் குரங்கிற்கு முகம் இளம் சிவப்பாக முக்கியமாகக் குளிர்காலத்தில் காணப்படும் . வெயில்காலத்தில் வெண்மை நிறம் கலந்து இதன் முகம் காணப்படும் . இதன் காரணமாக இக்காலத்தில் சிலர் இதை “ வெள்ளை மந்தி ” என்றும் கறுவர் .
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண்விளங்கி – புறம் . 200
சிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்கு – புறம் . 378.
கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை – நற்றினை , 334 .
செம்முக மந்தி ஆரும் நாட – நற்றிணை . 355 .
செம்முக மந்தி ஆரும்
நன்மர மருங்கின் மலையிறந் தோரே – அகம் , 241 .
மேலே காட்டிய சங்கநூற் பாடல்கள் இந்த வகைக் குரங்கின் சிவந்த முகத்தைப் பற்றிக் குறிப்பாகக் கூறுவதைக் காணலாம்.
அதவத் தீங்கனி யன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க – நற்றிணை . 95 ,
அத்திப்பழத்தின் இளஞ்சிவப்பான பழத்தைப் போன்று இக்குரங்கின் முகம் காணப்பட்டதாகக் அழகிய இனிய உவமையாகும் . விலங்கு நூலார் கூறிய செய்திகளின் அடிப்படையாக ஆராய்ந்தால் செம்முகம் என்று குறிப்பாகச் சுட்டிக்காட்டிய இக்குரங்கு எதுவென எளிதில் கண்டுணரலாம் . சங்க நூல்களே இந்தச் செம்முகமுடைய குரங்கை மிக அழகாக , நுட்பமாகப் பிரித்துணர்த்துகின்றன . செம்முகக் குரங்கிற்கு எதிராகப் பிற இருவகைக் குரங்குகளையும் கருமுகம், நரைமுகம் உடையனவாகக் கூறிச் சுருங்கச்சொல்லி விளங்கவைத்த அருமை போற்றத்தக்கது . குரங்கு இனத்திலே சிறிது சிவந்த நிற முகத்தையுடைய குரங்கு Bonnet Macaque என்பது விலங்கு நூலார் யாவரும் கண்டறிந்த எளிய செய்தியாகும் . செம்முகத்தானன்றி இக்குரங்கு வகையைத் தலைமயிரொழுங்காலும் , உணவை வாயில் அடக்கி உண்ணும் குணத்தாலும் மற்ற குரங்கு வகைகளிலிருந்து பிரித்துக் காணலாம் என்பர் . இவ்வகைக் குரங்கிற்குக் குல்லாய் போட்டாற்போன்று தலையில் அரைவட்டமாக மயிர் அமைந்திருக்குமென்பர் . குரங்கிற்குத் தலையில் வளையமான விளிம்பில் ( Whorl ) குறுமயிர் பல திக்குகளிலும் நீட்டிக் கொண்டிருப்பதையே துய்த்தலை மந்தி என்று சங்க நூல்கள் கூறுகின்றன இந்த வகைக் குரங்கிற்குத் தலையில் அரை வளையமாக உள்ள மயிர் . நெற்றியின் நடுவில் வகிடு எடுத்தாற்போல் பிரிந்திருக்கும் என்று விலங்கு நூலார் கூறுவர் . ( The bonnet of hair does not quite cover the forehead where the hairs are short and neatly parted in the centre
….கடுவன்
முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவாளர் அடுக்கத்தில் கள வினில் புணர்ந்த
செம்முக மந்தி செல்குழி கருங்கால்
பொன்இணர் வேங்கைப் பூஞ்சினச் செலீஇயர்
குண்டுநீர் நெடுஞ்சினை நோக்கிக் கவிழ்ந்து தன்
புன் றலைப் பாறுமயிர் திருத்துங்
குன்ற நாடன் இரவி னானே . – நற்றிணை . 151 .
ஆண் குரங்கொடு கலவியில் ஈடுபட்டுக் கலைந்த தலைமயிரொழுங்கை மந்தி சுனை நீரில் கண்டு பாறிய தலைமயிரைத் திருத்தியதாக நற்றிணை கூறுவது, இக்குரங்கின் மயிரொழுங்கைக் குறிப்பாகக் கண்டறிந்தே சொல்லியதாகத் தோன்றுகின்றது . இதன் தலையில் அரைவட்டமாக உள்ள நீண்டதும் குறுகியதுமான மயிரை முச்சி என்று உரையாசிரியர்கள் கூறுவர் . இதையே துய்த்தலை (நற்றிணை 57 , 93 , அகம் . 241 , புறம் . 158 ) என்று சங்க நூல்கள் கூறும் .
இளஞ்சிறுவர்களுக்குத் தலைமயிரை அரைவட்டமாக வெட்டும் வழக்கம் பழங்காலந்தொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வந்தது . இதை முற்காலத்தில் முச்சி மயீர் என்பர் . இதே போன்று இக்குரங்கிற்கும் ( Bonnet of hairs radiating in all directions from a whorl ) மயிர் இருந்ததால் சிறுபாணாற்றுப் படை மகா அர் அன்னமந்தி (வரி 56 ) என்று சிறுவர்களை இக்குரங்கு வகைக்கு ஒப்பிட்டுக் கூறியது. இக்குரங்கு வகையை இன்னும் தெளிவாகப் பிரித்துணர சங்க இலக்கியத்தில் பிறிதொரு செய்தியும் துணைபுரிகின்றது . இந்தியாவில் உள்ள குரங்கினத்தில் ஒரு சாதி குரங்கிற்கு ( Macaques ) வாயில் இருபக்கத்திலும் பைகள் உண்டு. ஆனால் வயிற்றில் அறைகளுடைய இரைப்பை கிடையாது . இப்பைகள் உணவை விரைவில் நிறைய உண்டு அடக்கிவைத்துப் பின்னர் ஓய்வாக உண்ண உதவுகின்றன. ஆனால் வேறொரு சாதிக் குரங்குகளுக்கு ( Lanpurs ) இப்பைகள் வாயில் கிடையாது . ஆனால் வயிற்றில் உண்டு . தமிழ் நாட்டில் உள்ள குரங்குவகைகளில் செம்முகக் குரங்கு வாயில் அடக்கித்தின்னும் குணமுடைய தென்பதை விலங்கு நூலார் தெளிவாகக் கூறியுள்ளனர் .
அவரை யருந்த மந்தி பகர்வர்
பக்கிற் றோன்று நாடன் வேண்டிற்
பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன் – ஐங்குறு நூறு 271
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன்
திரையணற் கொடுங்கவுள் நிறைய முக்கி
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தையூ னிருக்கையில் தோன்று நாடன் – நற்றிணை 22 .
அவரைக்காயை வாய் நிறைய அமுக்கிக் கொண்டு இருந்த மந்தியின் வாய் பண்டவாணிகருடைய பையைப் போலத் தோன்றிற்று என்று ஐங்குறு நூறு கூறுவதைக் காணலாம் . காவலை அஞ்சித் தினைக் கதிரைப் பறித்துக் கையால் நெமிட்டித் திரைத்த தன்னுடைய வளைந்த கவுளில் வாய் நிறைய மந்திக் குரங்கு அடக்கிக் கொண்டது நீரில் மூழ்கி எழும் தை நோன்பு இருப்போர் வாயில் அவலை அடக்கிக்கொண்டதுபோல இருந்ததாக நற்றிணை கூறுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் . இந்தக் குரங்கு வகையின் ( Macaques ) வாயின் அடைப்பை ( Pouched mouth ) திரையணற் கொடுங்கவுள் என்று சுருக்கமாக அழகாக நற்றிணை கூறியது மிகவும் பொருத்தமாகும். (Indian monkeys belong to two families Macaques and langurs. Macaques have cheek pouches and langurs have none)
சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட செம்முகம், துய்த்தலை , திரையணல் கொடுங்கவுள் ஆகிய செய்திகளைக் கொண்டு இக் குரங்கு வகை விலங்குநூலாற் கூறும் Bonnet Macaque அல்லது Macaca Radiata என்பதை அறுதியிட்டுக் கூறலாம் .
இக்குரங்கைப் பற்றிவரும் பிற செய்திகளும் விலங்குநூலார் கூறுவதோடு ஒத்தே வருகின்றன . “நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த மகா அர் அன்ன மந்தி” என்று சிறுபாணாற்றுப்படை கூறுவதிலிருந்து மந்திகளை மக்கள் வளர்த்து வந்தது தெரிகின்றது . அழும் குழந்தைகளுக்குக் குரங்குக் குட்டிகள் கிலுகிலுப்பை ஆட்டிக் காட்டுவதாகச் சிறுபாணாற்றுப்படை கூறுவதையும் நோக்குக . இக்குரங்குகள் மனிதர் சோர்வுற்றிருந்த காலத்தில் உணவுப் பொருளைக் கவர்வதைப் பற்றிக் குறுந்தொகையும் ( 335 ) பெரும்பாணாற்றுப்படையும் ( 395 ) கூறுவதிலிருந்து சங்ககாலத்திலேயே மனிதருடன் பழகிய குரங்கு வகை இதுவென்று தெரிகின்றது .
இருங்கல் வியலறை சந்தினை பரப்பிச்
சுனை பாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும் – குறுந்தொகை 335 .
பாறையில் காயவைத்த தினையை மகளிர் நீராடும் போது குட்டிகளுடன் கவர்ந்ததாகக் கூறுவதைக் காணலாம் . விலங்கு நூலார் ஆராய்ந்ததில் மற்றவகைக் குரங்குகள் மனிதருடன் நெருங்கிப் பழகா தவை , அஞ்சி ஓடுபவை . சீதையைத் தூக்கிக்கொண்டு இராவணன் சென்ற போது கீழேபோட்ட அணிகலன்களை மந்திகள் மாறி மாறி அணிந்து பார்த்ததாகப் புறநானூறு கூறுவது இக்குரங்குகளின் விளையாட்டுத் தன்மையை எடுத்துக் காட்டவேயாகும் . இந்தக் குரங்குகளில் காட்டிலேயே விரும்பி வாழ்பவை மனிதரிடமும் நெருங்கிப் பழகா என்பர் . ஊர் அருகாமையிலும் நகர்ப் புறங்களிலும் வாழ்பவையே நெருங்கிப் பழகும் . காட்டில் வாழ்பவை மரங்களிலேயே வாழும்.
மந்தியும் அறியா மரம்பயில் இறும்பில் -அகம் , 92 .
குரங்கறி வாரா மரம்பயில் இறும்பில் — அகம் . 368 .
மரங்களிலேயே பயின்று ( arboreal ) வாழ்வதாக அகநானூறு கூறுவதைக் கவனிக்கலாம் .
சங்க நூல்களில் ( புறம் , 158 , 200 , அகம் , 352 , 378 ) இக்குரங்குகள் தோட்டங்களிலும் காடுகளிலும் பலாப்பழத்தை விரும்பி உண்டதாகக் கூறப்பட்டுள்ளது . வாழை மடலில் சேர்ந்த நீரை மந்தி குடித்ததாக நற்றிணை ( 355 ) கூறுகிறது . ஐங்குறு நூற்றில் குரக்குப் பத்து என்று வரும் பத்துப் பாடலும் இந்தக் குரங்குவகையைப் பற்றியே பாடுவது கருதத்தக்கது . இந்தக் குரங்குகள் மலைகளிலும் குன்றுகளிலும் மேகஞ்சூழ்ந்த இடத்திலும் , மூங்கிற் காடுகளிலும் காணப் பட்டதைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன .பாறையில் இவர்ந்து செல்லும் இத்திமரத்தின் விழுது வழியாக மேலேறுவதும் மூங்கில் கழையின் நுனிவரை ஏறி வளைத்துக் குதிப்பதுவும் தேனீக்களைக் கலைத்து விடு வதும் ஆகிய குரங்கின் செயல்கள் கூறப்பட்டுள்ளன . உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு என்ற செய்யுள் வரி இக்குரங்கிற்குப் பொருத்தமானதாகும் . சங்க இலக்கியத்தில் இக்குரங்குகளுக்கு மனித உணர்ச்சியையும் மனிதச் செயல்களையும் கற்பனையாக ஏற்றிக் கூறுவது வழக்கம் . இக்குரங்கு விளையாட்டுக் குண முடையதென்பதை உணர்ந்த சங்கப் புலவர்கள் நெல்லிக் காயைக் கழங்குபோலப் போட்டு ஆடும் என்றும் நறைக்கொடி கொண்டு மேகத்தைப் புடைக்கும் என்றும் மழை பெய்து தோன்றும் நீர் மொக்குகளைச் சூரல் கோலால் அடிக்கும் என்றும் கூறியுள்ளனர் . இந்தக் குரங்கின் ஆணைக் கடுவன் என்றும் பெண்ணை மந்தியென்றும் அழைத்தனர். பழகிய இக்குரங்கின் ஆண்பால் , பெண்பாற் பெயர்களைப் புலவர்களும் தரித்திருந்தனர் . கடுவன் மள்ளனார் , ஆதிமந்தியார் என்ற பெயர்கள் சங்க நூங்களில் வருகின்றன .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
The Macaque (Macaca radiata ), Bonnet macaque, The Common langur (Presbytus entellus ), The Lion -tailed Macaque ( Macaca Silenus ) The Nilgris Langur ( Presbytis Johnii )
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன் – ஐங் 275/1
குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி – ஐங் 278/2
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்/செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு – புறம் 378/20,21
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன் – குறு 288/2
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி 19/38
குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி – அகம் 4/8
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில் – அகம் 368/9
குரங்கு உளை புரவி குட்டுவன் – அகம் 376/17
குரங்கு அன்ன புன் குறும் கூளியர் – புறம் 136/13
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது