Skip to content

சொல் பொருள்

நொறுங்கு, நசுங்கு, கைவிரலை சுடக்கு, நெருக்கமாக இரு, நெருங்கு, நசுக்கு, வளை

சொல் பொருள் விளக்கம்

நொறுங்கு, நசுங்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be crushed, broken, smashed; to crack, creak, as the fingers, be crowded, approach, squeeze, crush, arch, curve, bend;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை – குறு 208/2

சண்டையிடும் ஆண்யானைகள் மிதித்து நொறுங்கிப்போன அடிமரத்தையுடைய வேங்கைமரம்

வெதிர்படு வெண்ணெல் வெவ்வறை தாஅய
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் – அகம் 267/11,12

மூங்கிலில் விளைந்த வெள்ளிய நெற்கள் வெப்பம் மிக்க பாறையில் உதிர்ந்து பரந்து
நகத்தை நெரிப்பது போன்ற ஓசையுடன் பொங்கிப் பொரிந்திடும்

நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள் – பரி 14/13

நீர்நிலையின் அருகே தழைத்திருக்கும் நெருக்கமான அரும்புகளையுடைய காந்தளின்

எரி பூ பழனம் நெரித்து – புறம் 249/3

எரிபோலும் நிறத்தவாகிய பூவையுடைய பொய்கைகளை நெருங்கி

தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து – பரி 11/130,131

குளிர்ந்த தும்பிக்கூட்டங்களைப் பாருங்கள்! தான் விரும்பி மொய்த்த பூவினை நசுக்கியவளை
போர்முனையிடத்தில் பொருந்திய சினத்தைக் கொண்ட நெஞ்சினையுடையதாய் முதலில் தாக்கி

நீரின் வந்த நிமிர் பரி புரவியும்
காலின் வந்த கரும் கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குட மலை பிறந்த ஆரமும் அகிலும்
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரி பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி – பட் 185-192

கடலில் (மரக்கலங்களில்)வந்த நிமிர்ந்த நடையினையுடைய குதிரைகளும்,
(நிலத்தில்)வண்டிகளில் வந்த கரிய மிளகுப் பொதிகளும்,
இமயமலையில் பிறந்த மாணிக்கமும், பொன்னும்,
பொதிகை மலையில் பிறந்த சந்தனமும், அகிலும்,
தென்திசைக் கடலில் (பிறந்த)முத்தும், கீழ்த்திசைக் கடலில் (பிறந்த)பவளமும்,
கங்கையாற்றின் விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும்,
ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும்,
அரிதானவும், பெரிதானவும், (நிலத்தின் முதுகு)வளையும்படி திரண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *