Skip to content

1. சொல் பொருள் விளக்கம்

1. (வி) 1. மணம்பேசு, மணம்செய்,  2. நீங்கு, கைவிடு, 3. தனக்குரியதாக்கு, 4. நிர்ணயி, 5. ஒரே அளவாக நறுக்கு, 6. தடு, கட்டுப்படுத்து, 7. அளவுபடுத்து,

2. (பெ) 1. மூங்கில், 2. மலை, 3. மலைச்சாரல், பக்கமலை, 4. வரைப்பு, எல்லை, 5. கட்டுப்பாடு, 6. அளவு, 

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

ask for marriage, marry, forsake, abandon, To make one’s own; to appropriate;, fix, appoint, cut into pieces of same size, stop, restrain, limit; bamboo, mountain, side-hill, slope of a hill, limit, boundary, restraint, measure, extent

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக
என வேட்டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை
தண் துறை ஊரன் வரைக
எந்தையும் கொடுக்க என வேட்டேமே – ஐங் 6/2-6

வேந்தன் பகை தணிவானாக; அவன் வாழ்நாள் பல ஆண்டுகளுக்கு நீளுக
என்று வேண்டினாள் தலைவி; தோழியராகிய நாங்களோ
அகன்று விரிந்த பொய்கையில் மொட்டுகள் விட்டிருக்கும் தாமரையையுடைய
குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம்பேசி வருக,
எம் தந்தையும் இவளை அவனுக்குக் கொடுக்கட்டும் என்று வேண்டினோம்

நின் உறு விழுமம் கூற கேட்டு
வருமே தோழி நன் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/23-26

நீ படுகின்ற பாட்டை நான் கூறக்கேட்டு
வருகின்றார், தோழியே! நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவர்!
வேங்கை மரங்கள் பூக்கின்ற நல்ல நாளை எதிர்நோக்கியிருந்து,
பருத்து இறங்குகின்ற இந்தப் பெருத்த தோள்காரியை மணமுடித்துச் செல்வதற்கு.

உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை – புறம் 72/15,16

உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் தலைமையையுடைய
புலவர் பாடாது நீங்குக எனது நில எல்லையை

நன் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் – கலி 133/16,17

நல்ல நெற்றியின் நலத்தை நுகர்ந்து அவளைக் கைவிடுதல், கொண்கனே!
இனிய பாலைக் குடித்தவர் பின்பு அந்தக் கலத்தைத் தூக்கியெறிவது போலாகும்

வீங்கு செலம் மண்டிலம்
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி – புறம் 8/6,7

மிக்க செலவையுடைய ஞாயிற்று மண்டிலமே
நீ பகற்பொழுதை நினக்கென கூறுபடுப்பை, திங்கள் மண்டிலத்திற்குப் புறக்கொடுத்துப் போகிறாய்

அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என – மலை 557

அதனால், புகழோடே முடிவடையட்டும், நமக்காக நிர்ணயித்த வாழ்நாள்’ என்று

வெள்ளி
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை – அகம் 37/12,13

வெள்ளிக்
கம்பியை ஒரேஅளவாக நறுக்கியதைப் போன்ற வெண்மைநிறமுள்ள சோற்றுப்பருக்கைகள் நிறைந்த கஞ்சியை

பெரும் செய் ஆடவர் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என
வரையா வாயில் செறாஅது இருந்து – மது 746,748

பெரிய செய்கைகளையும் உடைய ஆடவர்களைக் கொணர்மின்; (இத்தகைய)பிறரும்
எல்லாரும் வருக, ஏனோரையும் கொணர்மின்’ என்று
வரைந்து கூறி, வாயிலில் தடுத்து நிறுத்தாமல் யாவருக்கும் காண்பதற்கு எளிமையாய் இருந்து,

வரையா தாரம் வரு விருந்து அயரும் – நற் 135/3

அளவுபடாத உணவுப்பொருள்களை இல்லத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு அளித்துமகிழும்

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12

பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,

வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92

மலையை ஒத்த உயர்ச்சியோடு வானை எட்டித் தொடும் மதிலினையுமுடைய,

வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 42

மலைச்சாரலில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனே

கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – நற் 268/3-5

கருத்த காம்புகளைக் கொண்ட குறிஞ்சியின் வலிமையற்ற ஒளிரும் பூவின் தேனைக்கொண்டு
ஓவியத்தைப் பார்த்தாற்போன்று வீட்டு உச்சியில் கட்டப்பட்டுள்ள
மணங்கமழும் தேன்கூட்டில் தேன் ஒழுகுகின்ற நாட்டினையுடைவனிடம்

பகைவர்
கால் கிளர்ந்து அன்ன கதழ் பரி புரவி
கடும் பரி நெடும் தேர் மீமிசை நுடங்கு கொடி
புல வரை தோன்றல் யாவது – பதி 80/12-15

உன் பகைவரின்
காற்று மேலெழுந்ததைப் போன்ற விரைவான ஓட்டத்தையுடைய குதிரைகள் பூட்டிய
வேகமாகச் செல்லும் நெடிய தேர் மீது கட்டிய அசைந்தாடும் கொடி
அவரது நாட்டின் எல்லையில் தோன்றுவது எவ்வாறு?

காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல்
யாழ் வரை தங்கிய ஆங்கு – கலி 2/26,27

குத்துக்கோலின் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் செல்லும் களிற்றியானை
யாழிசையின் எல்லையிலே அடங்கி நிற்பது போல

சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் – கலி 29/10,11

தொலைநாட்டில் இருப்பவரிடம் சென்ற என் நெஞ்சினை, சிறிதளவே பேசுபவளே!
நீ கூறும் அளவுக்கும் மேல் தடுத்து நிறுத்துகின்றேன்,

இமைப்பு வரை அமையா நம்_வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/6,7

இமைப்பொழுது அளவும் பிரிந்திருக்காத நம்மை
மறந்து அங்கு இருப்பதற்கு ஆற்றலுள்ளோருக்காக 

வேர்ச்சொல்லியல்

இது marry என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது வரி என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *