சொல் பொருள்
(பெ) ஒரு சங்க கால ஊர்
சொல் பொருள் விளக்கம்
விளங்கில் என்னும் ஊர் சங்ககாலத்தில் அரபிக்கடல் ஓரத்தில் இருந்தது. இந்த விளங்கில் செல்வச்செழிப்பு
மிக்கதாயிருந்தது. இதன் மாடங்கள் மணிகள் பதிக்கப்பெற்றவை (புறம் 84). இதைக் கடலன் என்பவன் ஆண்டான். இவன் பகைவரின் வேற்படையையும், யானைப்படையையும் அழிக்கும் ஆற்றல்மிக்கவன். சிறந்த வள்ளல். எனவே மா வண் கடலன் என்று போற்றப்படுகிறான் (அகம் 81)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற களம் கொள் யானை கடு மான் பொறைய – புறம் 53/4,5 விளங்கிய சீர்மையையுடைய விளங்கிற்குப் பகைவரான் வந்த இடும்பையைத் தீர்த்த போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானையையும் விரைந்த குதிரையையும் உடைய பொறையனே — சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையின் ஆட்சிக்குட்பட்டிருந்த விளங்கில் என்னும் ஊரைப் பகைவர் முற்றுகையிட்டு வருத்தமுறுவித்தாராக, இவன் யானைப்படையும், குதிரைப்படையும் சிறப்புறக்கொண்டு சென்று பகைவரை வெருட்டி விளங்கிலரை உய்வித்தனன் என்பர் ஔவை.சு.து. — சேரர் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் இருந்த இந்த ஊரைச் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சூறையாடித் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான் என்னும் விக்கிப்பீடியா. விழுமம் என்பதற்குச் சிறப்பு, இடும்பை என்ற இரு பொருளும் இருப்பதால் இவ்வாறு கருத்துக்கள் மாறுபடுகின்றன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்