Skip to content
வெட்சி

வெட்சி என்பதுஒரு செடி, பூ.

1. சொல் பொருள்

ஒரு செடி வகை / அதன் பூ, வெட்சித்திணை. சிவப்பு அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேனுடன் கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம் / அதன் பூ. குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு செடி வகை / அதன் பூ, இட்டிலிப் பூ. ஒருவகைக் காட்டுப்பூ. இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இது ஊசி போல் அரும்பு விடும். வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ.

  • முருகக் கடவுள் தன் தலையிலே சூடும் கண்ணிமாலைகளில் ஒன்று இந்தச் செச்சை என்னும் வெட்சிப் பூவாலானது
  • அதியமான் போர்க்கோலம் பூண்டபோது போந்தை(பனை), வெட்சி, வேங்கை ஆகிய மூன்று பூக்களையும் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான்
  • முருகப்பெருமானை வழிபட்ட சூரர மகளிர் சூடியிருந்த மலர்களில் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியும் இருந்தது
  • குறிஞ்சி நிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி
  • காடைப் பறவையின் கால்நக முள் போல வெட்சிப்பூ முதிரும்
  • வெட்சிக்கானத்தில் வேட்டுவர் கடம்பு மானைத் துரத்திப் பிடிப்பர்
  • வையையில் நீரீடச் சென்ற மகளிர் வெட்சிப் பூவைத் தலையில் அணிந்திருந்தனர்
  • ஏறு தழுவச் சென்றபோது, இடையர் குலக் காளையர் சூடியிருந்த பன்மலர்க் கண்ணியில் வெட்சிப்பூ அதன் இலைகளுடன் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த்து.
  • வெட்சித்திணையானது குறிஞ்சித்திணையின் புறத்திணை

புறத்திணையை 7 வகையாகத் தொல்காப்பியமும், 12 வகையாகப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொகுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று வெட்சித் திணையாகும். ஒரு நாட்டின் வீரர் தன் அரசன் ஆணைப்படி சென்று பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களைக் (ஆ நிரைகளை) கவர்ந்து வந்து காத்தல் இத்திணையாகும்.

புறப்பொருள் பிரிவுகள்

வீரம் – அதை வெளிப்படுத்தும் போர் – அதை ஒட்டிய ‘கொடை’ முதலான செய்திகள் எனப் பல்வகைப்படும் புறப்பொருள்
பற்றிய இலக்கணத்தை வரையறுத்த நூல்கள், அவற்றைப் பல்வேறு ‘திணை’களாக வகுத்து விளக்கியுள்ளன. (திணை = பிரிவு) அவை 9 வகைப்படும்.

(1)வெட்சித்திணை
(2)கரந்தைத்திணை
(3)வஞ்சித்திணை
(4)காஞ்சித்திணை
(5)நொச்சித்திணை
(6)உழிஞைத்திணை
(7)தும்பைத்திணை
(8)வாகைத்திணை
(9)பாடாண்திணை
புறப்பொருள் பிரிவுகள்

வெட்சி – கரந்தை என்னும் இரண்டையும் ஒன்றாக்கியும், அதுபோலவே நொச்சி – உழிஞை என்னும் இரண்டையும் ஒன்றாக்கியும், புறத்திணை ஏழு என வழங்குவர். இது தொல்காப்பியம் வகுத்துக் காட்டும் முறை.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Scarlet ixora, Ixora coccinea

வெட்சி மலர்
வெட்சி மலர்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இந்தப் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும்.

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21

சிவந்த காலையுடைய வெட்சியின் சிறிய பூக்களை நடுவே விடுபூவாகஇட்டு

காட்டில் இது தழைத்து வளரும், கிளைகள் வளைந்திருக்கும்.

கடற்றில் கலித்த முட சினை வெட்சி
தளை அவிழ் பல் போது கமழும் – குறு 209/5,6

காட்டில் தழைத்த வளைந்த கிளைகளையுடைய வெட்சியின்
முறுக்கவிழும் பல அரும்புகள் மணங்கமழும்

இதன் பூக்கள் குளிர்ச்சி பொருந்தியவை.

ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் – பரி 22/22

குளிர்ச்சி பொருந்திய வெட்சி மலரால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிய மகளிரும்,

இதன் இலை சிறிதாக இருக்கும்.

புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் – கலி 103/2

புன்மையான் இலையைக் கொண்ட வெட்சிப்பூவும், பிடவமும், செம் முல்லையும்

இதன் அரும்புகள் காடையின் கால் பின்னர் இருக்கும் முள் போல் இருக்கும்.

இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் – அகம் 133/14,15

காடையின் காலிலுள்ள முள்ளை ஒத்த அரும்பு முதிர்ந்த வெட்சிப்பூக்கள்
கொல்லை நிலத்திலுள்ள குருந்த மலர்களோடு கற்பாரையிலே பரந்து கிடக்கும்

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்

வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்கு வரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே

வெட்சி-தானே குறிஞ்சியது புறனே - பொருள். புறத்:1/3

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு - திரு 21

தண் கய குவளை குறிஞ்சி வெட்சி/செங்கொடுவேரி தேமா மணிச்சிகை - குறி 63,64

கடற்றில் கலித்த முட சினை வெட்சி/தளை அவிழ் பல் போது கமழும் - குறு 209/5,6

ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் - பரி 22/22

இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி/கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் - அகம் 133/14,15

வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇ - புறம் 100/5

வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட - புறம் 202/1

புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் - கலி 103/2

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு - திரு 21

திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் - மணி: 3/161,162

வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் - மது:12/121

வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர் - மது:12/122

வெட்சி சூடுக விறல் வெய்யோனே - மது:12/167

வெட்சி தாழை கள் கமழ் ஆம்பல் - மது:22/68

வெட்சி மிலைச்சிய வில்லுறு வாழ்க்கை - உஞ்ஞை:52/77

வேயும் வெதிரமும் வெட்சியும் குளவியும் - உஞ்ஞை:50/30

குருந்தும் வெட்சியும் நரந்தையும் நறவும் - இலாவாண:12/19

மிக்கோர் மிலைச்சும் செழும் தாம விறல் வெட்சி மிலை தோளினான் - வில்லி:22 8/2

முலை திகழ் புயங்களின் மூழ்க வெட்சியார்
நிலைபெறல் இன்மையான் நிரையை விட்டனர் - சீறா:4942/3,4

பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு - திருப்:104/7

பரிமள நீப தாரொடு வெட்சி தொடை புனை சேவல் கேதன துத்தி - திருப்:108/13

முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே - திருப்:238/4

வென்ற பார்த்திப பன்னிரு திண் புய வெட்சி சித்ர திரு மார்பா - திருப்:350/6

மு சாலி சாலி தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சி புய வேளே - திருப்:595/7

இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல் - திருப்:827/9

வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ - திருப்:1131/4

கைக்குள் இசைத்து பிடித்த கட்கமும் வெட்சி மலர் பொன் பதத்து இரட்சணை - திருப்:1198/7

விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ - திருப்:1222/4

மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் - திருப்:1232/3

நெஞ்சு உருகி நெக்குநெக்கு நின்று தொழு நிர் குணத்தர் நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும் - திருப்:1234/3

வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே - திருப்:1257/4

அறப்பாவை அத்தற்கு அருள் பாலா அளித்தாது வெட்சி திரு மார்பா - திருப்:1329/1

விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையும் அணிவோனே - திருப்:1205/7

மாசுஇல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி - 3.இலை:3 37/3

வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து - 3.இலை:3 57/3,4
வெட்சி மொட்டுகள்
வெட்சி மொட்டுகள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *