Skip to content

சொல் பொருள்

இசை அறிவதொரு விலங்கு. (சீவக. 1402. நச்.)

சொல் பொருள் விளக்கம்

இசை அறிவதொரு விலங்கு. (சீவக. 1402. நச்.)

ஆங்கிலம்

a bird of tamil country that had sense of music, according to ancient tamil literatures.

பயன்பாடு

பாடல் 88; பாடியவர்:– ஈழத்துப் பூதந்தேவன்

இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் 10
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் – அகநானூறு 88

பொருள்:—“புலியைக் கொல்லும் பெரிய கை உடையது யானை. அதன் கன்னத்தில் இருந்து மத நீர் வடியும். அதில் வண்டின் கூட்டம் மொய்க்கும். அதன் ரீங்காரத்தை யாழின் ஒலி என்று கருதி பெரிய குகைகளில் உள்ள அசுணப் பறவைகள் உற்றுக் கேட்கும். அத்தகைய காட்டில் பாம்புகள் இறந்து போகும் படி கரடிகள் புற்றுகளைத் தோண்டும். என் காதலன் இப்படிப்பட்ட கஷ்டமான வழியில் சென்றானோ?”

நற்றிணை 244 குறிஞ்சி – கூற்றங்குமரனார்

விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இந் நோய்
தணியுமாறு இது என உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலின் கொடியை தோழி
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே

நற்றிணை 304 குறிஞ்சி – மாறோக்கத்து நப்பசலையார்

வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே பிரியின்
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்குமார் பசலை அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே

நான்மணிக்கடிகை பாடல் 2

பறை பட வாழா, அசுணமா; உள்ளம்
குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து
நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச்
சொல் பட்டால், சாவதாம் சால்பு.

(இ-ள்.) அசுணமா – கேகயப் பறவைகள், பறை பட வாழா – பறையின் ஓசை தஞ் செவியிற்பட்டால் உயிர்வாழ மாட்டா; உரவோர் – அறிவுடையோர், உள்ளம் குறைபட வாழார் – தமது பெருநிலை குறைபட்டால் உயிர்தாங்கமாட்டார், நிறை வனத்து – மரங்கள் நிறைந்த காட்டில், வெதிர் – மூங்கில்கள், நெல் பட்ட கண்ணே – நெல்லுண்டானபோதே, சாம் – பட்டுப் போகும்; சால்பு – நிறையுடைய சான்றோர், தனக்கு ஒவ்வாச் சொல்பட வாழாது – தமது நிறைவுக்குக் குறைவான இழிவுரைகள் உண்டானால் உயிர் வாழ மாட்டார்.

(க-து.) சான்றோர்கள் தமக்கு மானக்கேடு உண்டாகும்படி உயிர்வாழமாட்டார்.

(வி-ரை.) பறை – ஒருமுகக் கருவி. அசுணமா பறையோசை கேட்கின் இறந்துபடு மென்பதனை, ‘மறையிற்றன் யாழ் கேட்ட மானை யருளா, தறைகொன்று மற்றத னாருயிரெஞ்சப் பறையறைந்தாங்கு’ (26) என்னும் நெய்தற் கலியா னுணர்க. ‘உள்ள’ மென்றது ஈண்டு ஊக்கத்தை. ‘உள்ளத்தனைய துயர்வு’ (திருக்குறள், ஊக்கமுடைமை, 5) என்பதுங் காண்க. தமது ஊக்கங் குறையும்படி ஏதேனும் அலர்மொழி ஏற்படுமானால் உரவோர் உயிர் தாங்காரென்பது கருத்து. நெற்பட்ட கண் – கண் : வினையெச்ச விகுதி; ஈண்டு விகாரத்து இயல்பு. சாம் : ஈற்று மிசையுகரம் மெய்யொடுங் கெட்டது. பெரியோர் செயல் அவரியல்பின் மேலேற்றிச் ‘சால்பு வாழாதா’ மெனப்பட்டது: ஆம் : அசை. இச்செய்யுளிற் கூறப்பட்ட கருத்துக்கள் நான்கும் ஒன்றே யாயினும்; நூன்முறைமைபற்றி நாற்பொருளாய்க் கூறி விளக்கினார்; மேல்வருமிடங்களிலும் இங்ஙனங் கொள்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *