Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அல்லிவட்டம், அகவிதழ், 2. பூந்தாது, 3. பொகுட்டு, 4. ஆம்பல் மலர், 5. அல்லியரிசி,

சொல் பொருள் விளக்கம்

1. அல்லிவட்டம், அகவிதழ்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

inner flower petal, pollen, pericap of the lotus, water-lily, a kind of rice

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நாய் உடை முது நீர் கலித்த தாமரை
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய் – அகம் 16/1-3

நீர்நாய் உள்ள பழைய குளத்தில் செழித்து வளர்ந்த தாமரை
மலரின் அல்லிவட்டத்தில் உள்ள ஒளிவிடும் இதழைப் போன்ற
மாசற்ற உள்ளங்கையையும், பவளமணி போன்ற அழகிய வாயையும்

பெரு வளம் மலர அல்லி தீண்டி – அகம் 255/12

மிக்க செழுமையையுடைய மலர்களின் அகவிதழை அசைத்து

பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறுபட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் – அகம் 389/4,5

பல இதழ்களையுடைய புதிய மலர்களைக் கிள்ளி, அவ்விதழ்களுடன் நிறம் வேறுபட
நல்ல இளைய முலைகளில் அவ்வவற்றின் பொடிகளையும் அப்பியும்

மெல் இயல் மே வந்த சீறடி தாமரை
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல – கலி 13/11,12

மென்மையான தன்மை பொருந்திய சின்னஞ்சிறு காலடிகள் – தாமரை மலரின்
பொகுட்டைச் சூழ்ந்திருக்கும் அழகிய இதழ்கள் செவ்வரக்குப் பூசியதைப் போல் சிவந்தவை

மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம்
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும் – பரி 1/38,39

சிறுமையுடையன் என்று வெறுக்காமல், அல்லி மலரில் வீற்றிருக்கும் அழகிய
திருமகளாகிய மறுவினை மார்பில் கொண்டவனே! நீ எமக்குத் திருவருள் புரிய வேண்டும்.

அல்லியும் ஆம்பலும் ஒன்றே என அகராதிகள் குறிப்பிட்டாலும் அவை வெவேறானவை என்று பரிபாடல் கூறுகிறது.

மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம்
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை
எல்லாம் கமழும் இருசார் கரை – பரி 12/77-81

மல்லிகை, முல்லை, மணங்கமழும் சண்பகம்,
அல்லி, செங்கழுநீர், தாமரை, ஆம்பல்,
வெட்சி, மகிழம், குருக்கத்தி, பாதிரி,
நல்ல கொத்துக்களையுடைய நாகம், நறவம், சுரபுன்னை
ஆகிய எல்லாவகையான பூக்களும் கமழ்கின்ற இருபக்கக் கரைகளையும்

அல்லியரிசி எனப்படுவது ஆம்பல் மலரினின்றும் பெறப்படுவது என்பர்.
கணவனை இழந்த கைம்பெண்கள் இந்த உணவையே உண்டதாகச் சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.

சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழி கல மகளிர் போல – புறம் 280/12,13

சிறிய வெள்ளிய ஆம்பலிடத்து உண்டாகும் அல்லியரிசியை உண்ணும்
கழித்த அணிகலங்களையுடைய கைம்பெண்டிர் போல

பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே – புறம் 248/3-5

கூந்தல் கொய்து குறும் தொடு நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனியே
புல்லென்றனையால் – புறம் 250/4-6

என்ற அடிகளும் இதனை வலியுறுத்தும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *