சொல் பொருள்
(பெ) சங்க கால மகளிர் தம்முள் கைகோத்தாடும் கூத்துவகை
சொல் பொருள் விளக்கம்
சங்க கால மகளிர் தம்முள் கைகோத்தாடும் கூத்துவகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Dance in a circle prevalent among the women of sangam era
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குரவைக் கூத்தின்போது பறைகள் முழக்கப்படும். குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 196,197 குறிஞ்சி நில மக்கள் குரவைக் கூத்தாடுவர். குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 196,197 குறிஞ்சி மக்கள் முருகனை வழிபடும்போது, வேலன் வெறியாட்டின்போது இன்னிசை முழங்க, ஒருவரை ஒருவர் கைகளால் தழுவிக்கொண்டு ஆடுவர். அரும் கடி வேலன் முருகொடு வளைஇ அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை – மது 611 -615 அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு, அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி, கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண் புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து, மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் குரவையின்போது ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடுவர். திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு மான் தோல் சிறு பறை கறங்க கல்லென வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 318-322 திருத்தமாகச்செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்கு(நன்னனுக்கு) புதிய குடியிறையாக அமையும் என்று கள்ளை (அரசனுக்கு) நாள்செய்வதற்காகச் செய்த குறவர்கள் தம் பெண்களோடு 320 மான் தோலால் செய்யப்பட்ட சிறுபறையைச் சுழற்ற கல கல என்னும் ஓசையுடன், விண்ணைத் தொடும் மலையுச்சியில் வழிபாடுசெய்ய எழுப்பும் குலவை ஒலியும் நெய்தல் நில மக்களும் குரவை ஆடுவர். நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் – ஐங் 181/1-3 நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களையும், அழகாக இறங்கும் பருத்த தோள்களையும் உடையவரான மணல்வீடு கட்டி விளையாடிய, பொய்யுரையை அறியாத மகளிர் குவிந்திருக்கும் வெண்மையான மணலில் குரவைக் கூத்துக்காக நின்றுகொண்டிருக்கும் மருதநில மக்களும் குரவை ஆடுவர். மருதம் சான்ற மலர் தலை விளை வயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார் குறும் பல் யாணர் குரவை அயரும் – பதி 73/7-10 மருத வளம் அமைந்த விரிந்த இடத்தையுடைய விளைநிலங்களாகிய வயல்களுக்குள் நாரைகளை விரட்டும் மகளிர் இரவும் பகலும் தம் புத்தம்புதிய அணிகலன்களைக் கழற்றாதவராய் அருகருகே அமைந்துள்ள பல புதுப்புது இடங்களில் குரவைக் கூத்தினை ஆடி மகிழும், தலைவியின் காதல் நிறைவேறுவதற்காக அவளுடைய தோழிகள் குரவை ஆடுவர். அப்போது, தான் தலைவனுடன் சேர்வதற்காகக் கொண்டுநிலை என்ற பாடலைத் தலைவி பாடுவாள். தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர வரை உறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் கொண்டுநிலை பாடி காண் – கலி 39/27-30 தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே! நீயும் உன் காதலனும் ஒன்றுசேர்வதற்காக, மலையில் வாழும் தெய்வமான முருகன் மனம் மகிழ, மனமகிழ்ச்சியுடன் குரவைக் கூத்தைத் தழுவியவாறு நாங்கள் ஆட, அந்தக் குரவையில் கொண்டுநிலை என்ற தலைவன், தலைவி சேர்க்கைக்கான பாடலைப் பாடுவாயாக”, குரவைக் கூத்தாடுவோர் வட்டமாக நின்றுகொண்டு ஆடுவர். வட்டத்தின் நடுவில் இறுகிய ஈரமணலால் செய்த உருவத்தை வைத்திருப்பர். பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப வண்டல் பாவை உண்துறை தரீஇ திரு நுதல் மகளிர் குரவை அயரும் – அகம் 269/17-20 ஓசை பரந்து எழும் பெரிய இடத்து வட்டத்தையுடைய, ஊது கொம்பிலிருந்து எழும் தெளிந்த இசை ஒலிக்க வண்டல் விளையாட்டுக்குரிய பாவையை நீர் உண்ணும் துறையிலிருந்து கொண்டு வந்து வைத்து அழகிய நெற்றியையுடைய பெண்கள் குரவைக் கூத்தாடும். குரவை ஆடும் மகளிர் சிறிதளவு கள் அருந்தியிருப்பர். மரத்து நிழலிலும் குரவை ஆடுவர் தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர் காஞ்சி நீழல் குரவை அயரும் – அகம் 336/6-9 தெளிந்த கள்ளினைக் குடித்து, மகளிர் நுண்ணிய தொழில்நலம் வாய்ந்த அழகிய குடத்தை வைத்துவிட்டு, நற்பண்பில்லாத தலைவனின் பரத்தமையைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களையுடைய காஞ்சிமரத்தின் நிழலில் குரவை ஆடுவார்கள். போர்வீரர்கள் சினம் மிகுந்து பாசறையில் குரவை ஆடுவர். பொலம் தோட்டு பைம் தும்பை மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ சின மாந்தர் வெறி குரவை ஓத நீரின் பெயர்பு பொங்க – புறம் 22/20-23 பொன்னால் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடனே மேலே அசையும் தலையாட்டம் போன்ற பனையின் தோட்டைச் செருகி சினத்தியுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தின் ஒலி பொங்கி வரும் கடலின் ஒலியைப் போல கிளர்ந்து பொங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்